பாத்திமா காட்சிகள் - நம்ப மறுத்த நகராட்சி

பாத்திமா, கோவா தா ஈரியாவில், “எல்லோரும் நம்பும்படி” வான அதிசயம் நடந்தது.  போர்த்துக்கல் எங்கும் அது பற்றியே பேச்சு. வேத மறுப்பையே குறியாகக் கொண்ட பத்திரிகைள் உட்பட அக்காட்சிகள் பற்றியும், அதன் உண்மை பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டன.  பொதுவில் எல்லோரும் அதை நம்பினார்கள்.

ஆனால்!

அவ்ரம் நகராட்சி மன்றமும், நம்பிக்கையற்ற மனிதரும் ஒரு வாரத்திற்குள் விழித்துக் கொண்டார்கள்.  தாங்களே கண்ணால் கண்டவற்றைக் கூட மறுக்கத் தொடங்கி விட்டார்கள்!  என்னே மனித புத்தியின் தடுமாற்றம்!  என்னே அதன் தீய குணம்! 

சேசுநாதர் பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தார்; இறந்த லாசரை உயிர்ப்பித்தார்!  இவற்றையயல்லாம் மறுக்க முடியவில்லை. எனவே, “ஜனக் கூட்டமெல்லாம் இவன் பின்னால் போகிறதே!” என்று கசந்தவர்களாய் யூத தலைமைக் குருக்கள் சேசுவைக் கொலை செய்யத் திட்ட மிட்டு, அப்படியே செய்து முடித்தார்கள் அல்லவா?  சுவிசே­த்தில் அதை நாம் காண்கிறோம்.  

பாத்திமா காட்சிகளை மறுக்க முடியாமல் திணறிய வேத விரோதிகள் விழித்துக் கொண்டதும் அந்த யூத குருக்களைப் போலவே நடந்து கொண்டார்கள்.

சூரிய அதிசயம் நடைபெற்ற பத்தாம் நாள், 23.10.1917 அன்று இரவு அவர்களில் பலர் ஊர்திகளில் கோவா தா ஈரியாவுக்கு வந்தனர். கோடரி, அரிவாள்களுடன் காட்சி நடந்த இடத்திற்கு விரைந்தனர்.  அன்னை தரிசனமளித்த இடத்தில் எவ்வித அடையாளமும் இல்லாது அழித்து விட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். 

அங்கு நாட்டப் பட்டிருந்த ஒரு வளைவு.  அதில் கட்டப்பட்ட சில விளக்குகள், சிலுவைகள், ஒரு மேஜை, அதில் வைக்கப்பட்டிருந்த மாதா படம், பூக்கள், காணிக்கைகள் இவற்றையயல்லாம் சேர்த்து எடுத்துக் கொண்டனர். அன்னை தோன்றிய அஸின்ஹேரா மரம் அவர்களுக்கு அளவற்ற கோபத்தை மூட்டியது.  

கோடரிச் சத்தம் நாலைந்து தடவை கேட்டது. அத்துடன் அச்சிறு மரம் தரையில் உருண்டது.  அத்தனையையும் வாரிக் கொண்டு அக்கூட்டம் சான்றாரம் என்ற நகருக்குக் கொண்டு சென்றது. சான்றாரம் குருமடத்திற்கருகில் ஒரு இடத்தில் இவற்றை “மத்திய நூற்றாண்டுகளின் குருட்டு நம்பிக்கையைக் காட்டும் விசித்திரப் பொருள்களாக” காட்சிக்கு வைத்தது.  ஒரு சிறு  கட்டணமும் அதற்கு வசூலித்தது!

மறுநாள் மாலை இத்தனை பொருட்களையும் தெருக்களின் வழியே எல்லோரும் பார்த்துப் பரிகசிக்கும்படி தூக்கிச் சென்றனர்!  அந்த ஊர்வலத்தில் கொட்டும் மேளமும், தேவ நிந்தையான பல கோ­ங்களும் முழங்கின.

இது நடந்த மறுநாள் பத்திரிகைகளில் இச்செய்தி வெளியிடப் பட்டது. ஆயினும் “நூற்றாண்டு” பத்திரிகை இந்த நிந்தைகளை ஆதரிக்கவில்லை. ஆனால் வேறு பல வேத எதிர்ப்பாளர்கள் முழு வேகத்துடன் அன்னையின் தரிசனங்களையும் மக்களின் விசுவாசத்தையும் தாக்கினார்கள், ஏளனம் செய்தார்கள், எதிர்த்தார்கள்.

சான்றாரம் கத்தோலிக்கர்களில் கற்றோர் சிலர் இத்தாக்குதல் அநீதி என ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். இச்சிறு வெளியீட்டுக்கு மறுப்பு ஒன்றைப் பெரிதாக அச்சிட்டார்கள் எதிர்ப்பாளர்கள். அதில் மாதாவின் காட்சிகளை “வெட்கத்துக்குரிய நடிப்பு; கேவலமான பாத்திமா நகைச்சுவை நாடகம்!” என்று வர்ணித்திருந் தார்கள். 

அது மட்டுமல்ல.  மிக மிக தேவ நிந்தையான ஒரு காரியமும் அதில் கூறப்பட்டிருந்தது.  அதாவது, புதுமைகளும் இத்தகைய இயற்கை நியதிக்கு உட்படாத அதிசயங்களும், அவை இயற்கையின் சட்டத்துக்கு உட்படாமலிருப்பதால், தேச சட்டத்தை மீறுகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவது போல் இவ்வற்புதங்களும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட யாவரையும் பகிரங்க தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது!  

இது தேவனுக்கும்,  தேவ அன்னைக்கும் எத்தகைய  நிந்தை!

வேத விரோதிகள் கோவா தா ஈரியாவைச் சூறையாடி விட்டனர். அன்னை காலூன்றிய அஸின்ஹேரா மரத்தை வெட்டிச் சென்று விட்டனர் என்ற செய்தி தெரிந்ததும் மக்கள் அங்கு விரைந்தனர்.  மரியா கரேய்ரா என்ற பெண்மணி மிகவும் வேதனையுடன் அங்கு சென்றாள். 

அந்த இடம் வெறுமையாகக் காட்சியளித்தது!  வளைவு, மேஜை, விளக்குகள், சிலுவை ஒன்றையும் காணோம்! 

ஆனால் அன்னையின் பராமரிப்பு அந்த இடத்தில் இருக்கவே செய்தது. 

அவர்கள் வெட்டிச் சென்ற அஸின்ஹேரா மரம் அன்னை தோன்றிய மரமல்ல!  இனந்தெரியாமல் அவர்கள் அதற்குப் பக்கத்தில் நின்ற வேறு ஒரு அஸின்ஹேரா மரத்தையே வெட்டியிருந்தனர்!  மரியா நன்றிப் பெருமூச்சு விட்டாள்.