✠ சின்னக் குறிப்பிடம்.

முதல் பிரிவு : ஏக சர்வேசுரன் பேரில்

1. அனைத்திற்கும் ஆண்டவர் யார்?

சர்வேசுரன்


2. எத்தனை சர்வேசுரன்?

ஒரே சர்வேசுரன். (எல்லாவற்றையும் படைத்து காப்பாற்றும் எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த சர்வேசுரனாகும்)


3. அவர் தேவ சுபாவத்தில் ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையில் எப்படி இருக்கிறார்?

திரித்துவமாயிருக்கிறார்.


4. திரித்துவமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?

ஆள் வகையிலே மூவராயிருக்கிறாரென்று அர்த்தமாகும்.


5. இந்த மூன்றாட்களுக்கும் பெயரென்ன?

பிதா, சுதன், பரிசுத்த ஆவி


6. பிதா சர்வேசுரனா ?

சர்வேசுரன்


7. சுதன் சர்வேசுரனா ?

சர்வேசுரன்


8. பரிசுத்த ஆவி சர்வேசுரனா ?

சர்வேசுரன்


9. மூவரும் மூன்று சர்வேசுரனா?

இல்லை - ஒரே சர்வேசுரன்


10. எப்படி ஒரே சர்வேசுரன்?

இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம் ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.


11. இவர்களுக்குள்ளே வல்லபம், மகிமை, முதலான குணங்களில் வித்தியாசமுண்டோ?

இல்லை - மூவரும் எல்லாவற்றிலும் சரி சமானமாயிருக்கிறார்கள்.


12 இப்படி ஏகமும் திரித்துவமுமாகிய சர்வேசுரனுக்கு பிரதான குணங்கள் எத்தனை?

ஆறு


13 ஆறுஞ் சொல்லு.

1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்
2. துவக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்
3. சரீரமில்லாமல் இருக்கிறார்
4. அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிறார்
5. எங்கும் வியாபித்திருக்கிறார்
6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்


2-ம் பிரிவு : உலக சிருஷ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும்

14. சர்வேசுரன் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணமா யிருக்கிறதெப்படி?

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்து காப்பாற்றுகிறதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்.


15. சர்வேசுரன் படைத்தவைகளில் பிரதான வஸ்துக்கள் என்ன? முக்கியமானவை எவை?

சரீரமில்லாத சம்மனசுகளும், ஆத்துமமும் சரீரமும் உள்ள மனிதர்களும் தான்.


16. சம்மனசுகள் எல்லாரும் தாங்கள் மேன்மையான நிலையில் நிலை கொண்டார்களோ?

இல்லை - சிலர் ஆங்காரத்தினாலே மோட்சத்தை இழந்து நரக தண்டனைக்கு உள்ளானார்கள்.


17. இப்படி கெட்டுப்போன சம்மனசுகளின் பெயரென்ன?

பிசாசுக்கள்.


18. சர்வேசுரன் மனிதர்களை எதற்காகப் படைத்தார்?

தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்.


19. அவர் எந்த நிலையில் ஆதித் தாய் ஆதித்தகப்பனை உண்டாக்கினார்?

பரிசுத்தமும் பாக்கியமுமான நிலையில் உண்டாக்கினார்.


20. அவர்கள் அதை இழந்தது எப்படி?

பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியைத் தின்றதினாலே இழந்தார்கள்.


21. அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியாருக்கும் வந்த தேடென்ன?

பசாசுக்கு அடிமையாகி சாவு, நரகம், முதலிய தண்டனைகளுக்கு ஆளானார்கள்.


3-ம் பிரிவு : மனிதனுடைய இரட்சிப்பு


22. நம்மை இரட்சிப்பதற்காக மனிதானாய் பிறந்தது யார்?

தூய தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன் தான்.


23. அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாய் பிறந்தார்.


24. யாரிடத்தில் நின்று பிறந்தார்?

என்றும் கன்னிகையான அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயிடத்தில் நின்று பிறந்தார்.


25. அவர் பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?

இயேசு என்று பெயரிட்டார்கள்.


26. இயேசு என்ற பெயருக்கு அர்த்தமென்ன?

நம்மை இரட்சிக்கிறவர்.


27. ஆகையால் இயேசுக் கிறிஸ்துநாதர் யார்?

நம்மை இரட்சிப்பதற்காக மனிதராய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுரன்.


28. இயேசு நாதர் இவ்வுலகத்திலே எத்தனை வருடகாலம் இருந்தார்?

முப்பத்து மூன்று வருடகாலம் இருந்தார்.


29. இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டுவந்தார்?

எல்லா புண்ணியங்களையும், அற்புதங்களையும் செய்து தம்முடைய திவ்விய வேதத்தைப் போதித்து, அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.


30. இயேசுநாதருக்கு எத்தனை சுபாவம் உண்டு?

தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.


31. எந்த சுபாவத்தில் பாடுபட்டார்?

மனித சுபாவத்தில் பாடுபட்டார்.


32. யாருக்காகப் பாடுபட்டார்?

நமக்காகப் பாடுபட்டார்.


33. எப்படி பாடுபட்டார்?

போஞ்சுப்பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு கடினமான மரணத்தையடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.


34. அப்போது அவருடைய திரு ஆத்துமம் எங்கே போனது?

பாதாளங்களில் இறங்கி அங்கேயிருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது.


35. இயேசுநாதர் கல்லறையை விட்டு உயிர்த்து எழுந்தருளினாரோ?

ஆம். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருனார்.


36. உயிர்த்த பிற்பாடு பூலோகத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?

நாற்பது நாள் தங்கியிருந்தார்.


37. அந்த நாற்பது நாளும் என்ன செய்துகொண்டிருந்தார்?

அனேக தடவை தம்முடைய சீடர்களுக்குத் தம்மைக் காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் திடப்படுத்திக் கொண்டு வந்தார்.


38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?

பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்.


39. இப்போது இயேசுநாதர் எங்கே இருக்கிறார்?

எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனிதனும் என்ற நிலையில் பரலேகத்திலும், திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.


4-ம் பிரிவு: பரிசுத்த ஆவியின் ஆகமனமும் திருச்சபையும்


40. இயேசுநாதர் பரலேகத்துக்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன செய்தார்?

தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக பரிசுத்த ஆவியை அனுப்பினார்.


41. பரிசுத்த ஆவியை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

உலகத்தின் எத்திசையிலும் போதித்து திருச்சபையை பரப்பச் செய்தார்கள்


42. திருச்சபைக்கு தலைவராயிருக்கிறவர் யார்?

இயேசுநாதர் தான்


43. அவர் தமக்குப் பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை ஏற்படுத்தினார்?

புனித இராயப்பரை ஏற்படுத்தினார்


44. புனித இராயப்பருக்குப் பின் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?

பரிசுத்த பாப்பானவர்


45. மற்ற அப்போஸ்தலர்களுக்குப் பதிலாயிருக்கிறவர்கள் யார்?

ஆயர்கள்.


46. இயேசுநாதர் எத்தனை திருச்சபையை ஏற்படுத்தினார்?

கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஏற்படுத்தினார்


47. திருச்சபையின் சொற்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டோ?

இல்லை.


48. இல்லை என்பதற்கு சான்று என்ன?

திருச்சபையின் சொற்படி கேளாதவன் அஞ்ஞானியைப்போல்; உனக்கு ஆகக்கடவன் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.


5-ம் பிரிவு: மனிதனுடைய இறப்பு


49. பாவத்தினிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற கேடு என்ன?

சாவு


50. சாவுக்குப் பின் என்ன நடக்கும்?

தனித்தீர்வை.


51. தனித்தீர்வைக்குப் பின் சாவான பாவமுள்ள ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

நரகத்துக்குப் போகிறார்கள்


52. தங்கள் பாவங்களுக்கு முழுவதும் உத்தரியாத புண்ணிய ஆத்துமாக்கள் ஏங்கே போகிறார்கள்?

உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு போகிறார்கள்


53. உத்தரிக்கிற ஸ்தலத்திலே எப்படியிருக்கிறார்கள்?

தங்கள் பாவங்களுக்குத் தக்க வேதனைப்பட்டு உத்தரிக்கிறார்கள். முழுவதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.


54. தனித்தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

பொதுத் தீர்வை உண்டு


55. பொதுத்தீர்வை எப்போது நடக்கும்?

உலக முடிவிலே நடக்கும்


56. உலகம் எப்படி முடியும்?

உலகமெல்லாம் நெருப்பினாலே வேக, மனிதர்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்


57. பிறகு என்ன நடக்கும்?

இயேசு நாதர் மனிதர் எல்லாரையும் ஆத்தும சரீரத்தோடுகூட எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு நடுத்தீர்க்க வருவார்.


58. எப்படி நடுத்தீர்ப்பார்?

அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறியப்பண்ணி பாவிகளைச் சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசீர்வதித்து மோட்சத்துக்கு கூட்டிச் கொண்டுபோவார்.


59. பாவிகள் நரகத்திலே படுகிற தண்டனை என்ன?

சர்வேசுரனை ஒருபோதும் காணாமல் எக்காலமும் பசாசுக்களோடே நெருப்பிலே வெந்து எல்லா தண்டனைகளையும் அனுபவிக்கிறார்கள்.


60. நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?

சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதைக்கும் எல்லா பேரின்பப் பாக்கியங்களையும் அனுபவிக்கிறார்கள்.


6-ம் பிரிவு : கட்டளைகளும், பாவமும், புண்ணியமும்


61. மோட்சத்தை அடைவதற்கு செய்யவேண்டியதென்ன?

மேற் சொன்ன வேத சத்தியங்களை விசுவசித்து சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்துப் பாவத்தை தள்ளி, புண்ணியத்தை செய்யவும் வேண்டியது.


62. சர்வேசுரனுடைய கற்கனைகள் எத்தனை?

பத்து.


63. பத்தும் சொல்லு.

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து!

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்hயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.


64. திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?

ஆறு.


65. ஆறுஞ்சொல்லு.

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுபூசை காண்கிறது
2. வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கா காலத்தில் பாவசங்கீர்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறது.
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கனமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது
6 .நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.


66. பாவம் ஆகிறதென்ன?

தேவ கட்டளைகளை மீறுகிறது பாவம்.


67. எத்தனை வகைப் பாவங்கள் உண்டு?

ஜென்மப் பாவம், கர்மப் பாவம் ஆகிய இரண்டுவகைப் பாவங்கள் உண்டு


68. ஜென்பப் பாவம் ஆகிறதென்ன?

ஆதித்தாய் ஆதித் தகப்பனால் உண்டாகி நம்மோடு கூடப்பிறக்கிற பாவம்.


69. கர்மப் பாவம் ஆகிறதென்ன?

அவரவர் புத்தி விபரம் அறிந்த பிற்பாடு மனம் பொருந்தி செய்கின்ற பாவம்.


70. கர்மப் பாவம் எத்தனை வகையுண்டு?

சாவான பாவம், அற்பப் பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.


71.சாவான பாவம் ஆவதென்ன?

வேத இஷ்டப்பிரசாதத்ததைப் போக்கடித்து நம்மை நரகத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகிற பாவம்.


72. அற்பப் பாவம் ஆவதென்ன?

நம்மில் தேவ சிநேகத்தைக் குறைத்து சாவான பாவத்திற்கு வழியுமாகி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகின்ற பாவம்.


73. தலையான பாவங்கள் எத்தனை?

ஏழு.


74. ஏழுஞ் சொல்லு.

1. அகங்காரம்,
2. கோபம்,
3. மோகம்,
4. லோபித்தனம்,
5. போசனப்பிரியம்,
6. காய்மகாரம்,
7. சோம்பல்


75. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?

விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியவைகளாகும்.


76. தலையான பாவங்களுக்கு எதிரிடையான புண்ணியங்கள் எவை?

1. தாழ்ச்சி,
2. பொறுமை,
3. கற்பு,
4. உதாரம்,
5. மட்டசனம்
6. பிறர் சிநேகம்,
7. சுறுசுறுப்பு


7-ம் பிரிவு: தேவ வரப்பிரசாதமும், செபமும், தேவ திரவிய அனுமானங்களும்:


77. பாவத்தை விலக்கி மோட்சத்தை அடைவதற்கு நம்முடைய சொந்த பலன் போதுமா?

போதாது. நமக்கு தேவ வரப்பிரசாதத்தின் உதவி வேண்டியது


78. தேவ வரப்பிரசாதம் எத்தனை வகை உண்டு?

தேவ இஷ்டப்பிரசாதம், உதவி வரப்பிரசாதம் ஆகிய இரண்டு வகை உண்டு.


79. தேவ வரப்பிரசாதங்களை அடைவதெப்படி?

செபத்தினாலும், தேவ திரவிய அனுமானங்களாலும் அடையலாம்.


80. அடிக்கடி செபம் செய்ய வேண்டுமா?

வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார்.


81. தேவ திரவிய அனுமானங்கள் எத்தனை?

ஏழு.


82. ஏழுஞ் சொல்லு.

1. ஞானஸ்நானம்
2. உறுதிப் பூசுதல்
3. நற்கருணை
4. பச்சாத்தாபம் (பாவ சங்கீர்த்தனம்)
5. மெய்விவாகம்
6. குருத்துவம்
7. அவஸ்தைப் பூசுதல்


83. ஞானஸ்நானம் ஆவதென்ன?

சென்மப் பாவத்தையும் கர்மப் பாவத்தையும் போக்கி, நம்மை சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற தேவதிரவிய அனுமானம்.


84. உறுதிப் பூசுதல் ஆவதென்ன?

நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியையும் அவருடைய வரப்பிரசாதங்களையும் நமக்குக் கொடுக்கிற தேவதிரவிய அனுமானம்.


85. நற்கருணை ஆவதென்ன?

கோதுமை அப்பத்தின் குணங்களிலும், திராட்சை பழஇரசத்தின் குணங்களிலும் இயேசுநாதருடைய திருச்சரீரமும், திரு இரத்தமும், திரு ஆத்துமமும் தேவசுபாவமும் அடங்கியிருக்கிற தேவதிரவிய அனுமானம்.


86. பத்சாத்தாபம் ஆவதென்ன?

ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு செய்த பாவங்களையெல்லாம் போக்குகிற தேவதிரவிய அனுமானம்.


87. அவஸ்தைப் பூசுதல் ஆவதென்ன?

வியாதிக்காரரிடத்தில் மிகுதியாகிய பாவங்களுக்கு பரிகாரமாகவும் அவர்களுடைய ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் ஆறுதலாகவும், உண்டாக்கப்பட்ட தேவதிரவிய அனுமானம்.


88. குருத்துவம் ஆவதென்ன?

திவ்விய பூசை செய்யவும், தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், சுதந்திரம் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.


89. மெய் விவாகம் ஆவதென்ன?

சமுசாரி, ஆகிறவர்களுக்கு தேவ ஆசீர்வாதத்தையும், அவர்கள் தர்ம வழியாய் நடக்கவும், தங்கள் பிள்ளைகளைத் தக்க பிரகாரமாக நடப்பிக்கவும் வேண்டிய தேவ சகாயத்தையும் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.


ஞானஸ்நான விபரம்:

1வது: திருச்சபை ஞானஸ்நானம் கொடுக்கிற கருத்தோட நானும் கொடுக்கிறேனென்று மனதில் நினைத்துக் கொள்கிறது.

2வது: பிள்ளைக்கு இடவேண்டிய பெயரை உச்சரித்து அதன் தலையில் தண்ணீர் வார்க்கிறபோது தான்தானே சொல்ல வேண்டியது: பிதாவுடையவும், சுதனுடையவும், பரிசுத்த ஆவியுடையவும் நாமத்தினாலே, நான் உன்னைக் கழுவுகிறேன்.


90. அவஸ்தை சமயத்தில் யாராகிலும் ஞானஸ்நானம் கொடுக்கலாமா?

அப்படிப்பட்ட சமயத்தில் யாராகிலும் கொடுக்க வேண்டியதுதான்.


91. உறுதிப் பூசுதலால் நாம் பெறும் பரிசுத்த ஆவியின் வரப்பிரசாதங்கள் எத்தனை?

ஏழு.


92. ஏழுஞ் சொல்லு.

1.ஞானம், 
2.புத்தி, 
3.அறிவு, 
4.விமரிசை, 
5.திடம், 
6.பக்தி, 
7.தெய்வபயம்


திவ்விய நற்கருணையின் விபரம்:


93. திவ்விய நற்கருணையிலே எழுந்தருளியிருக்கிறவர் யார்?

இயேசுநாதர்


94. அதிலே எப்படி எழுந்தருளியிருக்கிறார்?

தம்முடைய திருச்சரீரத்தோடும், இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறார்.


95. ஆகையால் நற்கருணை வாங்குறபோது என்ன வாங்குகிறோம்?

நம்முடைய திவ்விய கர்த்தராகிய இயேசுநாதருடைய திருச் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தேவ சுபாவத்தையும்தானே வாங்குகிறோம்.


96. அதிலே அப்பம் கொஞ்சமாவது உண்டோ?

அப்பத்தின் உருவம், ருசி, நிறம் முதலான குணங்கள் இருந்தாலும், அப்பம் இல்லை.


97. அப்பம் என்னமாய் மாறிற்று?

இயேசுநாதருடைய திருச் சரீரமாக மாறிற்று.


98. தேவ நற்கருணை வாங்குவதற்கு எத்தனை வகை ஆயத்தம் வேண்டியது?

ஆத்தும ஆயத்தம், சரீர ஆயத்தம் ஆகிய இரண்டு வகை ஆயத்தம் வேண்டியது.


99. ஆத்தும ஆயத்தம் ஆவதென்ன?

ஆத்துமம் சாவான பாவமில்லாமல் பரிசுத்தமாய் இருக்க வேண்டியது.


100. சரீர ஆயத்தம் ஆவதென்ன?

திவ்விய நன்மை வாங்குவதற்கு முன் ஒருமணி நேரம் கடினமான பதார்த்தம் ஒன்றும் சாப்பிடாமலும், தண்ணீரைத் தவிர வேறு எந்த பானங்களையும் அருந்தாமலும் உபவாசமிருக்கவேண்டியது. (பாயும் படுக்கையுமில்லா நோயாளிகள் கூட போதையில்லா பானங்களையும், நீரான அல்லது கடினமாக உண்மை மருந்துகளையும் திவ்விய நன்மை வாங்குமுன் எவ்வித காலவரையில்லாமல் உட்கொள்ளளாம்).


101. திவ்விய பூசை ஒப்புக்கொடுப்பதற்கான பிரதான கருத்துக்கள் எவை?

1.தேவ ஆராதனை, 
2.நன்றியறிந்த தோத்திரம், 
3. பாவப் பரிகாரம், 
ஆகிய இவைகளாம்.


102. பாவசங்கீர்த்தனம் பண்ண எத்தனை காரியம் செய்யவேண்டும்?

ஐந்து.


103. அந்த ஐந்து காரியமும் சொல்லு.

1-வது தான் செய்த பாவங்களை நினைத்துப்பார்க்கிறது.
2-வது தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவது.
3-வது இனிமேல் ஒருபொழுதும் ஒரு பாவத்தையும் செய்வதில்லையென்று உறுதியான மனதோடே பிரதிக்கினை பண்ணுகிறது.
4-வது தன் பாவங்களை ஒன்றும் ஒளியாமல் குருவுடனே சொல்லுகிறது.
5-வது குரு கட்டளையிட்ட அபராதத்தை தீர்க்கிறது


அவஸ்தை பூசுதலின் விபரம்:

104. அவஸ்தைப் பூசுதல் பெற வேண்டியது யார்?

கடின வியாதிக்காரர் பெறவேண்டும். ஆனால் மரண நேரம் மட்டும் காத்திருக்கலாகாது.


மெய் விவாகக்தின் விபரம்:

105. மெய் விவாகத்துக்கு பிரதான விக்கினங்கள் எவை?

நெருங்கிய இரத்த உறவு, இரண்டாங்கால் மட்டும் கலியாண சம்பந்தம், ஞான உறவு, குறைந்த வயது, இதர மதம் இவைகளாகும்


106. திருச்சபை உத்தரவில்லாமல் தாலிகட்டி கலியாணம் செய்தால் மெய்விவாகம் ஆகுமா?

இல்லை. இப்பேர்பட்ட கலியாணம் வெறும் தாறுமாறு ஆகுமே ஒழிய மெய்விவாகம் ஆகாது.


Imprimatur:
Most Rev. Arockiasamy
Bishop of Kottar
Nagarcoil
30.05.1972