பாவசங்கீர்த்தன மந்திரம்

சர்வத்திற்கும் வல்ல சர்வேசுரனுடனேயும், எப்பொழுதும் கன்னியாயிருக்கிற முத்திப்பேறுபெற்ற மரியாயுடனேயும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலுடனேயும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பருடனேயும், அப்போஸ்தலர்களாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடனேயும் சின்னப்பருடனேயும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும் (எனக்குக் குருவாயிருக்கிற உம்முடனேயும்) பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ளுகிறேன்; அதேனென்றால், என் சிந்தனையினாலேயும், வாக்கினாலேயும், கிரியையினாலேயும் மகா பாவங்களைச் செய்தேனே, என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே ஆகையால் எப்பொழுதும் கன்னியாயிருக்கிற முத்திப்பேறுபெற்ற மரியாயையும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலையும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பரையும், அப்போஸ்தலர்களாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பரையும் சின்னப்பரையும் சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் (எனக்குக் குருவாயிருக்கிற உம்மையும்) நம்முடைய கர்த்தராகிய சர்வேசுரனிடத்திலே எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆமென்.

நன்றியறிந்த தோத்திரம்

சர்வேசுரா சுவாமீ, என்னை ஒன்றுமில்லாதிருக்கையிலே மனுஷனாக உண்டாக்கினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

நான் செய்த பாவங்களினாலே நரகத்திற்குப் போகக் கடன் உண்டாயிற்றே, அந்தக் கடனை என்னால் உத்தரிக்கக் கூடாதென்று தேவரீர் மனுஷனாகப் பிறந்து பாடுபட்டு உத்தரித்தீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

அந்தப் புண்ணிய பலன்களை எல்லாம் ஞானஸ்நான முகாந்தரமாக எனக்குத் தந்தருளினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. -

நான் ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு அநேக முறை பாவங் களைச் செய்தேனே, அந்தப் பாவங்களை எல்லாம் பாவசங்கீர்த்தன முகாந்தரமாகப் பொறுத்து என்னை நரகத்திலே தள்ளாமல் மோட்சத்திற்குப் போகிற வழியில் நடத்திக்கொண்டிருக்கிறீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

நீர் இன்றெனக்கு எண்ணிறந்த உபகாரங்களைச் செய்த தல்லாமலும் பசாசு எனக்கு நினைத்திருந்த அநேக பொல்லாப்பு களை விலக்கினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது.

நான் இன்று செய்த பாவங்கள் எல்லாம் என் நினைவிலே வரவும், அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய உதவியை கட்டளை செய்தருளும் சுவாமீ.

போன ஆத்தும் சோதனை தொடங்கி இந்நேரமட்டும் சிந்தனை வாக்குக் கிரியையினாலே செய்த பாவங்களை எல்லாம் பத்துக் கற்பனைப் பிரகாரமாக நினைத்துக் கொள்ளத்தக்கதாகப் பத்துக் கற்பனையும் திருச்சபை கட்டளையும் சொல்லி ஆத்தும் சோதனை செய்து பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லவும்.

இராச் செபம்

Veni Sancte Spiritus

+ இஸ்பிரீத்துசாந்துவின் மந்திரம்

இஸ்பிரீத்துசாந்து வே, தேவரீர் எழுந்தருளி வாரும், பரலோகத்தினின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக் கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளிவாரும், உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தினரே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, களைப்பில் சுகமே, வெய்யிலிற் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச் செய்யும். குளிரோடிருக்கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம் விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

வேலை செய்கிறபொழுது

ஆண்டவரே, நாங்கள் செய்கிற கிரிகைகளுக்குத் தேவரீர் ஆசீர்வாதம் தந்தருளி உம்முடைய அனுக்கிரகத்தினாலே எங்களை நடப்பிக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். அப்படியே எங்கள் சகல காரியங்களும் உம்மாலே துவக்கவும் முடிக்கவும் படக்கடவது. ஆமென். 

யாதொரு வேலை ஆரம்பிக்கிறபொழுது

சர்வேசுரா சுவாமீ, தேவரீருடைய திருநாமத்திற்குப் புகழ்ச்சி உண்டாகும்படிக்குத் துவக்கின இந்த வேலையை முடிவுமட்டும் சேசு நாதருடைய புண்ணியங்களோடே உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.

யாதொரு வேலையை செய்யும்பொழுதும் அடிக்கடி சுவாமியை நினைக்கக்கடவாய்.

பிரயாணத்திற்கு அல்லது வீட்டிலேயிருந்து புறப்படுகிறபொழுது

என் ஆண்டவரே, அடியேன் வீட்டிலே நின்று புறப்படுகிற இந்தப் பிரயாணத்தில் (அலுவலில்) சகல ஆபத்துகளினின்று என்னைத் தற்காத்து உமது அடைக்கலத்திற்குள் வாசமாயிருக்கச் செய்து, நினைத்த நற்காரியத்தைச் சுலபமாக்கி மோட்ச வழி தவறாமல் நடக்கத்தக்கதாகக் கிருபை செய்தருளும். ஆமென்.