திருமணி தியான ஆராதனை.'நான் தாகமாயிருக்கிறேன்' என்று உரைத்த நமது இனிய இரட்சகர் நான் சிலுவையில் அனுபவிக்கும் சொல்லிலடங்காத வாதைகளால், இளைப்பு தவிப்பும் அதிகரித்துச் சர்வாங்கமும் காந்தலாகி, தொண்டையும் நாவும் வெகுவாய் வரண்டு தவிக்கிறதை நீங்கள் சற்றேனும் நினைப்பதில்லை.

திருமணி ஆராதனைக்கு முன் சொல்லத்தகும் செபம்.


இனிய இரட்சகரே! உமது பாடுகளைத் தியானிக்க என் புத்திக்குப் பிரகாசத்தை அளித்தருளும். உலக சுக செல்வ ஆசைகளால் நிறைந்திருக்கும் என் இருதயத்தை பரிசுத்தப் படுத்தியருளும். நான் இந்த ஒரு மணி நேரத்திலும் உம்மோடு சம்பாஷிக்கத்தக்கதான நல்ல மனதையும் சரியான கவனத்தையும், பயபக்தியையும் தந்தருளும். ஆண்டவரே! நீர் , பூங்காவனத்தில் என்ன கருத்தோடு தேவனை வேண்டிக்கொண்டீரோ அந்த கருத்தோடு நான் உமக்கு இந்த ஜெபத்தை ஒப்புக்கொடுக்கிறேன்.

தியானம்

அப்போது கல்வாரியின் உச்சியில் சேசுநாதர் சிலுவை சுமந்தவராய் வந்து சேர்ந்தவுடனே, அவர் உடலிலிருந்த தொய்வும், இளைப்பும், வேதனை விசனமும், ஏக்கமும் துயரமும் அதிகரித்து பிராணன் நீடிக்கிறதாயிருக்கவில்லையென்று அந்த துஷ்ட யூதர்கள் கண்டு உயிர் அடங்குமுன்னே கொடூரமாய்ச் சிலுவையில் அவரை அறைய வேண்டுமென ஆயத்தப்பட்டார்கள். ஆகவே அவரணிந்திருந்த துனிக்காவென்கிற தையலில்லாத சட்டையை கழற்ற, சட்டையோடு சதையும், தோலும், இரத்தமும் ஒன்றாய்க் கழன்று வந்தது. அவருடைய திருமேனி இரத்த மயமாகவே காணப்பட்டது.

இந்த மேரையாய் சேசுநாதரை சிலுவை மரத்திற் கிடத்தினதின் பின், அந்த துஷ்டக் கொலைக்காரர் அவருடைய கை கால்களை பிடித்து அந்த மரத்தில் துளைத்திருந்த துளைகளுக்கு நேராக்கி, சாண் நீளமும், அங்குலப் பருமனுமான இருப்பாணிகளை எடுத்து அவரது திருக்கை கால்களின் மீது வைத்து சுத்தியலால் அடிக்கத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட அடிகளால் திருக் கை கால்கள் நொறுக்கப்பட்டு அந்தக் கனமான ஆணிகள் சதைக்குள் ஊடுருவினதால் நரம்புகள் அறுந்து விரற் பொருத்துகள் பிசகிப்போயின. அவரது எலும்புகள் ஒவ்வொன்றாய் எண்ணக்கூடியாதாயிருந்தது.

இந்தப் பிரகாரமாய் ஆண்டவரைச் சிலுவையில் அறைந்ததின் பின், சேசு நசரேயன் யூதர்களுடைய இராசாவென்கிற பட்டையம் பிலாத்துவின் கட்டளையால் அந்தச் சிலுவையின் உச்சியிலே அறையப்பட்டது. இதல்லாமல் அவருடைய நிபந்தனை அதிகப்படத்தக்கதாக இரண்டு கள்ளரை அவரது இரு புறத்திலேயும் இரண்டு சிலுவை மரத்தில் அறைந்து நாட்டி வைத்தார்கள். இப்படி சேசுநாதர் துக்கத்தில் அமிழ்ந்திருக்கையில் சிலுவையிலிருந்து திருவாய் திறந்து மனுஷருக்கு உபகாரமாக சில வாக்கியங்கள் உரைத்த பின்னர், ஐந்தாம் வசனமாக "நான் "தாகமாயிருக்கிறேன்" என்றார்.

நேச சகோதரரே, நமது ஆண்டவர் கல்வாரியில், சிலுவை மரத்தில் இரு கள்வருக்கு நடுவில் முகம் அயர்ந்து மூவாணிகளில் தொங்கிக் கொண்டிருப்பதால் தாகமிகுதி யாயிருப்பதாகவும், அவருடைய திருச்சிலுவை அடியில் நின்று யூதர்கள் அவரை நோக்கி நானாவித வைராக்கிய நிந்தை தூஷணஞ் சொல்லுவதாகவும் உரூபிகரித்து கொள்வோம்.

நான் தாகமாயிருக்கிறேன் என்று உரைத்த நமது இனிய இரட்சகர், இதோ சற்பிரசாதம் நாதராய் நமது பீடத்தின் திருப்பேழையில் வீற்றிருக்கிறார். தம்மைத்தாமே சிறிய அப்பத் துண்டின் சாயலினுள் மறைத்து வைத்திருக்கும் நேசராகிய நமது இனிய இரட்சகரை உற்றுப்பார். தேவநற்கருணையில் வாசஞ் செய்யும் தெய்வீக நாதரை வாழ்த்தி வணங்கக்கடவாய் நமது மீதுள்ள அணை கடந்த அன்பின் மிகுதியாலே அவர் இங்கு வசிக்கிறார். விண்ணுலகில் அவர் திருச்சித்தத்தை நிறைவேற்ற இருக்கும் எண்ணிலடங்காத சம்மனசுக்களின் ஆராத னையைவிட மண்ணவருடைய ஆராதனையை ஆசிக்கிறவராய் அவர் நமது பீடங்களில் வாசஞ் செய்கிறார்.

அகக்கண்ணால் அவரை ஆழ்ந்து நோக்குவோம். கல்வாரியில் தாம் சுமந்த பாரமான சிலுவையின் கனத்தால் வேதனை யாகி, சர்வாங்கமும் பட்ட அடிகளால் வருந்தி சிலுவையில் 'நான் தாகமாயிருக்கிறேன்' என்றுரைத்த வசனத்தை நமக்குத் திரும்பவும் சொல்ல வருகிறார். நமது ஆத்துமமே அவர் தேடும் அழகான ஜெபக்கூடம், நம்மீது கொண்ட அளவில்லாத அன்பின் பெருக்கத்தையும் சிலுவையில் தாம் அனுபவித்த சொல்லிலடங்காத துக்கத்தின் மிகுதியால் உண்டான தாகத்தையும் தெரியப்படுத்த விரும்புகிறார்.

உலகமே சதமென்று எண்ணியிருக்கும் நீங்கள் இவ்வுலக ஆசைகளை மனதிலிருந்து மாற்றி, உங்கள் இருதயங்களினுள் புகுந்து அங்கே இம்மணி நேரத்தில் பேசும் இனிய சேசுவின் மொழிகளுக்கு காது கொடுப்பீர்களாக. நீண்ட சிலுவையில் அறையப்பட்டு, நீச யூதர்களால் நிஷ்டூரமாய் அடிக்கப்பட்டு, சர்வாங்கமும் இரத்தமயமாகி தாகமாயிருக்கும் சேசுவைப்பற்றி தியானிக்கக்கடவீர்களாக.

சினேகத்தால் உண்டாகும் பரிகார முயற்சி யையும், ஆறுதலையுமே தம் நேசர்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கிறார்.

நேச சேசுவே! இம்மணி நேரத்தில் எங்களை உமது திருக்காயங்களுள் மறைத்துக் கொள்ளும். அப்போது நாங்கள் உலக கவலைகளிலிருந்து விலகி உம்மைத் தியானிக்க ஏதுவாயிருக்கும், அவைகளை விட்டு எங்களை பிரியவிடாதேயும். ஏனெனில் அங்கு தான் தேவசிநேகமும், மோட்சானந்தமும் நிறைந்திருக்கிறது.

(இம்மணி நேரத்தில் அடைய விரும்பும் விசேஷ வரப்பிரசாதத்தை அவரிடம் கேள்) 

சேசுநாதர் : 
என் நேச மக்களே, உலகத்தில் எங்கு பார்த்தாலும் பாவவெள்ளம் கரை புரண்டு ஆறாய் ஓடுகிறதைக் காண்கிறேன். பாவங்களைச் செய்து மனிதர்கள் என்னைத் தாகப்படுத்தும் போது நீங்களாவது உங்கள் இருதயங்களை எனக்கு தாகந்தீர்க்கும் ஊறணியாகத் தாருங்கள். சிலுவையில் அறையப்பட்டு, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நின்று நாவறண்டு தாகமாய் இருக்கிறேன். ஆனால் மனிதர்கள் திரும்பவும்

பாவங்களைச் செய்து என் தாகத்தை அதிகரிக்கிறார்கள். இதை நீங்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல் இருப்பது முறையோ?

நான் சிலுவையில் அனுபவிக்கும் சொல்லிலடங்காத வாதைகளால், இளைப்பு தவிப்பும் அதிகரித்துச் சர்வாங்கமும் காந்தலாகி தொண்டையும் நாவும் வறண்டு தவிக்கிறதை நீங்கள் சற்றேனும் நினைப்பதில்லை என் தாகத்திற்குப் புளித்த காடியை குடிக்க கொடுக்கிறீர்கள் என் சரீரம் முழுவதும் இரத்த ஆறாய் காண்கிறது. பாவாக்கிரமம் எனக்குத் தீராய்த்துயரைத் தருகிறது உங்கள் இரட்சணியத்தின் நிமித்தமாக நான் கல்வாரியில் அனுபவித்த தாகத்தின் பேறு பலன்களை வீணாக்க சாத்தான் செய்யும் பிரயத்தனங்களின் பலனாய் பூவிலெங்கும் பாவம் மலிந்திருப்பதை பார்க்கிறேன். பாவமானது எனது சிலுவை மரணத்தால் மீட்க்கப்பட்ட ஆத்துமங்களை சேதமாக்க முயற்சிக்கிறது என் மக்களே ஏதுகாரியத்தில் உங்களை மனநோகச் செய்தேன்! ஏன் என் மட்டில் இவ்வளவு சிநேகமற்று நடக்கிறீர்கள்?

பாவத்திலிருந்து மீட்பதற்காக நான் தாகமாகி என்னை முழுவதும் உங்களுக்காக கையளித்தும், திவ்விய நற்கருணையை ஏற்படுத்தி உங்களோடு என்றும் வாசஞ்செய்தும், இந்த எனது நேசத்திற்கு பதில் சினேகம் எனக்கு கிடைத்தபாடில்லையே! மனிதர் என்னைப் புறக்கணிப்பதோடு என்னை முற்றிலும் வெறுக்கிறார்கள், மேலும் பாவமா னது ஒவ்வொரு இருதயத்தினுள்ளும் நுழைந்து, என் மட்டில் அவர்களுக்குள்ள அற்ப சிநேகத்தையும், மரியாதை வணக்கத்தையும் இல்லாமலாக்கத் துணிகிறது.

என் நேசர்களே! நான் அனுபவிக்கும் துக்க துயரங்களிலிருந்து என்னைக் காத்துக் கொள்ள வாருங்கள். மானிட பாவத்தால் இளைத்துக் களைத்து தாகமாயிருக்கும் நான் தாகந்தீர்க்க உங்கள் இருதய ஊறணியை தயார் செய்யுங்கள். எனது சிலுவையையும் அதில் எனக்குண்டான தாகத்தையும் நினைத்து என்னை அனுதாபத் தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். கல்வாரியில் நான் பட்ட சரீரபாடுகளை விடவும் உங்கள் பாவங்களால் அதிகம் கஸ்தியடைகிறேன். எத்தனையோ பேர் பாவம் செய்யும்போது என்னைத் துன்புறுத்துகிறார்கள் என்றறிந்தும் திரும்பவும் பல்லாயிரம் முறை எனது இருதயத்தை ஊடுருவும் பாவங்களைக் கட்டிக்கொள்ளுகிறார்கள். ஐயோ! நேச சகோதரரே! கொடூர வாதைகளால் களைத்து தாகமாயிருக்கும் உங்கள் இரட்சகருக்கு தங்கியிருந்து தாகந்தீர்க்க உங்கள் இருதயத்தில் ஒர் இருப்பிடம் தந்துதவுங்கள்.

(சற்று தியானித்தல்) 

ஆத்துமங்கள் :
ஆத்துமாக்களின் அன்பரே! எங்கள் பரிகார ஆராதனையால் ஆறுதலடைவீர். இம் மணி நேரத்தில் நாங்கள் உம்மோடு சம்பாஷிக்க இரக்கங்காண்பித்த தேவனாகிய உமக்கு மன உருக்கத்தோடு ஆராதனை செய்வோம். ஊதாரிப்பிள்ளையை ஏற்றுக் கொண்ட நல்ல தகப்பனைப்போல எங்களை ஏற்றுக்கொள்ளும்.

அன்புள்ள அதிபரே! எழுந்தருளி வாரும் அநேகந் தடவைகளில் நாங்கள் கட்டிக்கொண்ட பாவங்கள் உமக்கு தீராத் தாகத்தை வருவித்தது. ஆனால் ஆண்டவரே, எங்களால் உமக்கேற்பட்ட நிந்தை அவமானங்களுக்கும், கொடிய தாகத்திற்கும் நாங்கள் இயன்ற மட்டும் நிந்தை பரிகாரம் ஆறுதலளிப்போம். எமக்காக இங்கு சிறைவாசஞ் செய்யும் நல்ல தகப்பனே, சிறையின் கதவுகளைத் திறந்தருளும். இனிமேல் உமக்கு பிரமாணிக்கமாய் நடக்கவும் உம்மை என்றென்றும் இடைவிடாது ஆராதிக்கும் கணக்கிலடங்காத வானதூதர்களோடு கூடி, இனிய இரட்சகரே! இனி உமக்காறுதலளிப்போம்' என்று மன்றாடவும் ஆசிக்கிறோம்.

சிலுவையிலிருந்து நான் தாகமாயிருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளின உமக்கு திரும்பவும் எங்கள் பாவங்களால் தாகம் ஏற்பட்ட போதிலும், இனிய இரட்சகரே! இனி உமக்காறுதளிப்போம். 

எங்கள் பாவ பழக்க வழக்கங்களால் மாசற்ற செம்மறி புருவை யாகிய உமக்கு மனக்கசப்பும் தாகமேற்பட்ட போதிலும், இனிய இரட்சகரே! இனி உமக்காறுதலளிப்போம். 

எங்கள் இரட்சணியத்திற்காக சற் பிரசாத நாதராய் நற்கருணையில் வீற்றிருக்கும் நாதராய் உமக்கு எங்கள் நிந்தை அவமானங்களால் தாகமேற்பட்ட போதிலும், இனிய இரட்சகரே! இனி உமக்காறுதலளிப்போம். 

தேவனின் ஆலயமாகும் உமதாலயத்தில் நாங்கள் காண்பித்து வரும் வணக்க குறைச்சலாலும் அவசங் கையாலும் தாகமேற்பட்ட போதிலும், துணைவர் : இனிய இரட்சகரே! இனி உமக்காறுதலளிப்போம் 

தேவ நற்கருணையை தக்க விதமாய் உட்கொள்ளாதலால் உமக்குத் தாகமேற்பட்ட போதிலும், இனிய இரட்சகரே! இனி உமக்காறுதலளிப்போம். 

தேவ கற்பனைகளை மீறி நடப்பதாலும், திருச்சபை அதிகாரி களுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதாலும், உமக்கு மனச் சஞ்சலமும் தாகமேற்பட்ட போதிலும், இனிய இரட்சகரே! இனி உமக்காறுதலளிப்போம். 


ஐயோ! சிநேக தேவன், அன்னைமரிச் சுதன் தானே 
இப் பேழையில் தாகத்தாலேங்குறார்.


1. கர்த்தரைக் கற்றூணில் பின் கட்டாயக்கட்டி

கசடர் கசைகளால் அடித்ததால் - (ஐயோ)


2. நேசரின் சிரசின் மேல் முள்முடியை 

நேசமற்ற நீசரழுத்தினதால் - (ஐயோ ) 


3. தூய ரெத்தம் தோய்ந்த துனிக்காவை

துஷ்டர் நிஷ்டூரமாக இழுத்ததால் - (ஐயோ) 


4. பாவ மிகுந்த பாரச் சிலுவையை

பாதகர்க்காய் பாரிலே சுமந்ததால் - (ஐயோ) 


5. கை கால்களில் கூரிருப்பாணிகளை

கட்டமாய்த் துட்ட ஈனர் அறைந்ததால் - (ஐயோ) 


6. வான் புவி நடுவினில் மூவாணியில் 

வல்லவன் தொங்கி அங்கம் துடித்ததால் - (ஐயோ ) 


7. தாகந் தணிக்கும் தண்ணீர்த்தடாகமாம்

திரு விலாவைத் தீயர் திறந்ததால் - (ஐயோ) 


8. மண்மீது கொண்ட மாசுக ஆசையால் 

மானிடரென்று செய்யும் மாபாவத்தால் - ஐயோ)


சேசுநாதர் :
எனது நேச மக்களே! இதோ சற்பிரசாத பேழையில் நான் தனிவாசஞ் செய்கிறேன். சிறைச்சாலையில் அடைபட்ட சிறையாளியைப் போலிருக்கிறேன். பேழையின் கதவுகள் வழியாய் மனிதரின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆனால் அவர்களின் நினைவோ என்னை விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் அகன்றிருக்கிறது. இருதயங்களோ என்னை முற்றிலும் மறந்து " கல்லாயிருக்கின்றன. ஐயோ என்னை ஏன் இவ்விதம் நடத்துகிறீர்கள்? சதா நான் உங்களை நினைக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை ஒருக்காலும் சிந்திப்பதில்லை, துக்க கண்ணீர் நிறைந்த நேத்திரங்களால் மனிதரை உற்று நோக்குகிறேன், ஆறுதலையும் தேடுகிறேன் மனிதரையும் ஆறுதலையும் கண்டபாடில்லையே! மனித சஞ்சாரமின்றி மரஞ் செடி கொடிகள் நிறைந்த பெரிய கானகத்தில் வசிக்கும் ஓர் சிறிய எறும்புக்குச் சமானமாய் இங்கு வாசஞ் செய்கிறேன். நீரில்லாது வறண்டு கிடக்கும் பள்ளத்தாக்கைப் போல என் நாக்கு வறண்டு தாகமாயிருக்கிறேன். ஆயினும் என்னுடைய தாகத்திற்குத் தண்ணீர் கொடுப்பார்

யாருமில்லையே உங்கள் மட்டில் எனது இருதயம் எவ்வளவு துக்கமடைகிறது. எனது என்பு நிறைந்த ஆடுகளே! இதோ நான் இந்த சற்பிரசாத் பெட்டியில் முற்றிலும் மனிதருக்காகவே வாசஞ் செய்கிறேன் எனது திரு இரத்தத்தின் ஒரு துளியும் எனது சதையின் ஒரு துண்டு முதலாய் எனக்கென்று வைக்கவில்லையே சகலமும் உங்களுக்காகவே கையளித்தேன்.

கல்வாரியில் சுமந்த சிலுவையின் பாரத்தால் மூன்று முறை முகங்குப்புற விழுந்து சர்வாங்கமும் வேதனையாகி, இரத்த வேர்வை வியர்த்து சிலுவையில் தாகமடைந்த நான் இங்கேயாயினும் தங்கி இளைப்பாறலாமென எண்ணினேன். ஆனால் மனிதரோ திரும்பவும் பாவச் சுமையை என்மீது சுமத்தி என்னைத் துன்புறுத்தி, திரும்பவும் கொலைக்களமாகிய கல்வாரிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். ஐயோ! நேசர்கள் என்று என்னால் அழைக்கப்படும் நீங்கள் என்னை ஏன் இவ்விதம் வாதிக்கிறீர்கள்? ஏன் என்னிடம் இவ்வளவு உருக்கமும் பற்றுதலுமற்று நடக்கிறீர்கள்? உங்கள்

இரட்சகரும் தேவனுமாகிய எனக்கு நீங்கள் காட்டும் சிநேகம் இதுதானோ? உலகில் இந்நேரத்தில் என்னைப்பற்றி நினைப்பவர் யாரேனுமுண்டோ ? என நினைத்துத் தாகமாயிருக்கிறேன். என்னை நேசிக்க ஒரு இருதயமுமில்லையே என்று துக்கத்தோடு உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களில் எத்தனையோ பேர் என்னைச் சந்தித்து ஆறுதலளிப்பதாகவும் என்னை உட்கொண்டு தாகந்தணிப்பதாகவும் வாக்களித்தீர்கள். நானும் உங்களின் நல்ல மனதை ஆசிர்வதித்தேன் ஆனால் வெகு சீக்கிரத்தில் என்னை மறந்து போனீர்கள் : அநேகந்தடவைகளில் இவ்விதமான உங்கள் தவறுதல்களை நான் மன்னித்திருந்தும் என் தண்டனையில் எப்போதைக்கும் தங்கியிருக்கப் பாக்கியம் பெற்ற நீங்கள் எனது தாகத்திற்குக் காரணம் மானிட பாவமே என அறிவதில்லை. உலக ஆசையால் நீங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை பாவாக்கிரமத்தால் உங்கள் இருதயத்தை பற்றியிருக்கும் பாவக்கறையை எனது திருவிலாவில் நின்றோடி விழும் தண்ணீரால் கழுவி, என்னுடைய அன்பிலும், ஆதரவிலும் அரவணைப்பிலும் வளர முன்வா ருங்கள். உங்கள் தேவனுக்கும், உங்களுக்கும் விரோதமாய்ப் போராடும் சாத்தான் அல்லும் பகலும் அயராது உழைக்கிறதை நீங்கள் அறிவதில்லையோ. என் மட்டில் உங்களுக்குள்ள நல்ல மனதையும், அனுதாபத்தையும் நாசமாக்க முயற்சிக்கிறான். என் மீது உங்களுக்குள்ள அணைகடந்த சிநேகத்தைக் காட்டுவதற்கு ஏற்ற சமயம் இதுவே. நல்ல குழந்தைகளாகிய நீங்கள் என்னை தைரியமாக பின்பற்றுங்கள். எனது பாரமான சிலுவையை சுமக்க வேண்டு மானாலும் தயங்க வேண்டாம், எனக்காக உயிரை இழக்கவும் பின் வாங்காதீர்கள்.

(சற்று தியானித்தல்) 

ஆத்துமங்கள் :
எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு நான் தாகமாயிருக்கிறேன்' என்றுரைத்த இனிய இரட்சகரே! மெய்யாகவே நீர் இங்கு வாசஞ் செய்கிறீர் உமது தயாபரம் நிறைந்த திரு நேத்திரங்களால் எங்களைப் பார்க்கிறீர். எங்கள் மீது உமதன்பு நிறைந்த திருக் கரங்களை நீட்டி, உமது திரு விலாக் காயத்தைக் காட்டி 'மகனே உன்னைச் சிநேகிக்கிறேன்' என்கிறீர். சேசுவே நாங்கள் உம்மை நேசிக்கிறோம். இனிமேல் உமது தாகத்திற்குகந்த தண்ணீர் கொடுப்போம். எங்களின் அழுகைக் குரலைக் கேட்டு எம்மோடு அழுகிறீர்; எமது பிரலாபத்தைக் கேட்டு எம்மோடு பிரலாபிக்கிறீர்; எமது துன்பத்தைக் கண்டு எம்மோடு துன்பப்படுகிறீர். ஆண்டவரே, எங்களை உமது சிலுவையோடு அறைந்தருளும். ஏனெனில் நாங்கள் உம்மைவிட்டு பிரிய மாட்டோம்.

உமது சிநேகம் எங்களைத் தூண்டும் இனிய மோட்ச பாதையாகும் கல்லும் முள்ளும் நிறைந்த கடின பாதையில் நாங்கள் நடக்க ஓ சேசுவே! எமக்கு தைரியத்தையும், பலத்தையும் இம் மணி நேரத்தில் தந்தருளும். தேவனாகிய ஆண்டவரே எமது பலவீனத்தையும், ஒன்று மில்லாமையையும் நீரறிவிர். ஆதலால் ஆண்டவரே ஒரு நிமிஷமும் உம்மைவிட்டு விலகாமல் எங்களைக் காத்தருளும். பூவுலகில் நீர் சுவை பார்த்த கசப்பான பானமும், சகித்த கொடிய தாகமும் எமக்காகவே என்பதையும் நினைவு கூர்ந்தருளும்.

பல்லாயிரம் முறை உமக்கு விரோதிகளா யிருந்து எண்ணிலடங்காத தீமைகளை செய்து உம்மைத் தாகப்படுத்தின் பாவிகளாகிய எம்மை மன்னியும். இதுவரை உமது சமூகத்தில் நிற்க அபாத்திரங்களாயிருந்த நாங்கள் ஒ சேசுவே! இனிமேல் உம்மையே மகிமைப்படுத்துவோம். உமக்காகவே ஜீவிப்போம். எமக்காக நீர் அனுபவித்த வேதனைகளாலும், வருத்தங் களாலும் உமக்கேற்பட்ட தாகத்தைத் தீர்க்காமல் உயிர் வாழ மாட்டோம்.

சேசுநாதர் :
எனது நேச மக்களே! வருஷக்கணக்காய் சிறைவாசலில் அடைபட்டு தாகமிகுதியால் தவிக்கும் எனக்கு தாகந்தீர்ப்பவர் யாருமில்லையே. உங்களில் மரணிக்க இருக்கும் ஒருவனுக்கு கடைசி தருவாயில் தாகந்தீர்க்க எத்தனை பேர் இராப்பகலாய் இளைப்பாற்றியையுந் தேடாது விழித்து காத்திருக்கிறார்கள்? ஐயோ! எனது கடைசி துளி இரத்தமும் எனக் கென்று வைக்காமல் மானிட ஈடேற்றத்திற்காக சிந்தியும் எனது தாகந்தீர்க்காமலிருப்பது நியாயமோ? உங்கள் பாவத்தால் நான் திரும்பவும் தாகமாயிருக்கிறேன்.

ஆறுதலைத் தேடிய நான் உங்களை இம்மணி நேரத்தில் இங்கு அழைத்தேன் மக்கள் என்று என்னால் அழைக்கப்படும் உங்கள் சிநேகம் உண்மையானதே. மெய்யாகவே நீங்கள் எனது அழைப்பிற்கிணங்கி எனக்கு ஆறுதலளிக்க வந்திருப்பதும் வாஸ்தவமே, மனிதரில் எத்தனை பேர் என்னைத் திரும்பவும் சிலுவையிலறைய எத்தனிக்கிறார்கள். கல்வாரி யில் சிலுவை சுமந்து செல்லும்போது என்னுடைய திரு இரத்தத்தின் துளிகளை யூதர்கள் மிதித்தது போல் உங்களில் எத்தனையோ பேர் சற்பிரசாதத்தில் தனிவாசஞ் செய்யும் என்னை மிதித்து எனது பலிபீடங்களைத் தகர்த்தெறிந்து, எனது நாமத்தினால் வரும் குருப்பிரசாதிகளை நிந்தித்து எனது சட்டங்களை அப்புறப்படுத்த துணிகிறார்கள்?

பெலிக்கான் பஷியைப்போல் நான் எனது தசையை உங்களுக்குப் போஜனமாகவும், எனது இரத்தத்தைப் பானமாகவும் தர இங்கு காத்திருக்கிறேன். ஆயினும் உங்களுக்கோ எனது தாகந்தீர்க்க மனமில்லையே யூதர்களோ எனக்குக் குடிக்கக் காடியை கொடுத்தார்கள். ஆனால் உங்களில் குடிக்கக் கொடுப்பார் எவருமில் லையே, முன்னால் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு உணவாகத் தந்த எனக்கு உணவளிக்க ஒருவரையும் காணவில்லையே, கல்வாரியில் நான் சிலுவை சுமக்கும் போது விரோணிக்காள் தனது துகிலால் எனது வேர்வையும் இரத்தமும் நிறைந்த திரு முகத்தைத் துடைத்து ஆறுதலளித்ததுபோல் இம்மணி நேரத்தில் நான் அனுபவிக்கும் நிந்தைகளையும் தாங்கொண்ணாத் தாகத்தையும் அறிந்திருக்கும் நீங்கள் எனக்கு ஆறுதல் அளித்து, என் தாகத்தை தீர்க்க முன் வந்திருக்கிறீர்கள். எனக்கேற்ப பட்டிருக்கும் தாகத்தை உங்கள் பரிகார பிராத்தனைகளால் குறைப்பீராக.

(சற்று தியானித்தல்)

ஆத்துமங்கள் : 
ஐயோ! எங்கள் ஆத்தும் நாதரே! இப்போது உமக்குத் தாகமாயிற்றோ? சீவியத்தின் ஊறணி நீரல்லவோ என்றும் வற்றாத தண்ணீர்த் தடாகம் நீரல்லவோ? பாவ நிலையில் இருக்கும் எமது பாதக இருதய ஊற்றுக் கேணியை நிறைத்ததுபோலச் சோகம் பெருகி துக்கிக்கிறது நேச ஆண்டவரே! இந்த நேரத்தில் உமக்குண்டாயிருக்கும் தாகம் தண்ணீர் தாகமல்ல, எங்களின் ஆத்தும இரட்சணியத்துக்காக மிகுந்த ஆவலாகிய தாகமே.

இந்த மணிநேரத்தில் உமது தாகத்திற்குப் பரிகாரமும், ஆறுதலுமளிக்க வந்திருக்கும் எம்மையும் உம்மை மறந்து உலக சிற்றின்ப சந்தோஷங்களிலும், பாவப் பழக்க வழக்கங்களிலும் புரண்டு கிடக்கும் ஆயிரக்கணக்கான ஆத்துமங்களையும் உமது திரு இரத்தத்தால் பரிசுத்தப்படுத்தி மன்னிப்பை அளித்தருளும்.

சகிக்க முடியாத வேதனைகளால் ஆவி நொந்து , நாவுலர்ந்து தாகமிகுதியால் சற்பிரசாதப் பெட்டியில் தங்கியிருக்கும் உம்மை மறந்து சிற்றின்ப சந்தோஷங்களில் புரண்டு கிடக்கும் சகலர் மேலும். இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும். 

தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக பகிரங்கமாய் பாவாக் கிரமங்களைத் தொழிலாக நடத்தி ஆத்துமங் களைச் சோதனைக் குள்ளாக்கும் சகலர் மேலும், இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும் 

நடன சாலைகளிலும், நாடக மேடைகளிலும் உமது திருநாமத்திற்கும், திருச்சபைக்கும் விரோதமாய் பேசும் சகலர் மேலும் இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும். 

தங்கள் ஜீவியத்தைக் கெட்ட புத்தகங்கள் வாசிப்பதிலும், படங்கள் பார்ப்பதிலும் பிரசுரங்கள் எழுதுவதிலும் செலவழித்து வரும் சகலர் மேலும், இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும். 

கிறிஸ்தவர்களாயிருந்தும் உமது நன்மைத் தனத்தை மறந்து, பசாசை நம்பி அதற்கு மந்திரவாதம் முதலான வழிபாடுகளை செய்துவரும் சகலர் மேலும், இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும். 

தங்களின் சுய நலத்திற்காக நீதி ஸ்தலங்களில் உமது திருநாமத்தின் பேரில் ஆணையிட்டு பொய்சாட்சி சொல்லும் சகலர் மேலும் இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும். 

பூலோக மோகத்தையும், பசாசின் பாசத்தையும், தீய சந்தர்ப்பம் சார்புகளையும் விட்டு விடாத சகலர் மேலும், இரக்கத்தின் தேவனே! இரக்கமாயிரும். 


சேசு தாகந்தீர்ப் போமிப்போ 
நீசனைப் போலானாரைய்யோ


1. அங்கமெல்லாம் பொங்குதிரம் 

ஆறாயோடக் காணுதய்யோ .. (சேசு) 


2. தஞ்சம் வேறாரு மில்லையே!

கெஞ்சித் தஞ்சம் கேட்குந் தந்தை . (சேசு) 


3. பாரோர் செய் மாபாவம் போக்க

பாரில் ரெத்த வேர்வை வேர்த்த . (சேசு) 


4. மன்னுயிரை மீட்பதற்காய் 

தன்னுயிரை தத்தம் செய்த . (சேசு)


சேசுநாதர் : 
எனது செல்வ மக்களே! நரிகளுக்கு வளைகளுண்டு, ஆகாயப் பறவைகளுக்கு கூடுகளுண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்க முதலாய் இடமில்லாமல் தவிக்கிறேன். சரீர வேதனையுடன், மனவேதனையும் என்னை வாதிக்கிறது. நியாயங் கேட்க வேண்டிய தேசாதி காரிகளும் மாசற்றவரென்றிருந்தும் தங்கள் கைகளைக் கழுவி என்னைக் கைநெகிழ விட்டு விடுகிறார்கள். நேச சீஷர்களாகிய நீங்களும் என்னைத் தனியாக விட்டுவிட்டு பயந்து ஓடுகிறீர்கள்.

இராப்பகலாய் திவ்விய அப்பத்தில் மறைந்து வசித்து உங்களைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் இரட்சகருக்கு ஆறுதலளிக்க முன் வந்திருக்கும் என் குழந்தை ஆடுகளே, இப்பீடத்திலிருந்து உங்களை உற்று நோக்குகிறேன். உங்களை அணைகடந்த விதமாய் சிநேகிக்கும் எனது திரு இருதயத்தை உற்றுப்பாருங்கள். சிநேகத்திற்குப் பிரதிபலனாக உங்கள் ஆண்டவருக்குக் கிடைப்பதென்ன? சிநேகமின்மையும், நன்றிகெட்டதனமும், தேவதுரோமும் தவிர வேறில்லை. சிநேகத்திற்கு சிறந்த கைம்மாறு சிநேகமே, என்பதை நீங்கள் சற்றேனும் நினைப்பதில்லை. நேற்று என்னுடன் ஐக்கியமாயிருந்து எனது அன்பிலும், ஆதரவிலும் ஜீவித்தவர்களில் எத்தனை பேர் இன்று என்னை வெறுத்து தள்ளுகிறார்கள்.

புனிதர்களாக ஜீவித்து, புண்ணியவான்களாகும்படி நான் அளித்த வரங்களை மனிதர் உதறித் தள்ளி உலக சிலாக்கியத்தையும், மகிமையையும் தேடி அவைகளைப் பாழாக்குகிறார்கள். இவர்கள் அனைவரும் மோட்சானந்தத்தில் பங்கெடுக்க வேண்டியவர் கள். ஆனால், இவர்களோ, அந்த மோட்சானந்தத்தை வெறுக்கிறார்கள். எனது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து மனந்திரும்பி எனது தாகந்தணிக்கும் பாவிகள் அவ்வானந்தத்தை அடைவார்கள்.

எனது பிரஜைகளே! இவ்வித கொடுமைகளால் எனக்குண்டாயிருக்கும் கொடிய தாகத்தை ஒரு விதமாய் தணிக்கும் படியாக முன்னால் ஒர்முறை சமாரியா நாட்டு ஸ்திரீயிடம் 'என் தாகத்திற்கு குடிக்கத் தண்ணீர் கொடு' என்று கேட்டது போல உங்களிடமும் கேட்கிறேன். ஆனால் மனிதர்களில் எத்தனை பேர் என் தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்குப் பதிலாக திரும்பவும் தங்களின் நன்றி கெட்டதனத்தினால் என் பானத்தை கசப்பாக்குகிறார்கள் , சற்பிரசாத பெட்டியில் தாகத்தால் ஆவி நொந்து வருந்தியிருக்கும் நான் ஆவலோடு ஆறுதலை தேடுகிறேன் நீங்களாவது, எனது சொந்த மக்களின் துர் இச்சைகளால் ஏற்படும் தாகத்தை குறைப்பீர்களாக.

(சற்று தியானித்தல்)

ஆத்துமங்கள் : 
சிதறிப்போன ஆடுகளைத் தேடிடும் எங்கள் நல்லாயனே! உலக ஆசைகளாலும், பாவத்தின் மேல் வைத்த பற்றுதலாலும் இதுவரைக்கும் உம்மை மறந்து சீவித்தவர்களாகிய எங்கள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும், உமது கோபத்தின் கைகளை எங்கள் மீது நீட்டாதேயும். எங்களாலும் மற்றும் அனைவராலும் உமக்கேற்பட்ட வணக்கம் குறைச்சலுக்காகவும் தோஷ துரோகங்களுக்காவும் பரிகாரம் செய்ய வந்திருக்கிறோம். எங்கள் மேலும், உம்மை இதுவரை அறிந்து சிநேகித்து, சேவியாமலிருக்கும் சகல பாவிகள் மேலும், உமது இரக்கத்தைக் காண்பித்து ஆசீர்வதித்தாளுவீர்.

சேசுநாதர்:
எனது அன்பான பிள்ளைகளே ! அன்று பெத்லேமில் நான் அவதரித்த போது எனது சரீரத்தைப் போர்த்த ஒரு கந்தைத் துணியாகிலுமிருந்தது. இப்போது இந்த சற்பிரசாதப் பெட்டியில் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறேன் மனிதர்கள் அச்சம் கூச்சமின்றி அரோசிக அவலக்ஷண பாவங்களைக் கட்டிக்கொள்வதும்; தங்கள் மானத்தை விற்று மதிகெட்டுப் பாவத்தில் உழன்று திரிவதும் தற்கால நாகரீகப்போக்கு என்று அரை குறையாய் உடுத்திக்கொண்டு வீண் டம்பங்கள் செய்து, மினுக்கிக் குலுக்கி நடந்து தங்களுக்கும் பிறருக்கும் பாவத்துக்கு ஏதுவாயிருப்பதுமே நான் இங்கு நிர்வாணியாக் கப்பட்டு தவிக்கக் காரணமாயிருக்கிறது, கொடூர பாவாக்கிரமத்தால் மனிதர்கள் ஊர் ஊராய்ச் சுற்றித்திரிந்து உலகத்தாருக்கு நன்மை புரிந்து எனது கரங்களில் திரும்பவும் ஆணிகளை அறைத்து வாதிக்கிறார்கள். உலக முடியுமட்டும் எண்ணிறந்த பாவங்களால் என்னைத் திரும்பத் திரும்பச் சிலுவையிலறையும் பாதகர்களை நினைக்கும் போது எனக்குண்டாகும் மனவேதனையும், தாகமும் சொல்லுந்தரமன்று.

கல்வாரியில் சிலுவை மரணமட்டும் சகல வேதனை நிர்ப்பந்தங்களையும் முறைப்பாடான வார்த்தையொன்றுமில்லாமல் எல்லாம் பிதாவின் சித்தமெனவுணர்ந்து அமைதியோடு அனுபவித்தேன் மனிதரோ தமக்கு வரும் சொற்ப துன்பத்தில் எத்தனை பேரைக் குற்றவாளியாக்குகிறார்கள் என்னையும் நொந்து கொள்ளுகிறார்கள். நான் உண்டு பண்ணின இந்த உலகத்தில் எனது காலடி வைக்க முதலாய் இடமில்லையே ? நான் அவதரித்தபோது பெத்லேமில் எனக்கு இடமில்லாது போயிற்று. அன்று ஜெருசலேமில் இடமின்றி ஊருக்கு வெளியில் ஒரு கழுமரத்தில் தொங்க வைத்தார்கள். இப்போது இங்கும் மனிதர், அவர் களிடையில் நான் வசிப்பது கேவல மென்று எண்ணி என்னைக் காலால் உதைத்து என்னை யும் எனது பலிபீடங்களையும், தேவாலயங் களையும், அப்புறப்படுத்த எத்தனிக்கிறார்கள்.

மக்களென்று என்னால் அழைக்கப்படும் உங்களுக்கு நான் செய்யாததென்ன? இதற்கு மாறாக நீங்கள் எனக்கு ஒரு இல்லிடம் தராதது மட்டுமல்ல, என்னை விரோதித்தது மட்டுமல்ல, உபாதித்துக் கொல்லவுந்துணிகிறீர்கள். யூத ஜனங்கள் என்னைச் சிலுவையிலறைந்தது நன்றி மறந்து செய்த பெரும் பாதகம். ஆனால் அனேக சமயங்களில் நீங்கள் அவர்களைவிட நன்றி கெட்ட பெரும் பாதகர்களாக நடக்கிறீர்கள் நான் யூதர்களை என்னுடைய சொந்தப்பிரஜைகளாகத் தெரிந்தெடுத்து அவர்களை ஆதரித்து வந்தேன். உங்களையோ எனது சொந்தப் புத்திரர்களாகச் சுவிகரித்து மோச்ச இராஜியத்துக்குப் பங்காளி களாக்குகிறேன். அவர்களுக்கு வனாந்தரத்தில் மன்னாவெனும் போஜனத்தை யளித்தேன். உங்களுக்கோ எனது திரு இரத்தத்தைப் பானமாகவும் திருச் சரீரத்தை போஜனமாகவும் தருகிறேன், யூதர்கள் எனது தெய்வீகத்தை யறியாமல் என்னை வாதித்திருக்கலாம். ஆனால் நீங்களோ யூதர்களைவிட எவ்வளவோ மேலான வரங்களைப் பெற்றிருந்தும், என்னை யாரென்று தெரிந்திருந்தும் கொடிய பாவங்களைச் செய்து திரும்பவும் சிலுவையில் அறைவதால் உங்களின் சதிமானத்தை என்னவென்பது? நீங்கள் பாவச் சமயங்களை நாடிய போதெல்லாம் என்னைச் சிலுவையிலறைவதைத் தவிர வேறு என்ன செய்கிறீர்கள்.

எனது நேசர்களே! இனியாகிலும் எழுந்திருங்கள். எல்லோரும் ஒரே மந்தையாகக் கூடி ஏக சத்தமாய் எனது இராஜரீகத்தை பூவுலகில் பிரசித்தப்படுத்துங்கள். என்னுடைய தாழ்மையையும், சாந்த குணங்களையும் கண்டு மனிதர்கள் தங்களையே வல்லபமுள்ளவர்களாக மதித்து, என்னை நிந்திக்கிறார்கள். ஆனால் நீங்களாயினும் எனது சிநேகிதர்களே! என்னைப் போற்றிப் புகழுங்கள். (சற்று தியானித்தல்) ஆத்துமங்கள் : எங்களை நல்லாட்சி புரியும் இராஜாவே! உமது பிரஜைகளாகிய எங்கள் மத்தியில் எழுந்தருளும், அற்பப் புழுவுக்கு சமமான மனிதர்களால் உமக்கேற்பட்ட தீராத் தாகத்தை தீர்க்க எங்களிடம் வாரும்.

உமது திருச் சரீரத்தில் பட்ட அடிகளால் இரத்தம் சிந்தினதின் காரணத்தால் தாகமானீரே! திரு விலாக்காயத்தின் வழியால் மீதியிருந்த உதிரத்தையும் சொரிந்ததால் தாகமானீரே ! பாதகர் மேல் வைத்த சிநேகத்தால் இங்கு தாகமாயிருக்கலானீரே! உமது தாகம் எங்களாத்தும் தாகமே என அறிகிறோம். கொடூர பாவாக்கிரமங்களால் உண்டான தாகமே எங்கள் நேசத்துக்குரிய சேசுவே! என்றென்றும் உமது திரு விலாக்காயம் எங்களுக்குத் திறந்த அடைக் கலமாக இருக்க அருள்புரியும்.

கல்வாரியில் தேவரீர் சிலுவை மரத்தில் அலங்கோலமாய் தொங்கிக் கொண்டிருப்பதையும், களைப்பு மிகுதியால் தாகமாயிருப்பதையும் ஈனர்களாகிய நாங்கள் விசுவாசக் கண்ணால் நோக்கவும், எங்களுக்கு தயை செய்யும். வாரும் ஓ நேசரே ! உமது பிரஜைகளிட மிருந்து நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர் என்னும் வாழ்த்துதலைக் கேட்கவாரும்.

பெத்லேமில் மனிதாவதாரம் எடுத்த போது மூன்று இராஜாக் களால் காணிக்கை செய்யப்பட்ட பொன், தூபம், மீரையை அன்போடு ஏற்றுக்கொண்ட சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர். 

உம்மைக் கொலைப்படுத்த எரோதரசனால் பறைசாற்றப்பட்ட கட்ட ளைக்கு உட்படாமல் எகிப்துக்கு ஒடிச்செல்ல மனமுவந்த சேசுவே, துணைவர் : நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர். 

வனாந்தரத்தில் ஐந்து அப்பத்தையும் இரண்டு மச்சத்தையும் ஐயாயிரம் பேருக்கு அற்புதமாகப் பறிமாறினபோது யூதர்கள் உம்மை ஒரு இராஜாவாக எண்ணினதை அறிந்து அவர்கள் மத்தியிலிருந்து தப்பித்தோடி மறைந்து போன சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர். 

ஜெருசலேம் நகரவாசிகள் உம்மைத் தங்கள் இராஜாவாக ஏற்றுக் கொண்டு 'ஓசன்னா' என்று அக்களிப்புடன் பாடினதை கேட்டு ஆனந்தங்கொண்ட சேசுவே நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர். 

யூதர்களின் அரண்மனை வாயிலில் பிலாத்து முன்னிலையில் குருப்பிர சாதிகள் நீர் கிறிஸ்துவாகிய இராஜாவென்று சொன்னதாக வீண் குற்றம் சாட்டினதைக் கேட்டும் மவுனமாக நின்ற சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர், 

நீர் யூதர்களின் இராஜாவா' என்று பிலாத்து கேட்டதற்கு என் இராச்சியம் இவ்வுலகத்துக்கு அடுத்ததல்ல; என் இராச்சியம் இவ்வுலகத்துக்கு அடுத்ததனால் நான் யூதர்களுக்குக் கையளிக்கப் படாதபடிக்கு என் சேவகர் மெய்யாகவே போராடியிருப்பார் எனத் தாழ்மையாகப் பதிலுரைத்த சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர். 

பரபாசையும் உம்மையும் பக்கம் பக்கமாக நிறுத்தி பிலாத்து தன் முன் கூடியிருந்த ஜனக் கும்பலை நோக்கி "பாஸ்குத் திருநாளில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலையாக்குவது உங்களுக்கு வழக்கமாயிருக்கிறது, ஆகையால் யூதர்களுடைய இராஜாவை நான் உங்களுக்கு விடுதலையாக்க விரும்புகிறீர்களா?" என்ற கேள்விகளுக்கு ஆளாயிருந்த சேசுவே, நீர் என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர் 

யூதர்களால் சிரசில் முட்செடி வைக்கப்பட்டு, வலது கையில் மூங்கில் கொடுக்கப்பட்டு, உமது முன்பாக முழங்கால் படியிட்ட சேவகர்களால் 'யூதர்களுடைய இராஜாவே! வாழ்க' என்று பரிகாசம் பண்ணப்பட்ட சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர். 

பிலாத்து உம்மைக் காண்பித்து சீறிச் சினந்து கூக்குரலிட்ட யூதர்களை நோக்கி, 'இதோ உங்கள் இராஜன்' என்று சொன்னதைக் கேட்டுப் பொறுமையோடு நின்ற சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர்.

பிலாத்து மறுபடியும் யூதர்களை நோக்கி உங்கள் இராஜாவை நான் சிலுவையில் அறைவேனா எனக்கேட்டதற்கு பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக 'சேசார் அல்லாதே எங்களுக்கு வேறே இராஜா இல்லை" என்றதைக் கேட்டு மனவேதனைப்பட்ட சேசுவே, நீரே என்றும் எங்கள் இராஜாவாயிருப்பீர்.


தின்மைசூழ்பூவுலகிலே திவ்விய சற்பிரசாதத்தில் 
நன்மை செய்தே எம்மையே நாளுமாள் இருப்பீர்


1. சிலுவை மீது சாகும்போது தாகமானீரே 

சிறியோராதனையாலே தாகந்தீர்ப்பீரே. (தி)


2. ஈரமில்லா நீச்ரெமக்காய் வாதைப்பவரே,

ஏகனே எம்மாராதனை யாவுமே கரற்பிரே (தி) 


3. தீயோரெமக்காய், தேவனே! கண்ணீர்

சொரிந்தீரே, தினமெம் ஆராதனையாவும் ஏற்றருள்வீரே (தி) 


4 அடியோர்க்காய், ஆண்டவரே நீரழலானீரே. 

அந்தோ! இம்மணி நேரமே ஆறுதல் பெறுவீரே. (தி) 


சேசுநாதர்:
எனது நேசத்திற்குரிய மக்களே! இதோ இங்கு வாசஞ் செய்யும் நான் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வேர்த்தேன். முட்களால் நிறைந்த முடி சூட்டப்பட்டு இரத்தம் சிந்தினேன். கற்றூணில் கட்டி அடிபட்ட போது எவ்வளவோ இரத்தம் சொரிந்தேன். இரத்தம் பக்கத்திலுள்ளவர்கள் மேலும் பாய்ந்தது. என்ன பயங்கர வேதனை சிலுவையில் அறையும் போது கை கால்களின்று ஆறு போல் இரத்தம் பெருக்கெடுத்து கீழே வழிந்தோடினது. ஆகவே என் சரீரத்தில் சற்றேனும் சக்தியில்லாமல் தள்ளாடுகிறேன். நாவு வரண்டு போகிறது, தாகமதிகரிக்கிறது. சொல்லண்ணாத்தாகம். தாங்க முடியாத தாகத்தால் வாய்திறந்து 'நான் தாகமாயிருக்கிறேன்' என உங்களைப் பார்த்து கதறுகிறேன்.

தாகந்தணிக்க முன் வந்திருக்கும் எனது நேசர்களே! இன்னும் உங்கள் இருதயம் நீர்ச்சொரியும் ஊற்றாகவில்லையோ? என்னுடைய தாகம் என்னைக் கொடூரமாய் வாதிக்கிறதை நீங்கள் அறிவதில்லையோ? அறிந்தும் என்னை ஏன் இவ்விதம் அவஸ்தைக்குட்படுத்துகிறீர்கள் உங்கள் தேவனாகிய எனக்குக் கிடைத்த பாத்திரம்! பயம், சலிப்பு , ! துக்கம் இவைகள் கலந்த கசப்பான பாத்திரம்! மானிட பாவத்தால் வரவிருக்கும் வேதனையில் அகோரம் பயத்தைத் தருகிறது. பாவத்தின் தோஷமும் அரோகசியமும் சலிப்பைக் கொடுக்கிறது : அநேக ஆத்துமங்கள் பலனடையாமல் பிடிவாதமாய் பாவத்தில் மரிக்கிறார்களே என்ற எண்ணம் துக்கத்தை உண்டுபண்ணுகிறது. எனது திரு இரத்தத்தை உங்களுக்குப் பானமாய் தந்துவிட்டு கசப்பான பானத்தை நான் உட்கொள்கிறேன்.

என் மட்டில் சிநேகமாயிருக்க விரும்புவீர் களாயின் உங்களைத்தானே பரித்தியாகஞ் செய்து, என் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின் செல்வீர்களாக, அந்தோ! மனிதரில் அநேகர் இதை அசட்டை செய்கிறார்கள் நீங்கள் எத்தனைக்கு என்னுடைய கிட்டி!!! ஐக்கியத்தை நாடுவீர்களோ, அத்தனைக்கு சிலுவைகளை பாராட்டுங்கள், தியாகம் உங்களின் ஒவ்வொரு செயலிலுமிருக்க வேண்டும்; உங்களிடம் தியாகத்துக்கு ஒருவித தாகமிருக்க வேண்டும். நான் மனிதர்களோடு ஒன்றிக்கப்பட்டு ஆறுதலடைய ஆசிக்கிறேன். ஆனால் அவர்களோ என்னை ஏற்றுக்கொள்வ தில்லை. நீங்களாயினும் அந்த ஆத்துமங்களை என்னண்டைக்கு அழைத்து வாருங்கள், சிலுவையினின்று தாகமிகவாகி 'நான் தாகமாயிருக்கிறேன்' என்று உரைத்த உங்கள் இரட்சகரைப் போல் நீங்களும் தினமும் ஆத்துமங்களை இரட்சிப்பதற்கும், என்னோடு நெருங்கின் ஐக்கியத்தில் ஒன்றிப்பதற்கும் மிகவும் அவசியமான சிலுவைகளையும் நிந்தை அவமானங்களையும் வரவேற்கத் தயாராயிருங்கள்.

(சற்று தியானித்தல்)

ஆத்துமம் : 
எங்கள் தேவனாகிய ஆண்டவரே! என்றென்றும் சற்பிரசாத நாதராய் எழுந்தருளியிருக்கும் நேச சேசுவே! உமக்கே மகிமை உண்டாவதாக வான தூதர்கள் உம்மை வணங்கி நமஸ்கரிப்பார்களாக. ஏனெனில், நீரே பரலோகத்தில் அவர்களது ஆனந்தமாயிருக்கிறீர்.

ஒ, சர்வலோக சிருஷ்டிகரே! உம்மால் உண்டான சிருஷ்டிகளாகிய வானம், பூமி, சமுத்திரம், மலைகள், மரஞ்செடிகள் முதலான சகலமும் உம்மை ஏக சப்தமாய் புகழ்ந்து பாடக்கடவன. தேவ சாயலாக உண்டாக்கப்பட்ட இருதயங்களே , பேழையில் மறைந்து வசிக்கும் தேவனாகிய சிறையாளரை ஏற்றிப் போற்றுங் கள். சதா காலமும் திவ்ய நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் தெய்வீக நாதரே, உமக்கே தோத்திரமும், ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாவதாக.

சேசுநாதர் : 
எனது சிநேகத்தில் வாழ பாக்கியம் பெற்ற குழந்தைகளே, உங்கள் தேவனாகிய என்னோடு சற்று தங்கியிருங்கள் என்னைத் தனியாக விட்டு விட்டுப் போகாதீர்கள். இம்மணி நேரத்தில் நான் உங்களை நோக்கிச் சொல்லும் முறைப்பாடுகளுக்கு செவி சாய்ப்பீர்களாக.

மனிதர்கள் குடி வெறியால் கட்டிக் கொள்ளும் பாவத்திற்கு பரிகாரமாக நான் தாகத்தால் வருந்துகிறேன். மனைவி மக்களை குடிக்கக் கஞ்சியின்றி கதற விட்டு விட்டு பணத்தை மதுபானத்தில் தொலைத்து மது வெறியேறி அலையும் பாதகர்களுக்காக வருந்துகிறேன்.

உங்கள் சிநேக தேவன் தாகத்தால் வருந்த நீங்கள் வெறியேறக் குடிப்பதில்லையோ? நான் நாவு வரண்டு துடிக்கிறேன், நீங்களோ புத்தி மயங்கக் குடிக்கிறீர்கள். நான் தாகத்தால் பாவத்தை பரிகரிக்கிறேன், நீங்களோ மதுவால் ஆத்துமத்தைக் கெடுத்து மனைவி மக்களை கொல்லுகிறீர்கள். இரத்தம் சிந்தியதால் உண்டாகிறது தாகம், மது அருந்துவதால் உண்டாகிறது பாதகம், மோக ஆசை கொண்டு அலைகிறார்கள் பாவிகள். ஆத்தும் தாகத்தால் வருந்துகிறேன் உங்கள் தேவனாகிய நான், காமவெறியால் அலைகிறார்கள் சண்டாளர்கள், தாகவெறியால் அலறுகிறேன் உங்கள் ஆண்டவராகிய நான்.

சரீர ஆசையாவும் பூர்த்தி செய்யும் பாதகங்களுக்காக எனது சரீரத்தில் இரத்தமின்றி தண்ணீரின்றி பதறுகிறேன் மக்களாகிய நீங்கள் உங்கள் ஆண்டவரின் தாகத்தை தீர்க்க மாட்டீர்களோ? இரக்கமில்லையோ உங்களுக்கு? கெட்ட ஆசைகளை எழுப்ப தற்காலத்தில் உதித்திருக்கும் சிற்றின்ப புத்தகத்தை நீங்கள் தொடுகிறீர்கள், நாடக மேடையை அண்டுகிறீர்கள், நேச பிள்ளைகளே. நாடகசாலை நரக பாடசாலை என்று நீங்கள் அறிவதில்லையோ? அசையும் படம் பேசும் படத்திற்காக நித்திய மோட்ச இன்ப வீட்டை இழக்க எத்தனை பேர் துணிகிறார்கள்.

சற்பிரசாத பேழையில் வசிக்கும் என்னை மனிதர்கள் சதா அவமதிப்பதோடு எனது சாயலாகவும், என்னால் அதிகமாக நேசிக்கப்பட்ட ஒதுக்கிடமுமாகிய மனித இருதயத்திலிருந்து பிடிவாதமாய் தள்ளி வெளியாக்குகிறார்கள். மனிதர்கள்மேல் எனக்குள்ள சிநேகத்தால் என்னால் கூடுமானவைகளையெல்லாம் செய்தும் அவர்கள் எனது விரோதிகளின் சகவாசத்தால் கெட்டு என்னை எப்போதும் புறக்கணிக்கிறார்கள்.

நானே அன்பின் அரசர் ஆகவே எனது அரசாட்சியை விரும்பும் நீங்களாவது எனதண்டையில் வாருங்கள் நித்தியத்திற்கும் என்னோடு தங்கியிருக்க வாருங்கள், இbமணி நேரத்தில் எனது தாகந்தணிக்க வராமலிருக்கும் சகல ஆத்துமங்களுக்காகவும் பரிகாரத் செய்வீர்களாக இவ்வுலக ஆசைகளால் ஏற்படும் பாவங்களின் பலனாக எனக்குண்டாகும் தாகம் தணித்து ஆறுதலையளிக்க வாருங்கள், கான்றும் நான் தங்கி இளைப்பாற உங்கள் இருதய விகா எனக்குக் கொடுப்பீர்களாக சிறையில் நான் அனுபவிக்கும் சொல்லிலடங்காத நிந்தை அவமானங்களை அறிந்து எனக்கு ஆறுதலளிப்பதற்காக இம்மணிநேரத்தை என்னுடன் செல் வழிக்க முன் வந்த உங்களை ஆசிர்வதிக்கிறேன் இதோ சற்பிரசாத பெட்டியில் நின்று நான் தாகமாயிருக்கிறேன் என்றுரைக்கும் உங்கள் இனிய இரட்சகரின் தாகம் ஆத்தும் தாகமே!

சற்று தியானித்தல் 

ஆத்துமம் : 
எங்கள் அன்புள்ள தகப்பனே ! உம்முடன் தங்கியிருக்க எங்களுக்கு உதவி செய்யும் எங்களின் இருதய ஊறணியைத் திறந்து உம்முடைய கொடிய தாகத்தை தீர்க்க வல்ல வரத்தை எமக்குக் கட்டளையிட்டருளும்.

எங்கள் தேவனாகிய சேசுவே உமது மேலுள்ள விசுவாசத்தையும் நம்பிக்கையையும் சிநேகத்தையும் காண்பிக்க ஆவலுடன் இங்கு குழுமியிருக்கும் உமது மக்களாகிய எங்கள் மேல் உமது திருக்கண்களைத் திருப்பியருளும் எங்களின் பிரமாணிக்க குறைவுக்காகவும் பாவிகளின் தோஷ துரோகங்களுக்காகவும் பரிகாரம் செய்ய வந்திருக்கிறோம். எங்கள் மேலும் உம்மை சிநேகித்து சேவிக்கும் பாக்கியம் பெறாத சகல பாவிகள் மேலும் உமது இரக்கத்தை காண்பியும் நாங்கள் உமக்கு முன்பாக செய்யும் வாக்குத்தத்தங்களை சேசுவின் திரு இருதயமே நீர் ஆசிர்வதித்தருளும்.

எங்கள் நேச ஆண்டவரே, எல்லோரும் உம்மைக் கைவிட்டாலும் நாங்கள் உம்மைக் கைவிட மாட்டோம் என வாக்களிக்கிறோம். இவ்வாக்குறுதியில் நிலை நிற்கும் வரத்தை எங்களுக்கு தந்தருளும். இனிய இரட்சகரே ஒரு மணிநேரம் உம்முடன் சம்பாஷித்திருந்தோம். உம்மை விட்டுப் பிரியும் நேரம் இதோ சமீபித்திருக்கிறது. உலகத்திலுள்ள கோடிக்கணக் கான மக்களில் எங்களைத் தெரிந்தெடுத்து இந்த மணி நேரத்தில் நாங்கள் உமக்காராதனை செய்யும்படி கிருபை செய்ததற்காகவும், இம்மணி நேரத்தில் நீர் எமக்குக் கொடுத்துள்ள நல்ல யோசனைகளுக்காகவும் உமக்கு நாங்கள் முழுமனதுடன் நன்றி செலுத்துகிறோம். சேசுவே உம்முடன் கூடித் திருமணித் தியானம் செய்கிறவர்களுக்கு நீர் வாக்களித்திருக்கும் திரளான வரப்பிரசாதங்களை எங்களுக்கும் அளித்தருளக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

இம்மணிநேரம் நீரெழுந்து 
ஈன்ரெம்மயே இங்கழைத்து 
திவ்விய பீடத்தில் தங்கி இருந்து 
தாகமென்றீரே வாய் திறந்து


தேவா! நின் தாகம் ஆத்துமதாகமே 
தின்மையனைத்தும் தீர்க்குந்தாகமே 
நாதா உன்னையே நாடி வந்தோமே 
நன்மையதாலே கூடி வாழ்வோமே.


காரிருளெங்கும் எம்மைச் சூழுதே 
காத்தருள்வாயே. கைநெகிழாதே 
தாரணியெங்கும் உன்னைப் புகழ்ந்தே 
தவமது செய்வோம், எம்மை மறந்தே

ஆதரை மீதே அல்லலுற்றோமே 
ஆ! இங்கிப்போதே செழிப்புற்றோமே