இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வுல்காத்தா வேதாகமத்தின் சிறப்புகள்

 வுல்காத்தா வேதாகமம் அர்ச். எரோணிமுஸ் (கி.பி. 340 - 420) என்பவரால் மூல கிரேக்க, எபிரேயப் பிரதிகளிலிருந்து மிகக் கவனமாக இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நான்கு மாபெரும் திருச்சபை பிதாக்கள் எனப்படுபவர்களில் அர்ச். எரோணிமுஸும் ஒருவர். கிரேக்கத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், இலத்தீன் மொழியையும் முழுவதுமாக கற்றறிந்தவர், எபிரேயம், மற்றும் அரமேய மொழிகளை மட்டுமல்லாமல், தானியேல் ஆகமத்தை சரிபார்ப்பதற்காக கால்டிய மொழியையும் பயின்றார்.

மொழிப் புலமை பெற்றிருந்த அர்ச். எரோணிமுஸ், 2-ம், 3-ம் நூற்றாண்டுகளைச் சார்ந்த மிகத் தொன்மையான எபிரேய மற்றும் கிரேக்கக் கைப்பிரதிகளைத் தம்முடைய வேதாகம மொழிப்பெயர்ப்பின் போது கொண் டிருந்தார். இவைகள் தற்போது அழிந்து போய்விட்டன. நவீன வேதசாஸ்திரி களுக்கு இவைகள் இல்லாமல் போய்விட்டன. இந்த வேதாகமம் இலத்தீன் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையில் 1500 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 1546-ல் தனது 4-ம் அமர்வின்போது, திரிதெந்தின் பொதுச் சங்கம் இந்த வேதாகமம்தான் “மெய்யானது” (Authenticum) என்றும், “இதை ஒருவனும் எக்காரணத்தைக்கொண்டும் நிராகரிக்கக் கூடாது” என்றும் ஆணையிட்டது.

* முதலாம் வத்திக்கான் சங்கமும் (1869-1870) தனது 3-ம் அமர்வின் போது அதை உறுதிப்படுத்தியது (Henry Denzinger's Enchiridion Symbolorum).

 பாப்பானவர் 12-ம் பத்திநாதர் 'Divino Affilante Spiritu' என்ற சுற்றுமடலில், “இந்த வேதாகமம் விசுவாச ஒழுக்க விஷயத்தில் எவ்விதத் தப்பறையும் அற்றது” என்று சாட்சி சொல்கிறார்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கிற இந்த வுல்காத்தா புதிய ஏற்பாடு 1955-ம் ஆண்டு தூத்துக்குடி மேற்றிராணியார் வந். தாமஸ் ஆண்டகையவர் களுடைய Imprimatur-உடன் (அச்சிடலாம்) வெளிவந்த பிரதியின் மறுபதிப்பாகும்.

முன்பு புதுவை மாதாக்கோயில் அச்சுகூடத்தில் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் வடிவம் இந்த பதிப்பில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

முந்தைய பதிப்பில் இருந்த அச்சுப் பிழைகள் நீக்கப்பட்டு, அர்த்தம் மாறாத வகையில் ஒரு சில வார்த்தைகள் திருத்தப்பட்டிருக்கின்றன. (காண்க பிற்சேர்க்கை பக்கம் V).

மேலும் இப்பழைய மொழிபெயர்ப்பில் பல இடங்களில் வடமொழி பயன்படுத்தப்பட்டிருப்பதால், எளிதாகப் புரிந்துகொள்வதற்கு 'சொற்பொருள் விளக்கம்' என்ற பகுதி (பக்கம் 1- IV) சேர்க்கப்பட்டிருக்கிறது.

2007, பெப்ருவரி 2-ம் தேதி தொடங்கிய இப்பணி பல தடங்கல்களுக்குப் பின் சர்வேசுரனுடைய உதவியோடு முடிவிற்கு வந்துள்ளது. Deo Gratias!

இப்பதிப்பு வெளிவர ஆதரவும், ஊக்கமும் தந்து ஒத்துழைத்த திருச்சபை அதிகாரிகள், குருக்கள், பொதுநிலையினர் அனைவருக்கும், குறிப்பாக பிழை திருத்தித் தந்தவர்களுக்கும் மற்றும் உபகாரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பதிப்பைத் தொடர்ந்து, பழைய ஏற்பாடும் வெளிவர உங்களுடைய உதவியையும், ஆதரவையும் கோருகின்றோம்.

கர்த்தர் பிறந்த திருநாள், 2010
Salve Regina Publications, Palayamkottai - India.