இரக்கத்தின் திருநாளுக்கு நவநாள்.

மேற்கூறிய சேசுவின் இரக்கத்தின் திருநாளுக்கு நவநாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது. இந்த இரக்கத்தின் நவநாளை எப்படி அனுசரிப்பதென்று சேசுவே சகோதரி பவுஸ்தீனாவுக்குக் கற்பித்தார்.

“ஒன்பது நாட்களிலும் எனது இரக்கத்தின் ஊற்றுக்கு ஆன்மாக்களை அழைத்துவர வேண்டும். அவர்கள் அந்த ஊற்றிலிருந்து பலமும், உற்சாகமும் பெறுவார்கள். சோதனைகளிலும், சிறப்பாக மரண வேளையிலும் தேவையான அருளை அடை வார்கள். ஒவ்வொரு வகையான ஆன்மாக்களை அழைத்து வந்து, எனது இரக்கக் கடலில் மூழ்க விடு. ஒவ்வொரு நாளும் இவ்வான்மாக்களுக்குத் தேவையான அருளை எனது கசப்பான பாடுகளின் வழியாகப் பிதாவிடம் கெஞ்சிக் கேள்” என்றார். இந்த நவநாளை இதர நாட்களிலும் அனுசரிக்கலாம்.

சகோதரி பவுஸ்தீனா, எவ்வகையான ஆன்மாக்களை முதலில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று தெரியாமல் தவித்தபோது சேசுதாமே அதை அவளுக்குக் கற்பித்தார்.

முதல் நாள் : பாவிகள், உலக மக்கள்.
இரண்டாம் நாள் : குருக்கள், துறவியர்கள்.
மூன்றாம் நாள் : விசுவாசிகள்,  பக்தியுடையவர்கள்.
நான்காம் நாள் : நாஸ்தீகர், கடவுளை அறியாதவர்கள்.
ஐந்தாம் நாள் : வேத விரோதிகள், பிரிவினைக்காரர்கள்.
ஆறாம் நாள் : தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள வர்கள், குழந்தைகள்
ஏழாம் நாள் : இறைவனின் இரக்கத்தை சிறப்பாக மதித்து ஆராதிப்பவர்கள்.
எட்டாம் நாள் : உத்தரிக்கும் ஆன்மாக்கள்
ஒன்பதாம் நாள் : வெதுவெதுப்புள்ளவர்கள் ஞான  அசமந்தம் உடையோர்.

இந்தக் கடைசி கூட்டத்தினரைப் பற்றி நமதாண்டவர் சொன்னது: “ஜெத்சமெனித் தோட்டத்தில் இவர்களது காட்சிதான் எனக்குச் சொல்ல முடியாத வேதனை தந்தது. இவர்களை நினைத்துத் தான், “பிதாவே!  கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு அகலட்டும்” என்று சொன்னேன். இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை, எனது இரக்கத்தில் அடைக்கலம் தேடுவதுதான்.”