அர்ச். சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்

தேவ அன்னையினால் மிகவும் நேசிக்கப்பட்டவரும் சேசுவின் சீடருமான அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே திருச்சபையின் எதிரிகளால் துன்புறுத்தப்பெற்ற ஸ்பெயின் நாட்டு கிறீஸ்தவர்களுக்கு இரங்கி வெள்ளைக் குதிரை மேல் ஏறி எதிரிகள் படையை முறியடித்த புனித அப்போஸ்தலரே! அறநெறியை விரும்பாதவர்களாலும், பிசாசுகளினாலும் வீண், பொய், மாயைகளினாலும் நான் படும் துயரம் எவ்வளவோ பெரிதாகியிருக்கிறது. நான் விரும்புகின்ற நன்மையை அல்ல, நான் விரும்பாத தீமையையே செய்ய ஏவப்பட்டு பரிதவிக்கிறேன்.  நெருக்கப்படுகிற நாளில் என்னைக் கூப்பிடு  அப்போது நான் உன்னை விடுவிப்பேன் என்ற வேத வாக்கியத்தை நினையாமல் உருக்கமாக ஜெபம்செய்ய மறந்து என் ஆபத்துக்களில் மிகவும் பரிதவிக்கிறேன். கேளுங்கள் கொடுக்கப் படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வேதவாக்கை  துன்ப வேளையில் மறந்து போகிறேன். நீர் என்மீது இரக்கம்வைத்து எனக்காக கடவுளை மன்றாடி என் ஆபத்துவேளையில் நான் வெற்றி பெற எனக்குத் துணையாகவாரும். நான் பலவீனன் நான் செய்த பாவங்களே என்னை நெருக்கத் தொடங்குகின்றன. எனக்கு நேரிட்டிருக்கும் துன்பங்களாகிய சிலுவையை  நான் சுமக்க வேண்டும் என்பது அவர் சித்தமானால் அவர் திருச்சித்தம் நிறைவேறட்டும். ஆபத்துக்களில் உதவுகிற அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்கள் அன்புக் காவலரே, நான் என் பலவீனங்களில் தடுமாறி விழாமல் காத்தருளும்.

இரக்கம் நிறைந்த அப்போஸ்தலரே துன்ப வேளையில் உதவி செய்யும் அற்புதரே! என்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களிலும், ஆபத்துக்களிலும் நான் அலைக்கழிக்கப்பட்டு, கலங்காதபடி என்னைத்தேற்றி அரவணைத்தருளும் அன்று எதிரியின் படையை முறியடிக்க உம்மை நம்பி அபயமிட்ட ஸ்பெயின் நாட்டவருக்கு உதவியாய் வந்து அவர்களுக்கு வெற்றி அளித்தது போல், இருகரம்கூப்பி உம்மைநோக்கி அபயமிடும் எங்களுக்கு இவ்வேளையில் உதவியாய் வந்து, என்னைச் சூழ்ந்து நிற்கும் ஆன்ம எதிரிகளை முறியடித்துத் துரத்தி தேவ உதவியால் நான் முழுவெற்றி அடைய எனக்காக கடவுளை மன்றாடும்!

ஆண்டவராகிய சர்வேசுரன் உமது மன்றாட்டினால் என் வேண்டுதலைக் கேட்டருள்வார். நீர் கூவி அழைத்த தேவ அன்னை விரைந்து வந்து உமக்கு உதவி செய்தது போல், நீரும் என் மரண நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்து நான் நல்ல மரணம் அடைந்து, முடிவில்லாப் மோட்ச பாக்கியத்தைப் பெற சர்வேசுரனை நோக்கி மன்றாடும். 

ஆமென்