G Pay Number:
✠ Catholic Tamil ✠ கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியக் களஞ்சியம் ✠
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- Disclaimer
- Contact Us
- Donation
- இணையதளம் நிலைக்க உதவுங்கள்
இணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்!
G Pay Number:
நற்கருணைப் பேழையைப் புனிதப்படுத்துதல்
குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் திருவுடலை வழிபடவும், நோயாளிகளுக்குத் திருவுணவாக வைத்துக் காப்பதற்காகவும் இப்பேழையை அமைத்துள்ளோம். உமது அருளைப் பொழிந்து இதனை ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்துவீராக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)
கதிர்ப் பாத்திரத்தைப் புனிதப்படுத்துதல்
(இத்திருச்சடங்கைத் திவ்விய நற்கருணை வழிபாட்டுக்கு முன் வைத்துக்கொள்வது சிறந்ததாகும். உடனே திவ்விய நற்கருணை ஸ்தாபகம் தொடர்ந்து, வழக்கப்படி ஆசீர்வாதம் வழங்கலாம்.)
குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலைத் தாங்கி, விசுவாசிகளின் ஆராதனைக்காக வைக்கப்பட இப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இதன் வழியாக உம் திருமகனை இவ்வுலகில் பக்திப் பற்றுதலோடு வழிபடுவோர் அனைவரும் மறு உலகில் முடிவில்லாப் பேறுபலனைப் பெறவேண்டும் என அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)
திருக்கிண்ணம், திருத்தட்டு புனிதப்படுத்துதல்
1. திருப்பலி நேரத்தில் புனிதம் செய்ய விரும்பின், முன் குறிப்புகளையும் சடங்குகளையும் வாசகங்களையும் 'கோயிலையும் பீடத்தையும் நேர்ந்தளிக்கும் சடங்குமுறை` என்னும் புத்தகத்தில் பக்.153-157 காண்க.
2. திருப்பலிக்குப் புறம்பே மந்திரிக்கும் சடங்குமுறை இங்குத் தரப்பட்டுள்ளது. மக்களுக்கு முன் நிறைவேற்றுவது சிறப்பு.
3. இவை நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு மட்டும் நிலையாக ஒதுக்கப்படுவதால் 'புனித பாத்திரங்கள்' ஆகின்றன.
4. திருக்கிண்ணத்தையும் திருத்தட்டையும் எந்தக் குருவும் புனிதம் செய்யலாம். ஆனால் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை (எண் 290-295) தரும் விதிகளுக்கொப்ப அவை உருப்பெற்றிருக்க வேண்டும்.
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: நம் மீட்புக்காகத் தம் உடலையும் இரத்தத்தையும் அளித்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும். தூய ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக
அருள்வாக்கு : 1 கொரி.11:23-26
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் : திபா. 16:5, 8 -11
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்.
1. எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
2. என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி
3. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
(குரு மறையுரை ஆற்றலாம்.)
(பின்பு பணியாளர்கள் அல்லது திருக்கிண்ணத்தையும் திருத்தட்டையும் அளிக்கின்றவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அவற்றைப் பவனியாகக் கொணர்ந்து பீடத்தின்மேல் வைப்பர். அப்போது பாடப்படும் பல்லவி:)
மீட்புக்காக நன்றி கூறி, கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவியழைப்பேன்.
(பின்பு கைகளை விரித்துக் குரு சொல்வதாவது:)
குரு: மன்றாடுவோமாக:
எங்கள் அன்புத் தந்தையே, இக்கிண்ணத்தையும் அப்பத் தட்டையும் மகிழ்ச்சியோடு இப்பீடத்தின்மீது வைத்து நிற்கும் உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும். உம்முடைய மக்களின் ஒருமித்த விருப்பத்தால், புதிய உடன்படிக்கையின் திருப்பலியைக் கொண்டாட மட்டும் பயன்படும் இப்பாத்திரங்களை ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இவ்வுலகில் திருப்பலி நிகழ்த்தி, திருவருட் சாதனங்களால் ஊட்டம் பெறும் நாங்கள் வானுலகில் புனிதர்களோடு உமது திருவிருந்தை அருந்தும்வரை தூய ஆவியினால் நிரப்பப்பெற அருள்புரியும். புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கே உரியனவாகுக.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
பொது மன்றாட்டுகள்
(இம் மன்றாட்டுகளைத் திருப்பலியிலும் பயன்படுத்தலாம்.)
குரு: உயிர்தரும் உணவாகவும் மீட்பளிக்கும் கிண்ணமாகவும் தம்மையே திருச்சபைக்கு இடைவிடாது கையளிக்கின்ற நம் ஆண்டவர் இயேசுவை வேண்டுவோம்.
பதிலுரை: வானக அப்பமே, எமக்கு வாழ்வளித்தருளும்.
1. எங்கள் மீட்பரே, தந்தையின் திருவுளத்திற்குப் பணிந்து, பாடுகளின் கிண்ணத்தில் பருகி எங்களை ஈடேற்றினீர். நாங்கள் உமது மரணத்தின் மறைபொருளில் பங்கேற்று, வானகம் வந்து சேரச் செய்தருளும்.
2. உன்னத கடவுளின் குருவே, நீர் திருப்பீடத்தின் அருட்சாதனத்தில் எழுந்தருளியிருக்கின்றீர், அப்பிரசன்னத்தை நாங்கள் விசுவாசத்தால் கண்டுணரச் செய்தருளும்.
3. எங்கள் நல்லாயனே, சீடருக்கு உம்மையே உணவும் பானமுமாக அளித்தீர். உம்மை உட்கொண்டு நிறைவு பெற்ற நாங்கள் உமது சாயலாக உருமாறச் செய்தருளும்.
4. இறைவனின் செம்மறியே, அப்ப இரச வடிவில் பாஸ்கா மறைபொருளைக் கொண்டாட உமது திருச்சபைக்குப் பணித்தீர். இறைமக்கள் அனைவருக்கும் திருப்பலி ஞானவாழ்வின் ஊற்றாகவும் கொடுமுடியாகவும் இருக்கச் செய்தருளும்.
5. இறைவனின் திருமகனே, வாழ்வளிக்கும் அப்பத்தையும் மீட்பளிக்கும் பானத்தையும் எங்களுக்கு நிறைவாகத் தந்து, உம்மீது உள்ள பசியையும் தாகத்தையும் வியத்தகு வகையில் தணிக்கிறீர். இதனால் நாங்கள் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்திடச் செய்தருளும்.
இயேசு கற்பித்த செபம்
குரு: சகோதரரே. நமது வேண்டுதல் கிறிஸ்துவின் செபத்தால் உச்சநிலை அடைகிறது. ஏனெனில் அவர் சிலுவையில் அறையுண்டு மீட்பின் இணைப்பாளரானார். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிச் செபத்தின் ஆசிரியரானார். எனவே, அவரோடு சேர்ந்து அவரது செபத்தைச் சொல்வோம்.
எல்: பரலோகத்திலிருக்கிற ...
இறுதி செபம்
குரு: இறைவா, உம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் மக்கள் அனைவரையும் மீட்டருளினீர். இரக்கம் மிகுந்த உமது மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருப்பதாக. இவ்வாறு நாங்கள் கிறிஸ்துவின் மறைபொருளை இடைவிடாது நினைவுகூர்ந்து, எங்கள் மீட்பின் பலனை அடையச் செய்தருளும். உம்மோடு என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
ஆசியுரை
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்.
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்.
எல்: இறைவா, உமக்கு நன்றி.
திருமேனித்துகிலையும், பாத்திர அட்டையையும் புனிதப்படுத்துதல்
குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது வல்லமை சொல்லற்கரியது. உம்முடைய அருட்சாதனங்கள் மறைவான அருஞ் செயல்களால் கொண்டாடப்படுகின்றன. இறைவனும் உம் திருமகனுமான எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடலையும் இரத்தத்தையும் தொடவும், தாங்கவும், பாதுகாக்கவும் பயன்படுகின்ற இவற்றை ✠ ஆசீர்வதித்துப் புனிதமாக்கியருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு அவற்றின் மீது தீர்த்தம் தெளிக்கின்றார்.)
பலிபீடத் துணிகளைப் புனிதப்படுத்துதல்
குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவரே, பலிபீடத் துணிகளையும் அணிகளையும் உருவாக்க உம் ஊழியர் மோசேக்குக் கற்றுத் தந்தீர். மிரியம் அவற்றை நெய்து, உடன்படிக்கைக் கூடாரத்தின் பணிக்கு ஏற்றவாறு அமைத்தார். இறைவா, எங்கள் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்து, மகிமை மிகுந்த உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசுகிறிஸ்துவின் திருப்பீடத்தில் விரித்து அலங்கரிப்பதற்கான இத்துணிகளை (இத்துணியை) ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு அவற்றின்மீது தீர்த்தம் தெளிக்கிறார்:)
திரு உடையைப் புனிதப்படுத்துதல்
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா உம் திருமுன் குருகுலத்தார் திருப்பணியாற்றும்போது, உமது பெயரின் மகிமையும் மாண்பும் விளங்க அவர்களுடைய திருவுடைகளை மோசே வழியாக ஏற்பாடு செய்தீர். எங்கள் வேண்டுதல்களுக்கு இரங்கி, வானின்று உமது அருளைப் பொழிந்து, குருத்துவப் பணிக்குரிய இவ்வுடைகளை ஆசீர்வதித்துப் புனிதமாக்கியருளும். இதனால் இவை திருவழிபாட்டிற்கும் அருட்சாதனக் கொண்டாட்டங்களுக்கும் ஏற்றவையாகிட இறையாசி பெறுவனவாக. மேலும் இவற்றை அணியும் ஆயர்களும் குருக்களும் திருப்பணியாளர்களும் தூய ஆவியின் ஏழு அருட்கொடைகளும் உறுதியான பாதுகாப்பும் பெறுவார்களாக. அவர்கள் உம் அருட்சாதனங்களை உள்ளுணர்வோடு நிறைவேற்றி, உமக்கு ஏற்றவாறு பணிபுரியவும், இவ்வாறு பக்திப்பற்றுதலும் அமைதியும் கொண்டு இறுதிவரை நிலைத்து நிற்கவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய ...
எல்: ஆமென்.
(குரு அவற்றின்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)