பாத்திமா காட்சிகள் - இப்பெரும் அதிசயம் ஏன்?

சேசுவின் காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ள அற்புதங்களில் மிகப் பெரியது பாத்திமாவில் நிகழ்ந்த சூரிய அதிசயமே என்று நாம் திட்டமாகச் சொல்ல முடியம்.  இப்பெரும் அதிசயம் ஏன்?  இதன் காரணம் என்ன?  அன்னையின் அன்பே காரணம்!

தற்காலம் எப்படிப்பட்டது? விஞ்ஞான வளர்ச்சியால் கடவுளை மக்கள் ஏற்க மறுக்கும் காலம்! விசுவாசம் தளர்ந்து விட்டது. சர்வேசுர னையும், நித்திய உண்மைகளையும் மனிதர்கள் நம்ப மறுக்கிறார்கள். அப்படியானால் கடவுளை எப்படி நேசிப்பார்கள்? உலகமே கதி என்றுதான் மனிதன் அலைகிறான்.  தான் கடவுளின் பிள்ளை என்பதை அறியவோ, அதன்படி நடக்கவோ அவன் விரும்பவில்லை.

கடவுளை மறந்தும், மறுத்தும், அலட்சியப்படுத்தியும் வாழும் மனிதன், தன் அயலாரை சகோதரர்களாக எப்படி நினைக்க முடியும்?  கடவுள் நம் தந்தை, ஆகவே அவருடைய மக்களான நாம் ஒருவருக் கொருவர் சகோதரர் என்ற அடிப்படை மறுக்கப்பட்டவுடன், மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக மாறுகின்றனர். எனவே உலகில் பகையும், சண்டையும் பழிவாங்குதலும் மிகுந்து வருகின்றன.

வினை விதைப்பவன் வினையைத்தான் அறுப்பான். தேவ அன்பு, மற்றும் பிறரன்பு பகையாக மாறியபின் தேவ நீதியின்படியும், மனிதனின் வினைப் பயனாகவும் உலகில் அழிவும், நாசமும், போரும், பகையும், பஞ்சமும், கொள்ளையும் எல்லா விதமான குரூர அக்கிரமங்களும்தான் வர முடியும். அவை வரவும் செய்கின்றன. 

இத்தனை கேட்டிலும் ஆயிர மடங்கு அதிகமான கேடு ஒன்று உள்ளது.  அதுவே மனிதர்கள் நித்திய நரகத்தில் பசாசுக்களுடன் நெருப்பில் புதைபட்டு, அங்கே  “அவர்கள் தங்களை வாதிக்கும் புழுவும் சாகாமல், அக்கினியும் அணையாமல்” நித்திய காலம் துன்புறும் நிலை! 

யார்தான் இதனைக் கண்டு அஞ்சாதிருக்க முடியும்! சேசுக்கிறீஸ்துவும் மாமரி அன்னையும் சிலுவையிலும், சிலுவையின் அடியிலுமாக இருந்து, இவற்றிலிருந்து நமக்கு மீட்பு அளித்தார்கள்.  அம்மீட்பை நாம் நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும்.  விசுவாசமே இல்லாத போது, தேவ அன்பு எங்கிருந்து வரும்?  

எனவேதான் விசுவாசம் குன்றிய இக்காலத்தவர்-- எதையும் நம்பாமல் இருப்பதில் பெருமை கொள்கிற உலகவாதிகள், “யாவரும் நம்பும்படியாக”-- நம்பி விசுவாசம் கொள்ளும்படியாக நமதன்னை சர்வேசுரனிடம் மன்றாடி, இம்மாபெரும் சூரிய அதிசயத்தை உலகிற்குக் காட்டினார்கள். 

13.10.1917 சனிக்கிழமை நடுப்பகல் வேளையில் நடைபெற்றது இவ்வற்புதம்!  மூன்று மாதங்களுக்கு முன்பே மூன்று சிறுவர்களால் முன்னறிவிக்கப்பட்டிருந்தது.  அன்று அங்கு கூடி நின்ற 70,000க்கும் அதிகமான மக்கள் (நாஸ்திகர் உட்பட) யாவரும் அதைக் கண்டு ஒப்புக்கொண்டனர்.  

சர்வேசுரன் இருக்கிறார் என்ற உண்மை மட்டுமல்ல, அம்மூன்று சிறுவருக்கும் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளும், அவ்வுண்மைகளைப் போதிக்கும் சத்தியத் திருச்சபையின் போதனை அத்தனையும் மெய் என்று இவ்வற்புதத்தால் சர்வேசுரன் இந்நவீன விஞ்ஞான உலகிற்கு ஐயத்திற்கிடமின்றி அறிவுறுத்துகிறார்.  

இன்னமும் உலக மக்கள் இதை மறுப்பார்களானால், அதன் பலனை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.  சர்வேசுரனும் அவர் திருத்தாயாரும் உலகிற்குச் செய்ய வேண்டிய யாவற்றையும் செய்திருப்பதால், இதற்கு மேலும் மானிடர் தீமையை நாடி நரகத்தில் விழுந்தால், அது அவர்களின் சொந்த தெரிதலேயாகும்.

பாத்திமாவை உலகம் நம்புமா?  நம்பி திருந்துமா?  இதனைப் படிக்கும் அன்பரே!  பாத்திமாவில் நம் அன்னை கேட்டுக் கொண்ட ஜெபம், ஜெபமாலை, ஒறுத்தல், கிறீஸ்தவக் கடமைகளைச் சிரமம் பாராது ஒழுங்குடன் நிறைவேற்றுதல், உத்தரியம் அணிதல், மாமரியின் மாசற்ற இருதயத்தின் மீது அன்பு, முதல் சனிக்கிழமை அனுசரித்தல் போன்ற நற்காரியங்களைத் தாங்களும் செய்து, பிறரும் செய்யச் செய்யுங்கள்.  உங்களுக்கு அதுவே பாத்திமா காட்சிகளின் பயனாகும்.
மகிமைக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.