சேசு சுவாமியின் ஐந்து திருக்காய ஆராதனை.

"என்னிடம் வாருங்கள்" (மத்: 11/28)

தொடக்க செபம்:

புனித அருட்சாதனமே! தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.

வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம். முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

ஆண்டவர் மாண்புமிகு இறைவன்! தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்! பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன, மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. வாருங்கள், நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

கடலும் அவருடையதே! அவரே படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. வாருங்கள்; தாழ்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

புனித அருட்சாதனமே, தெய்வீக தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும் நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.

விசுவாச முயற்சி:

இறைவா! நீர் இந்தப் பீடத்தில் உண்மையாகவே வீற்றிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறோம். உம் திரு முன்னிலையில் எங்களைத் தரை மட்டும் தாழ்த்தி, மனம் மொழி மெய்யால் மரியாதை செலுத்துகிறோம். மனமே, இயேசுவின் அருகில் இருப்பதும், அவரோடு உள்ளம் திறந்து பேசுவதும், நமக்கு எத்துணை ஆறுதல்.

ஆண்டவரே! இம்மையில் உம்மை ஆராதிக்கும் நாங்கள், மறுமையிலும் இன்னும் சிறந்த முறையில் உம்மை ஆராதிக்க அருள் தாரும். ஆமென்.

அன்பு முயற்சி:

அன்பு நிறை இயேசுவே! உமது அன்புக்கு எல்லைதான் உண்டோ? உமது உடலாலும் இரத்தத்தாலும் எமக்கு ஒரு தெய்வீக விருந்தினை தயார் செய்துள்ளீர். அதில் உம்மை முழுவதும் எமக்கு கொடுக்கின்றீர். இந்த அன்பின் உச்ச நிலைக்கு உம்மை தூண்டியது உமது இதயமன்றோ! அன்பொழுகும் இதயமன்றோ?

ஆராதனைக்குரிய இயேசுவின் திரு இருதயமே, தேவ அன்பின் சூளையே! உமது திருக்காயத்தினுள் என்னை ஏற்றுக்கொள்ளும். அன்பு புகட்டப்படும் அப்பள்ளியில், அளவிறந்த அன்பினை வியத்தகு முறையில் காட்டும் ஆண்டவருக்கு நான் காட்ட வேண்டிய அன்பின் கடமையை உணர்வேனாக.
ஆமென்.

திருக்காய ஆராதனை.

இடக்கால் காயம்:

இயேசுவே! இந்தத் திருவருட்சாதனத்தில் இருக்கும் உம் முன் நான் தாழ்ந்து ஆராதிக்கின்றேன். நீர் உண்மையாகவே கடவுள், உண்மையாகவே மனிதன் என்று ஏற்றுக் கொள்கிறேன்.

தேவரீர் எம் ஆலயங்களில் இடைவிடாமல் வீற்றிருக்கின்றீர். உம்மை முழுவதும் எமக்களிக்க அன்போடு ஏங்குகின்றீர். எனினும், உமது ஆலயத்தை அடுத்துசெல்லும் எத்தனை பேர், ஏன் உமதுபீடத்தின் அருகில் வரும் எத்தனை பேர், உமக்கு உகந்த மரியாதை செலுத்தத் தவறுகின்றனர். பழங்காலத்தில் இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் செய்தது போல, இன்றும் எத்தனை பேர் நற்கருணை என்னும் உயிருள்ள மன்னா மீது பற்றுக் கொள்ளாமல் அதை புறக்கணிக்கிறார்கள்.

இவர்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக என் அற்ப ஆராதனையைக் கொடுக்கிறேன். இவர்களுடைய கல்மன செயலுக்குப் பரிகாரமாக, உமது இடக்கால் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.

புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.

வலக்கால் காயம்:

இயேசுவே! உம் திருமுன் நான் தாழ்ந்து ஆராதிக்கிறேன், இந்தப் பீடத்தில் நீர் வீற்றிருக்கின்றீர் என்று ஏற்றுக் கொள்கிறேன். நோயுற்றவர்களுக்கு குணம் அளிக்க விண்ணக வீட்டுக்கு விரைந்து செல்வோருக்கு துணை நிற்க தேவரீர் எம் தெருக்களில் செல்லும் போது, எத்தனையோ மக்கள் உம்முடன் வர மறுக்கின்றனர். உமக்கு மரியாதை காட்ட மறக்கின்றனர். இவர்கள் செயலுக்கு பரிகாரம் செய்ய விழைகின்றேன். மரியாதையற்ற இவர்கள் நடத்தைக்குப் பரிகாரமாக உமது வலக்கால் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.

புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.

இடக்கை காயம்:

இயேசுவே! நித்திய வாழ்வுதரும் உணவே, உம் திருமுன் நான் தாழ்ந்து ஆராதிக்கிறேன். கோயில்களில் அப்ப இரசத் தோற்றத்தில் நீர் அமைந்திருந்து உம் மக்களின் ஆராதனை அன்பு பெற ஆவலோடு காத்திருக்கின்றீர். ஆனால் எத்தனையோ கோயில்களில் மக்கள் அன்பின்றி அச்சமின்றி நடந்து கொள்கின்றனர். இதற்கெல்லாம் பரிகாரமாக என் ஆராதனையை ஒப்புக் கொடுக்கிறேன். இவர்களுடைய மரியாதையற்ற செயலுக்குப் பரிகாரமாக உமது இடக்கை காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.

புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.

வலக்கை காயம்:

இயேசுவே! விண்ணின்று வந்த வாழ்வு தரும் உணவே, உம் திருமுன் நான் தாழ்ந்து ஆராதிக்கிறேன். எம் ஈடேற்றத்திற்காக நீர் கல்வாரி மலையில் நிறைவேற்றிய அதே பலியை பீடங்களில் இரத்தம் சிந்தா முறையில் புதுப்பிக்கின்றீர். ஆனால் அந்தப் பலியின்போது எத்தனையோ மக்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்கின்றனர். இதற்குப் பரிகாரம் செய்ய விரும்புகின்றேன். மக்கள் நற்கருணைப் பலியில் நடந்து கொள்ளும் நன்றி மறந்த நடத்தைக்குப் பரிகாரமாக, நீர் உம் வலக்கை காயத்திலிருந்து சிந்திய இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அக்காயத்தில் நான் தங்கி, எங்கும் கேட்குமாறு இறைந்து, இடைவிடாது கூறுவேன்.

புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.
ஆமென்.

திருவிலாக்காயம்:

இயேசுவே! பாவங்களுக்குப் பரிகாரம் செலுத்தும் பலிப்பொருளே. உம திருமுன் தாழ்ந்து ஆராதிக்கிறேன். எத்தனையோ பேர் சாவான பாவத்தோடு உம்மை அணுகி நற்கருணை வாங்குகின்றனர். இந்த நன்றிகெட்ட மக்களின் தேவ துரோகத்திற்காக பரிகாரம் செலுத்த விரும்புகிறேன். இவர்களுடைய வெறுக்கத்தக்க தேவ துரோகங்களுக்குப் பரிகாரமாக, உமது திருவிலாக் காயத்தில் நீர் சிந்திய இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
ஆராதனை, அன்பு, நன்றியறிதல் உணர்வோடு நான் அக்காயத்தில் நுழைந்து நற்கருணைப் பக்தி மிகுந்த உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களோடு சேர்ந்து உரத்த குரலில் கூறுகிறேன்.

புனித அருட்சாதனமே, தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.

செபிப்போமாக:

பீடத்தில் வீற்றிருக்கும் அன்பார்ந்த இயேசுவே! உமக்கு என்றென்றும் நன்றி கூறிப் புகழ் செலுத்துகிறோம். விண்ணிலும் மண்ணிலும் எல்லோருடைய அன்புக்கும் உகந்த பேரன்பே, நன்றிகெட்டப் பாவியான என் மீது நீர் வைத்த அளவற்ற அன்பினால் மனித இயல்பை எடுத்தீர், கொடிய கசையடிகளால் விலையுயர்ந்த இரத்தத்தை சிந்தினீர், எங்களது நித்திய நன்மைக்காக அவமான சிலுவையில் உயிர் துறந்தீர். இப்பொழுது வாழ்வில் விளங்கும் விசுவாசம் எனக்கு வழிகாட்ட என் உள்ளத்தின் அன்பு ஆர்வமெல்லாம் உம் அடியில் அள்ளி வைத்து நான் தாழ்ச்சியுடன் வேண்டுகிறேன். வேதனை நிறைந்த உம் பாடுகளின் அளவற்ற பேருபலன்களை முன்னிட்டு எனக்கு மன உறுதியும் ஊக்கமும் தந்தருளும். என் இதயத்தில் ஆதிக்கம் செலுத்தும் தீய இச்சை ஒவ்வொன்றையும் கொன்று வீழ்த்த, மாபெரும் துன்பத்திலும், உம்மை புகழ என் கடமைகளை எல்லாம் சரியாக நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த, முக்கியமாக எல்லாப் பாவத்தையும் வெறுத்து, அவ்வழியாய் ஒரு புனிதனாக வாழ எனக்கு மன உறுதியும் ஊக்கமும் தந்தருளும்.

இயேசுவின் மதுரமான திரு இதயமே! எங்கள் மீது இரக்கமாயிரும். (3)

மன்றாட்டு:

அன்புக்குரிய மீட்பரே! உம்மை ஆராதித்தோம், உமக்கு நன்றி கூறினோம், பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய முயன்றோம், இப்பொழுது ஏழைகளாகிய எமக்கும், எம்மை சேர்ந்தோருக்கும் வேண்டிய உதவிகளைத் தாழ்மையோடு கேட்க விரும்புகிறோம்.

இயேசுவே! முடிவில்லா நன்மை சுரக்கும் ஊற்றே! உமது உலக வாழ்வில், துன்புற்றோருக்கு ஆறுதல் அளித்தீர், நோயாளிகளுக்கு நலம் அருளினீர், தளர்ச்சி அடைந்தோருக்கு ஊக்கம் தந்தீர், உம் திருமுன் இருக்கும் என்னை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். என் நினைவை, அறிவை, மனதை, உடலை, உள்ளத்தை ஆசீர்வதியும். என்னுடைய கருத்துக்கள் நிறைவேறும்படி ஆசீர்வதித்தருளும்.

(நமது தனிப்பட்ட வேண்டுதல்)

இனிய மீட்பரே! இங்கு வந்து உம்மை ஆராதிக்க இயலாத அனைவரையும் ஆசீர்வதியும். எங்கள் இல்லங்களை, முதியோரை, பெற்றோரை, இளைஞரை, சிறுவர்களை, உற்றார், நண்பர்களை ஆசீர்வதியும். அனைவரையும் அணைக்கும் மீட்பரே, எம் பங்கில் உள்ள அனைவரையும் சிறப்பாக ஏழைகளை, தாழ்வுற்றவரை, நோயாளிகளை, துன்புற்றோரை, ஆசீர்வதியும்.

நித்திய குருவே உமக்குத் துணை செய்யும் குருக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பதில் தனி அக்கறை காட்டினீர். உலகில் உமக்காக உழைக்கும் குருக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து புனிதப்படுத்தியருளும்.

ஆமென் சேசு.