நாஸ்தீக ஆட்சி பீடமும், வேத எதிர்ப்பாளரும் இன்னல் பல செய்யச் செய்ய மக்களின் விசுவாசமும், தேவ அன்பும் துளிர்விட்டு வளரத் தொடங்கின. ஒவ்வொரு 13-ம் தேதியிலும் கோவா தா ஈரியாவுக்கு மக்கள் திருயாத்திரையாக வரத் தொடங்கினார்கள்.
ஞாயிறு தோறும் சற்று அதிகமான மக்கள் வந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சிலராவது அங்கு வராமலிருப்பதில்லை. அங்கு வந்து அன்னையை மன்றாடி, அந்த அஸின்ஹேராவின் கிளையைத் தொட்டால் கூடப் போதும் என்ற நம்பிக்கையுடன் பலர் வந்து ஜெபித்துச் சென்றனர்.
பல நோயாளிகள், அங்கயீனர், மனதில் நொந்தவர்கள், இப்படிப் பலதரப்பட்டவர்களும் கோவா தா ஈரியாவில் குழுமியதால், அது ஒரு திருயாத்திரை ஸ்தலமாக மாறிக் கொண்டு வந்தது.
காட்சி பெற்ற குழந்தைகளைப் பார்க்கவும், கண்டு பேசவும் பலர் விரும்பியதால், தினமும் அக்குழந்தைகள் ஆடு மேய்க்கும் இடத்திற்கு ஆள் சொல்லியனுப்ப வேண்டியிருந்தது. பிரான்சிஸ், ஜஸிந்தா இருவரையும் இப்படி ஓயாமல் கூப்பிட்டு விட்டு ஒலிம்பியா மிகவும் இன்னலடைந்தாள்.
எனவே சீக்கிரத்தில் அவர்களின் அண்ணனை ஆடு மேய்க்க அனுப்பி விட்டு, பிரான்சிஸையும், ஜஸிந்தாவையும் வீட்டிலேயே நிறுத்திக் கொண்டாள். லூஸியாவுடன் பேச முடியாமல் இப்படி ஆகி விட்டதே என்று இவ்விருவரும் வருந்தினார்கள். ஆனால் வெகு விரைவில் லூஸியாவும் ஆடு மேய்க்கும் அலுவலிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.
அந்தோனி சாந்தோஸும், மரிய ரோஸாவும் தங்கள் இளைய மகள் லூஸியா கூறிய யாவும் உண்மை என்றும், அவள் ஏமாற்றப் படவில்லை, யாரையும் அவள் ஏமாற்றவுமில்லை என்றும் அக்டோபர் 13-ம் நாள் நடந்த அற்புத நிகழ்ச்சியிலிருந்து ஐயத்திற்கிடமின்றி அறிந்து கொண்டார்கள்.
ஆயினும் கோவா தா ஈரியாவில் தங்கள் வயல்கள் முழுவதும் சாகுபடி எதுவும் செய்ய இயலாதபடி திருயாத்ரீகர்களால் மிதிபட்டு இறுகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டத்தால் மனம் வாடியிருந்தார்கள். சாதாரண பாமரக் குடியானவர்கள் அவர்கள்!
அத்தியந்த பக்தியடைத்தான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.