இணையதள நோக்கம்.

✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். 

✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.

சேசுக்கிறீஸ்து நாதரில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே! அன்பான கத்தோலிக்க விசுவாசிகளே! நமது ஆண்டவருடைய மகா பரிசுத்த திருநாமத்தில் உங்கள் அனைவரையும் நான் அன்போடு வாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த இணையதளம் மூலமாக உங்களனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகா பெரிய கிருபைக்காக நம் ஆண்டவருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். 

கத்தோலிக்க வேத சத்தியங்களை சற்று ஊன்றி தியானிப்பது இன்றைய அவசியத் தேவையாய் இருக்கின்றது. இன்று அநேக கத்தோலிக்கர்கள் தங்களுடைய வேதத்தை, வேத சத்தியங்களை அறிந்துகொள்ள கொஞ்சம் கூட எந்த முயற்சியும் செய்யாமல் முற்றிலும் அறியாமையில் இருக்கின்றார்கள் என்று சொன்னால் மிகையாகாது. 

அநேகர் ஞாயிற்றுக்கிழமை திவ்விய பலிபூசைக்கு (திருப்பலிக்கு) செல்வதேயில்லை. அதனுடைய முக்கியத்துவத்தை அவர்கள் உணர்வதேயில்லை. ஞான உபதேசம் கற்றுக்கொள்வதே கிடையாது. கடவுளையும் நம்முடைய இரட்சண்யத்தைப் பற்றிய சகல சத்தியங்களையும் (முக்கியமாக தேவமாதா பற்றிய சத்தியங்களையும்) மற்ற சகல கத்தோலிக்க விசுவாச சத்தியங்களையும் பற்றி அறிந்துகொள்வதற்கு பலர் எந்தவித முயற்சியையும் எடுப்பதே இல்லை. தான்தோன்றித்தனமான ஒரு வாழ்க்கை, பெயரளவுக்கு கத்தோலிக்கர்களாக வாழ்கிறார்கள், தங்களுடைய பாவங்களிலே நிலைத்திருக்கிறார்கள், அதைப்பற்றி எந்த கவலையும் கொள்வவதில்லை, பாவ சங்கீர்த்தனம் (ஒப்புரவு திருவருட்சாதனம்) செய்வதில்லை, தங்களுடைய ஆத்துமத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை, நரகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதைப்பற்றிய பயமே பலருக்குக் கிடையாது. 

இந்த நிலையிலே திடீரென ஒரு பதித சபையைசேர்ந்த ஒருவன் வருகிறான், அறியாமையில் இருக்கின்ற கத்தோலிக்கர்கள் அவனுடைய வார்த்தையைக் கேட்கிறார்கள். அது வசீகரமுள்ளதாய் இருக்கின்றது. அர்ச்.சின்னப்பர் கூறுவதைப்போல நவமான போதனைகளை தள்ளிவிட வைக்கிற ஒரு வசீகர போதனையாய் இருக்கிறது. பல கத்தோலிக்கர்கள் புதிதாக எதை கேட்கலாம் என்று தங்களுடைய விருப்பத்திற்கேற்ற பொய்ப் போதகர்களைத் தேடித்திரியும்போது, அந்த போதகனுடைய வார்த்தைகள் இவர்களை மயக்குகின்றன. அந்த போதகனும் இவர்களை எப்படி மயக்கலாம் என்று நன்றாக அறிந்து வைத்திருக்கின்றான். இவர்களுடைய உலக இச்சைக்கு ஏதுவான முறையிலேயே அவன் பேசுகிறான். இதுவரை கேள்விப்பட்டிராத புதிய புதிய போதனைகளையும் வாக்குத்தத்தங்களையும் வேதாகம ஆதாரத்துடன் சொல்கிறான். உடனே எந்த கேள்விகளுமின்றி அவன் கூறுகிற தப்பறையான போதனைகளை உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க வேதத்தை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறி விடுதலைப்பெற்ற கிறிஸ்தவனாக மாறுகிறான்.

நான் விடுதலை பெற்றுவிட்டேன்! - இன்றைய பதித சபையாரிடையே அதிகம் புழங்குகிற வார்த்தை இது. நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன்! எதிலிருந்து இரட்சண்யம்? எதிலிருந்து விடுதலை? ஞாயிறு பூசை பார்க்கின்ற கடமையிலிருந்து விடுதலை, பாவசங்கீர்த்தனம் செய்வதிலிருந்து விடுதலை, திருச்சபையின் சகல அதிகாரங்களிலிருந்து விடுதலை, பாப்பரசர் எங்களுக்குத் தேவையில்லை, மேற்றாணியாருடைய அதிகாரம் எங்களுக்குத் தேவையில்லை, குருக்கள் எங்களுக்குத் தேவையில்லை, அவர்கள் தருகின்ற பாவமன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை, கத்தோலிக்கத் திருச்சபை தருகின்ற அதிகாரப்பூர்வமான போதனை எங்களுக்குத் தேவையில்லை, அதிலிருந்து நாங்கள் விடுதலை  பெறுகின்றோம். தேவதிரவிய அநுமானங்கள் எங்களுக்குத் தேவையில்லை, பேறுபலன்களை சம்பாதிக்க வேண்டியதில்லை, வரப்பிரசாதங்கள் தேவையில்லை, கடைசியாக கடவுளிடமிருந்தே இவர்கள் விடுதலை பெற்றுக்கொள்கிறார்கள். இரட்சண்யமிடத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த எல்லா நன்மையான காரியங்களையும் அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டு தீமைக்கும் பசாசுக்கும் தங்களை முழுமையாக அடிமையாக்கிக் கொள்கிறார்கள். நரகத்தை தங்களுடைய உரிமைச் சொத்தாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த பரிதாபமாக தீமையான காரியத்திற்கு அடிப்படை காரணம் என்ன என்று சற்று யோசித்துப் பார்ப்போம். கத்தோலிக்கர்களாக இருந்து, பின்னர் பரிசுத்த கத்தோலிக்க வேதத்தை மறுதலித்துவிட்டு சபைகளுக்கு ஓடிப்போகிறவர்கள் தங்களுடைய மனதிலே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சபைக்கு செல்வதற்கு முன் எந்த அளவுக்கு நல்ல கத்தோலிக்கர்களாக வாழ்ந்தீர்கள்? எந்த அளவுக்கு உங்கள் பரிசுத்தமான வேதத்தின் உத்தமமான சத்தியங்களை நீங்கள் அறிந்திருந்தீர்கள்? எந்த அளவுக்கு நடைமுறை கத்தோலிக்கர்களாக வாழ்ந்தீர்கள்? எப்போதாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வதில் கருத்தாய் இருந்திருக்கிறீர்களா? முடிந்தபோதெல்லாம் திவ்விய நற்கருணை வாங்கியிருக்கின்றீர்களா? ஞான உபதேசத்தை அக்கறையோடும் ஆர்வத்தோடும் கற்றுக்கொண்டீர்களா? இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொண்டீர்கள் என்றால், இதில் ஒன்றைக்கூட நீங்கள் செய்ததே இல்லை என்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள்.

இந்தத் தீமைக்கு பெற்றோர் முழுப் பொறுப்பு! ஏனெனில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு முதலிலேயே, அவர்களுடைய புத்தி விவரம் வந்த உடனேயே கத்தோலிக்க ஞான அறிவை ஊட்ட வேண்டிய கடமை. முதல் கடமை பெற்றோர்களுக்கு தான் உள்ளது. குறைந்தபட்சம் அடிப்படை கத்தோலிக்க வேத சத்தியங்களையாவது சொல்லிக்கொடுக்க வேண்டியது. இதிலே பெற்றோர்கள் தவறிவிட்டால் குழந்தைகள் போகப்போக ஞான அறிவு கொஞ்சமும் இல்லாதவர்களாக, தான்தோன்றித்தனமாக வாழத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் உண்மை. இந்த மாதிரியான ஆத்துமங்கள்தான் மிக எளிதாக பதித சபைகளிடம் சிக்கிக்கொள்கின்றார்கள். எனவே பெற்றோருக்கே முதன்மை கடமை. இரண்டாவதாக ஆசிரியர்களுக்கு. அதன் பிறகு யாரெல்லாம் அந்த குழந்தைக்கு வேத சத்தியங்களை போதிக்க கடமைப்பட்டுள்ளனரோ (ஞானப் பெற்றோர், ஞான உபதேச ஆசிரியர்கள், குருக்கள்) அவர்கள் எல்லோருமே இந்தத் தீமைக்குப் பொறுப்பாக இருக்கிறார்கள். இந்த ஆத்தும சேதத்திற்கு இவர்கள் எல்லோருமே பொறுப்பு!

ஆத்துமம் என்ற ஒரு காரியம் இன்று மறக்கப்பட்டுவிட்டது. அநேகருக்கு தங்களுக்கு ஒரு ஆத்துமம் உண்டு, தாங்கள் வெறும் மிருக சந்ததி அல்ல, ஆத்துமம் என்ற ஒன்று இருக்கின்றது அதை இரட்சிப்பதுதான் எல்லாவற்றிலும் முதன்மையான கடமையாக இருக்கின்றது. இதைப்பற்றி ஆண்டவர் கூறுகிறார், மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் என்ன பயன்? ஆத்துமம் விலையேறப்பெற்றது. அது கிறிஸ்துநாதருடைய திருஇரத்தம்! ஆத்துமத்தின் விலை சர்வேசுரனின் திருஇரத்தமாயிருக்கிறது! ஆனால் ஆத்துமம் என்ற ஒன்று இருப்பதையே அறியாமல் வாழ்கின்றார்கள். ஆத்துமத்தை இரட்சிக்க வேண்டியதுதான் முதலாவது கடமை.

கத்தோலிக்க ஞான உபதேசம் கூறுகிறது, கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தார்? தன்னை அறிந்து சிநேகித்து சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் (மோட்சத்தை அடைவது தான் இரட்சண்யம் - நரகத்திலிருந்து தப்பித்தல் என்றும் சொல்லலாம்.) மனித வாழ்வின் நோக்கமே இது மட்டும் தான்!. இதற்காக எதை வேண்டுமானாலும் மனிதன் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் இந்த போதனை இன்று அநேகருக்கு கிடைப்பதில்லை.

நரகம் என்ற மிகப் பயங்கரமான காரியம் ஒவ்வொரு மனிதனுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது! மனிதனும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேணடடியவனாயிருக்கிறான். ஒரே ஒரு சாவான பாவத்தால் மிக எளிதாக நரகத்திலே நாம் விழுந்துவிட நிறைய வாய்ப்பிருக்கின்றது. ஐந்து வயது குழந்தை ஒன்று நரகத்திலிருப்பதாக அர்ச்.கிரகோரியார் கூறுகிறார். எவ்வளவு பயங்கரம் என்று யோசித்துப்பாருங்கள். அந்த குழந்தை என்ன தவறு செய்திருக்கும்? என்ன பாவம் செய்திருக்கும்? நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இப்போது உங்களுடைய வயது என்ன? நீங்கள் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு சாவான பாவங்களைக் கட்டிக்கொண்டுள்ளீர்கள்? இந்த சாவான பாவங்களிலிருந்து மீண்டு வர என்ன முயற்சியை எடுத்திருக்கிறீர்கள்? இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

இன்றைக்கு உங்களுக்கு சாவு நேரிட்டால் உங்கள் நிலை என்ன? எங்கே செல்வீர்கள்? நரகம் வாயைப் பிளந்துகொண்டு காத்துக்கொண்டிருக்கிறது உங்களுக்காக! உங்கள் ஆத்துமம் ஆபத்திலிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே! இதைவிட முக்கியமான காரியம் எதுவுமே இல்லை! இந்த ஒரு ஆபத்தான நிலையிலிருந்து மனிதனை இரட்சிப்பதற்காகத்தான் சர்வேசுரன் மனிதனானார்! இதிலேயே இதனுடைய முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. சர்வேசுரன் இந்த உலகத்திலே மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, தன்னுடைய திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் பலியாக்கி பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து நம்முடைய இரட்சண்யத்தை சம்பாதித்துக்கொண்டாரென்றால் இது எப்பேற்பட்ட பயங்கரம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். நரகம் அவ்வளவு பயங்கரமானது! ஒரு நாளும் முடியவே முடியாதது, நித்தியமானது நரகம்! ஒருமுறை நரகத்தில் விழுந்தவன் இனி நித்தியத்திற்கும் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான். ஆயிரம் கோடி வருடங்களுக்குப் பிறகு ஒரு பசாசு ஒரு ஆத்துமத்தின் காதிலே வந்து சொல்லும், “உன்னுடைய வேதனைகள் இப்போதுதான் தொடங்குகின்றன.” என்ன ஒரு பயங்கரம் என்று யோசித்துப்பாருங்கள்.

ஆகவே இரட்சிப்பதுதான் எல்லாவற்றிலும் முதன்மையான கடமையாக இருக்கின்றது, மேலும் நரகத்திற்கு தப்பிக்கொள்வதும் மிக பயங்கரமான எச்சரிப்பாக இருக்கின்றது. இன்று பதித சபைகளால் என்ன போதிக்கப்படுகின்றது? சேசுநாதர் சுவாமி எதற்காக வந்தார்? அவர் மீட்க வந்தார் என்று சொல்கிறார்கள். அவர் இரட்சகராக வந்தார் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எதிலிருந்து இரட்சிக்க வந்தார் என்றால் அடக்குமுறை, வறுமை, பெண்ணடிமைத்தனம், துன்பங்கள் இவற்றிலிருந்துதான் மீட்க வந்தார் என்று பசாசினுடைய போதனைகளை போதிக்கின்றனர்.  இந்த உலகத்தைச் சேர்ந்த நோக்கங்களுக்காகத்தான் ஆண்டவர் உலகத்திற்கு மனிதனாக வந்தார் என்று போதிக்கின்றனர். ஆனால் உண்மை அதிலே இல்லை! இதற்கு ஒரு சர்வேசுரன் வரவேண்டிய அவசியம் இல்லை. ஒரு சர்வேசுரன் மனிதனாகி தன்னுடைய இரத்தத்தை சிந்தவேண்டிய அவசியம் இல்லை.

இன்றைக்கு ஜெபிக்கிற அவசியம் மறந்துபோய்விட்டது. ஜெபிக்க வேண்டிய அவசியம் இல்லை, தியானிக்க வேண்டிய அவசியம் இல்லை, பக்தி முயற்சிகள் இல்லை, புண்ணியங்களை சம்பாதிக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் கத்தோலிக்க விசுவாசிகள் தங்களுடைய ஞான அறிவை வளர்த்துக்கொள்ள எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கத்தோலிக்க ஞான போதகங்களை நன்கு அறிந்துகொள்ளவும், அதிலே பலப்படவும் வேண்டும்.

சர்வ வல்லபரும் தயாபரருமான சர்வேசுரன் பாதத்தில் இந்த இணையதளத்தினை சமர்ப்பிக்கின்றோம். திருக்குடுப்பத்தின் பாதுகாவர் அர்ச்.சூசையப்பர், எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயுடனேயும் பிரதான சம்மனசாயிருக்கிற முத்தான மிக்கேலுடனேயும் ஸ்நாபகனாயிருக்கிற முத்தான அருளப்பனுடேயும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடேயும் சின்னப்பருடனேயும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும் பாதுகாவலை வேண்டி இந்த இணையதளத்தினை வெளியிடுகின்றோம்.