புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

லூர்து மாதாவுக்கு நவநாள்.

(உத்தம மனஸ்தாபப்பட்ட பின் லூர்து மாதா சுரூபத்தின் அல்லது படத்தின் முன் பின்வரும் ஜெபங்களை மும்முறை சொல்லவும்)

இறைவனின் தாயாகிய புனித கன்னி மரியாயின் தூய மாசில்லாத உற்பவம் துதிக்கப்படுவதாக.

எங்கள் லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் மாதாவே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்

எங்கள் லூர்து நாயகியே! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும் மகிமைக்காகவும் எங்களைக் குணப்படுத்தியருளும்.

எங்கள் லூர்து நாயகியே! பாவிகள் மனந்திரும்புவதற்காக எங்களைக் குணப்படுத்தியருளும்

வியாதிக்காரர்களின் ஆரோக்கியமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே! உம்மை மன்றாடுகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென்.


லூர்து மாதாவுக்கு ஜெபம்.


அமலோற்பவ கன்னி மாதாவே! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும். புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே, உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம். உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும். தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும். மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே, தேவரீர் எங்கள் தாயாராகையால், எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்.

லூர்து ஆண்டவளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென்.

அர்ச்சியசிஷ்ட லூர்து அன்னையிடம் மன்றாட்டு.

மகிமை நிறை லூர்து அன்னையே, அமல உற்பவியே, இரக்கத்தின் தாயே, உடல் நலமற்றோருக்கு ஆரோக்கியமே, பாவிகளின் அடைக்கலமே, துயருருவோரின் ஆறுதலே, உம்மைத் தேடி வந்தேன் என்மேல் மனமிரங்கும், என் தேவைகள், தொல்லைகள், துன்பங்கள் எல்லாம் உமக்குத் தெரியும். உம்மிடம் நம்பிக்கையோடு வந்தவர்கள் உடல் உள்ள நலம் பெற்றுள்ளனர். இந்த நம்பிக்கையோடு தாயன்போடு கூடிய உமது பரிந்துரைக்காக நான் வந்துள்ளேன். என் விண்ணப்பங்களைக் கேட்டு உம் திருமகனிடமிருந்து அவற்றை எனக்குப் பெற்றுத் தந்தருளும். உமது திருப் பண்புகளை நான் பின்பற்றவும், உம்மோடு ஒரு நாள் மகிமையில் பங்கேற்கவும் எனக்கு அருளைப் பெற்றுத் தாரும்.
ஆமென்.


அமலோற்பவ மாதாவின் மன்றாட்டு மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்,
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்

திருமீட்பரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே.....

தேவகிருபையின் அதிசயத்துக்குரிய கருவியாகிய அமலோற்பவ மாதாவே.....

லூர்துமலை கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

மோட்சபிரதாபத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்கள் அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

ஞானசெளந்தரியத்துக்கு மிஞ்சின செளந்தரியம் இல்லையென்று காண்பிக்க அழகின் அவதாரம் போல் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

ஆத்தும தூய்மைக்கு மேலான தூய்மை இல்லை எண்று காண்பிக்க தூய வெண்ணாடையை உடுத்தியவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

வானோருக்கு அடுத்த புண்ணியம் தூய்மை என்று காண்பிக்க மேகமற்ற வானம்போன்ற நீலகச்சையைக் கட்டிக்கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

நாங்கள் நாட வேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அன்னாந்து பார்த்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

53 மணி செபத்தை அடிக்கடி சொல்லுதல் உத்தம பக்திச்செயல் என்று கான்பிக்க செபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரே எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள்ரோஜாச் செடியைக் காலாலே மிதிக்கிறவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

தாழ்ச்சியும் ஏழ்மையும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் அன்பாயிருக்கிறீர் என்று காண்பிக்க ஓர் ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே.....

தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க அந்தச் சிறு பெண் மூலமாக ஒரு நீருற்றைத் தோற்றுவித்த அமலோற்பவ மாதாவே....

தேவரீருடைய வல்லமையும் கிருபையும் அளவிட்டு சொல்லமுடியாது என்று காண்பிக்க அந்த நீருற்று தாராளமாய் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற நோயாளிகளுக்கு நலம் அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே.....

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி புனித அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக

பரம பிதாவே உமது திரு உள்ளத்தின்படியே லூர்து கெபியில் தோன்றி நாமே அமல உற்பவம் என மொழிந்து, ஜெபமும் தவமும் கொண்ட புனித வாழ்வைக் கொண்ட கன்னிமரியாளை எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்றும் நன்றிமலர்களை சூட்டுகிறோம். அன்னையின் பேறுபலன்களினாலும் மண்றாட்டினாலும் நாங்கள் வாழ்வில் அமைதி கான அருள்புரியும் தேவனே.. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை இறைஞ்சு மன்றாடுகிறோம்.

ஆமென்.