திரு இருதய செபமாலை.

இந்த செபமாலை 33 சிறிய மணிகளையும் ஆறு பெரிய மணிகளையும் கொண்டது . சிறிய மணிகள் இயேசு சிந்திய பரிசுத்த இரத்தத்தைக் குறிக்கும் வண்ணம் செந் நிறத்திலும் , பெரிய மணிகள் அவர் விலாவினின்று புறப்பட்ட நீரைக் குறிக்கும் வண்ணம் வெண்மை நிறத்திலும் உள்ளன . சிறிய மணிகள்,  ஆறு மணிகளைக் கொண்ட ஐந்து கோர்வைகளாய் உள்ளன . 33 மணிகள் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணம் உள்ளன . திருச்சிலுவையும், திரு இருதயம் கொண்ட இயேசுவின் படம் தாங்கிய பதக்கமும் உள்ளன. நடுப்பதக்கத்தில் இயேசுவின் திரு இருதய படம் உள்ளது.

ஆறு மணிகளைக் கொண்ட இந்த செபமாலையில் மட்டுமல்லாது, பத்து மணி கொண்ட செபமாலையிலும் இந்த திரு இருதய செபமாலையை செபிக்கலாம்.

பெரிய மணியில்:
இருதயத்தில் தாழ்ச்சியும் மனதில் சாந்தமும் நிறைந்த ஆண்டவராகிய இயேசுவே, என் இருதயத்தை தேவரீருடைய திருஇருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.

சிறிய மணியில்:
இயேசுவின் மதுரமான திரு இருதயமே! என் சிநேகமாயிரும்.

பத்து / ஆறு மணி முடிந்தபின்:
மரியாயின் மாசற்ற இருதயமே! என் இரட்சணியமாயிரும்.

ஒவ்வொரு பத்து/ஆறு மணிச் செபமும், கீழ்க்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.

1-ம் பத்து/ஆறு மணி - பிற சமயத்தினரும், பிரிந்துபோன சகோதரர்களுமான மக்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

2-ம் பத்து/ஆறு  மணி - பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

3-ம் பத்து/ஆறு மணி - நாம்தாமே அவருக்கு உண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

4-ம் பத்து/ஆறு மணி - சகல மனிதராலும் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா சகல புனிதர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும் நம்முடைய இருதயத்தை ஒப்புக்கொடுப்போம்.

5-ம் பத்து/ஆறு மணி - இயேசுவின் திருஇருதயமே! நாங்களும் மற்றவர்களும் சிநேகிக்கும்படி அநுக்கிரகம் செய்தருளும்.

ஐம்பது மணி முடிந்தபின்:

இயேசுவின் திருஇருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஜென்ம மாசின்றி உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுநாதருடைய திருஇருதயம், எங்கும் சிநேகிக்கப்படுவதாக.

​என் இயேசுவே! இரக்கமாயிரும்!

திருஇருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் திருஇருதயமே! உமது இராச்சியம் வருக. எங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும்.

ஆமென்.