சேசுநாதருடைய திருப்பாடுகளின் கடிகாரம்.

புனித வியாழன். மாலை 6.00 மணி.
பெரிய வியாழக்கிழமை அஸ்தமனமாகி ஆறு மணி வேளையில் சேசுநாதர் வரிவேதத்தின் பழைய முறைமைப்படி தாமே ஒரு செம்மறியைப் போல் பலியாகி மனிதரை இரட்சிப்பதற்கு அடையாளமாயிருந்த பாஸ்காவாகிய இராவுணவைத் தமது பன்னிரண்டு அப்போஸ்தலர்களோடு செய்தருளினார்.

புனித வியாழன். இரவு 7.00 மணி.
ஏழு மணி வேளையில் தாழ்ச்சி என்கிற புண்ணியத்தைத் தமது மாதிரிகையினால் கற்பிக்கத்தக்கதாக, தம் அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவினார். பின்னும் மனுமக்களின் பேரில் தமக்குள்ள தயை நேசத்தைக் காண்பிக்கத்தக்கதாக, தம்முடைய திருச்சரீரமும், திரு இரத்தமும் அடங்கிய தேவ நற்கருணையை உண்டாக்கி தம் சீஷர்களுக்கு திவ்விய போஜனமாகத் தந்தருளினார்.

புனித வியாழன். இரவு 8.00 மணி.
எட்டு மணி வேளையில் தம் சீஷர்களுக்கு அமிர்த பிரசங்கமாக அநேக திவ்விய போதனைகளைப் போதித்து, நடக்கப்போகிற துக்க வர்த்தமானங்களையும் அவர்களுக்கு அறிவித்து தம்முடைய தேவ பிதாவைத் தோத்திரம் செய்தார்.

புனித வியாழன். இரவு 9.00 மணி.
ஒன்பது மணி வேளையில் தம்முடைய அப்போஸ்தலர்களைக் கூட்டிக் கொண்டு பூங்காவனத்துக்கு எழுந்தருளி, கல்லெறி தூரத்தில் அவர்களை விட்டு, தரையில் முகங்குப்புற விழுந்து, கூடுமாகில் இத்துக்கப் பாத்திரம் தம்மை விட்டு விலக தம்முடைய தேவ பிதாவை மன்றாடி, ஆயினும் பிதாவே! என் மனதின் படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகட்டும் என்று செபித்தார்.

புனித வியாழன். இரவு 10.00 மணி.
பத்து மணி வேளையில் இருமுறை தம் சீஷர்களிடம் வந்து அவர்கள் நித்திரை செய்வதைப் பார்த்து, விழித்திருந்து செபம் செய்ய புத்தி சொல்லி, மறுபடி இரு முறையும் மேற்சொல்லிய பிரகாரமாய்ச் செபிக்கப் போனார். அப்போது மனிதருடைய அக்கிரமப் பாவங்களையும் தாம் படப்போகிற கடூர நிர்ப்பந்தப் பாடுகளையும் நன்றி கெட்ட திரளான பாவிகள் நரகத்தில் விழுவதையும் தியானத்தில் கண்டு துக்க சாகரத்தில் அமிழ்ந்தி மரண அவஸ்தைப்பட்டார்.

புனித வியாழன். இரவு 11.00 மணி.
பதினொரு மணி வேளையில் அவர் துக்க மிகுதியால் சொல்லிலடங்கா நோக்காடு அனுபவித்து தரையில் சிந்தி வடியும் பெருந்துளியாக இரத்த வேர்வை வேர்த்தார். அப்போது ஒரு சம்மனசானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை உரைத்தார்.

புனித வெள்ளி. நள்ளிரவு 12.00 மணி.
பன்னிரண்டு மணியாகிய நடுச்சாமத்தில் ஆண்டவர் செபம் முடித்து தம்முடைய சீஷரை அழைத்துக் கொண்டு தம் சத்துராதிகளை எதிர் கொள்ளப் போனார். அவர்களோடே வந்த யூதாஸ் என்கிற துரோகியான சீஷன் அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான். யூதர்கள் கயிறு சங்கிலிகளால் அவரைக் கட்டி மானபங்கமாய் ஜெருசலேம் பட்டணத்தின் தெரு வீதிகளில் இழுத்துக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

புனித வெள்ளி. இரவு 1.00 மணி.
ஒரு மணி வேளையில் சேசுநாதர் அன்னாஸ் என்கிற பெரிய குருவின் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்டு, பெரிய குரு கேட்ட அநேக கேள்விகளுக்கு மிகவும் நியாயமுள்ள மறுமொழி சொன்னதற்கு ஒரு துஷ்ட சேவகனால் நிஷ்டூரமாய்த் திருக்கன்னத்தில் அறையப்பட்டார்.

புனித வெள்ளி. இரவு 2.00 மணி.
இரண்டு மணி வேளையில் யூதர் அவரை பெரிய குருவான கைப்பாஸ் அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். அங்கே நமக்கு விரோதமாய்ச் சொல்லப்பட்ட பற்பல பொய்ச் சாட்சிகளுக்கு ஆண்டவர் மவுனமாயிருந்தார். ஆயினும் தாம் சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரனோ என்று தலைமைக் குரு ஆணையிட்டுக் கேட்டதற்கு ஆம் என்றும் உலகத்தை நடுத்தீர்க்க வருகிறவர் தாமே என்றும் நிச்சயித்தார். இதைப் பற்றி அந்தத் திவ்விய கர்த்தர் தேவதூஷணன் என்றும் சாவுக்குப் பாத்திரவான் என்றும் யூதருடைய ஆலோசனைச் சங்கத்தால் கூறப்பட்டு சேவகர்களுக்கும் ஊழியர்களுக்கும் கையளிக்கப்பட்டார். அவர்கள் அவரை சகலவித கொடிய அவமான கஸ்தி வாதைப் படுத்தத் தொடங்கினார்கள்.

புனித வெள்ளி. பின்னிரவு 3.00 மணி.
மூன்று மணி வேளையில் சேவகர் ஒரு சீலையால் அவர் திருக்கண்களை மறைத்து கன்னத்தில் அறைந்து சிரசில் குட்டி, அடித்தவன் இன்னான் என்று தீர்க்கதரிசனமாய்ச் சொல் என்று பரிகாசமாய்க் கேட்டு, அவருடைய திருமுகத்தில் துப்பி, சொல்லிலடங்காத கொடூரமெல்லாம் செய்தார்கள். பின்னும் அவரை இருண்ட சிறைச் சாலையில் அடைத்தார்கள். இராயப்பர் அவரை அறியேனென்று மும்முறை மறுதலித்ததினாலும் திவ்விய கர்த்தர் மிகுந்த துயரத்தை அடைந்தார்.

புனித வெள்ளி. அதிகாலை 4.00 மணி.
நாலு மணி வேளையில் அவரை மறுபடி சேவகர், குருக்கள் யோசனை சங்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போனதின் மேல், அவர் சாவுக்குப் பாத்திரமாயிருப்பதாக மறுபடியும் சங்கத்தாரால் கூறப்பட்டார். ஆண்டவர் தமது கிருபாகடாட்சத்தால் இராயப்பரை நோக்க அவர் தமது பாவத்துக்காக மிக்க மனஸ்தாபப்பட்டு அழுது புறப்பட்டுப் போனார்.

புனித வெள்ளி. அதிகாலை 5.00 மணி.
ஐந்து மணி வேளையில் வெள்ளிக்கிழமை விடியற்காலமாகிறபோது சேசுநாதர் பிலாத்து என்கிற துரை அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்டு தமது மேல் சாட்டப்பட்ட அபத்த குற்றங்களுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் போனாலும் குற்றமற்றவராக விளங்கினார்.

புனித வெள்ளி. காலை 6.00 மணி.
ஆறு மணி வேளையில் பிலாத்தென்கிற துரை ஆண்டவரை ஏரோது இராஜாவினிடம் அனுப்பினான். அங்கேயும் அவர்தம் பகையாளிகளை மறுக்க ஒரு வார்த்தையும் சொல்லாததைப் பற்றி இராஜா அவரைப் பைத்தியன் என்று நிந்தித்து, பித்தன் என்பதற்கு அடையாளமாக நீண்ட வெள்ளைச் சட்டையை அவருக்கு அணிவித்து தன் சேனைகளோடு அவரைப் பரிகாசம் பண்ணி மறுபடி பிலாத்துவினிடம் அனுப்பினான்.

புனித வெள்ளி. காலை 7.00 மணி.
ஏழு மணி வேளையில் பிலாத்து சேசுநாதரையும் பரபாஸ் என்கிற கொலைப் பாதகக் கள்ளனையும் ஒரே வரிசையாக நிறுத்தி, இவ்விருவரில் யாரை உங்களுக்கு விடுதலையாக்க மனதென்று யூதரைக் கேட்டதற்கு அவர்கள் கள்ளனை விடுதலையாக்கச் சொல்லியும் மாசற்ற கர்த்தரைக் கொலைப்படுத்த வேணுமென்றும் இரைச்சலிட்டுக் கூவினார்கள்.

புனித வெள்ளி. காலை 8.00 மணி.
எட்டுமணி வேளையில் ஆண்டவர் கற்றூணில் கட்டுண்டு கசைவார் முதலிய எத்தனங்களைக் கொண்டு கொடிய சேவகரால் நிஷ்டூரமாய் அடிபட்டதினால் அவருடைய திருச்சதை கிழிய திரு இரத்தம் எப்பக்கத்திலும் புரண்டோட சர்வாங்கமும் ஏக காயமாயிற்று.

புனித வெள்ளி. காலை 9.00 மணி.
ஒன்பது மணி வேளையில் துஷ்ட சேவகர் நிகரில்லா கொடுமையால் நீண்ட முட்களை முடியாகப் பின்னி ஆண்டவருடைய திருச்சிரசில் இருத்தி தடியால் அடித்து பரிகாச ராஜாவாக அவரை ஸ்தாபித்து பழஞ்சிவப்பு மேற்போர்வையை உடுத்தி செங்கோலாக மூங்கிலைக் கையில் கொடுத்து கேலியாக அவருக்கு முன் முழங்காலிட்டு யூதர்களின் ராஜாவே வாழ்க என்று கூப்பிட்டு அறைந்தார்கள்.

புனித வெள்ளி. காலை 10.00 மணி.
பத்துமணி வேளையில் பிலாத்து ஆண்டவரை மேற்சொல்லிய இரக்கத்துக்குரிய அவமான நிர்ப்பந்தமுள்ள கோலத்தோடே ஜனங்களுக்குக் காண் பித்து: "இதோ மனிதன்!" என்றான். பாவிகளான யூதர் அவனைக் கொல்லும், கொல்லும், சிலுவையில் அறையும் என்று மிகவும் இரைச்சலிட்டுக் கூவினதால் பிலாத்து கலகத்திற்குப் பயந்து, இந்த நீதிமான் இரத்தத்தில் நான் குற்றவாளி அல்ல என்று தன் கைகளைக் கழுவி சேசுநாதரைச் சிலுவையில் அறைய மரணத்தீர்வையிட்டான். திவ்விய கர்த்தர் தம்முடைய சிலுவையைச் சுமந்து கொண்டு கபால மலைக்குப் போக புறப்பட்டார்.

புனித வெள்ளி. முற்பகல் 11.00 மணி.
பதினொரு மணி வேளையில் சேசுநாதர் தமது பாரமான சிலுவையைச் சுமந்து போகையில் பலமுறை தரையில் விழுந்தார். துக்க சாகரத்தில் அமிழ்ந்தின தம்முடைய மாதா எதிர்கொண்டு வருகிறதை மிகுந்த துயரத்தோடே கண்டார். ஜெருசலேம் பட்டணத்து புண்ணிய ஸ்திரீகள் தமக்காக அழாமல் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் அழச் சொல்லி, மலையின் உச்சியில் சேர்ந்து, தம்முடைய காயங்களோடே ஒட்டியிருக்கும் தம் வஸ்திரங்கள் உரியப்பட்டு சிலுவை மரத்தில் அறையப்பட்டார்.

புனித வெள்ளி. நண்பகல் 12.00 மணி.
மத்தியானமாகிய பன்னிரண்டு மணி வேளையில் சேசுநாதர் அறையுண்ட சிலுவை இரு கள்ளர் நடுவே நாட்டப்பட்டது. அப்போது சூரியன் மங்கிப் போனது. மூன்று மணி நேரமாக காரிருள் பூலோகமெல்லாத்தையும் மூடிக் கொண்டது.

புனித வெள்ளி. பிற்பகல் 1.00 மணி.
ஒரு மணி வேளையில் சேசுநாதர் தம்முடைய தேவ பிதாவை நோக்கி தம்மை நிந்தித்து கொலைப் படுத்துகிறவர்களுக்காக மன்றாடி பொறுத்தலைக் கேட்டார். பின்னும் தமது வலது பக்கத்தில் சிலுவையில் அறையுண்ட பச்சாத்தாபக் கள்ளனை நோக்கி இன்றே என்னோடே பரகதியிலிருப்பாய் என்று திருவுளம் பற்றினார்.

புனித வெள்ளி. பிற்பகல் 2.00 மணி.
இரண்டு மணி வேளையில் சேசுநாதர் தம்முடைய திரு மாதாவை நோக்கி, பிரிய சீஷனாகிய அர்ச். அருளப்பரைக் காண்பித்து, ஸ்திரீயே, இதோ உன் மகனென்றும், பின்னும் இவரை நோக்கி தம்முடைய தாயாரைக் காண்பித்து இதோ உன் மாதாவென்றும் திருவுளம் பற்றினார். இந்த வாக்கியத்தினால் சகல கிறீஸ்தவர்களுக்கும் தம்முடைய திருமாதாவைத் தாயாராகவும், அவர்களை அந்தத் தயையுள்ள ஆண்டவளுக்குப் பிள்ளைகளாகவும் தந்தருளினார்.

புனித வெள்ளி. பிற்பகல் 3.00 மணி.
மூன்றுமணி வேளையில் தாகமாயிருக்கிறேன் என்கிறதின் மேல் சேவகர் கடற்காளானைப் புளித்த இரசத்தில் துவைத்து நிரப்பி நீண்ட தண்டிலே பூட்டி அவர் தாகத்துக்குக் கொடுத்தார்கள். ஆனால் மனிதர் ஈடேற்றமே அவருக்குத் தாகமாயிற்று. பின்னும் அவர் தம்மைக் குறித்த வேத தீர்க்கதரிசனங்களெல்லாம் நிறைவேறினதென்று பார்த்து எல்லாம் நிறைவேறிற்றென்று திருவுளம் பற்றினார். பின்னும் உரத்த சத்தத்தோடே பிதாவே, உமது கையில் என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன் என்று உரைத்துத் தலைகுனிந்து உயிரை விட்டார். அப்போது பூமி அதிர கற்பாறைகள் பிளக்க கல்லறைகள் திறந்து போக மரித்த அர்ச்சியசிஷ்டவர்கள் அநேகர் உயிர்த்தார்கள்.

புனித வெள்ளி. மாலை 4.00 மணி.
நாலு மணி வேளையில் ஒரு சேவகன் ஈட்டியால் ஆண்டவர் திருவிலாவில் குத்தித் திரு இருதயத்தை ஊடுருவ, இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அவரைச் சிலுவையில் அறைந்த செந்தூரியன் முதலிய அநேகர் நடந்த அற்புதங்களை எல்லாம் பார்த்து மிக்க தேவ பயமடைந்து இவர் மெய்யாகவே சர்வேசுரனுடைய குமாரனென்று மனஸ்தாபத்தால் தங்கள் மார்பில் அறைந்து கொண்டு எருசலேம் பட்டணத்துக்குத் திரும்பிப் போனார்கள்.

புனித வெள்ளி. மாலை 5.00 மணி.
ஐந்து மணி வேளையில் சேசுநாதரின் சீஷர்கள் உயிர் பிரிந்த அவருடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கினார்கள். பரிசுத்த தேவமாதா தம் திருமடியில் அதை வளர்த்தித், துக்க சாகரத்தில் அமிழ்ந்தி, அந்த வியாகுலப்பட்டார்கள்.

புனித வெள்ளி. மாலை 6.00 மணி.
ஆறுமணி வேளையில் சீஷர் ஆண்டவரின் திருச்சரீரத்தைப் பூச்சியமாய் விலையேறப் பெற்ற பரிமளத் தைலத்தால் பூசி மெல்லிய சீலையால் பொதிந்து புதுக் கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்.

ஆமென் சேசு.