பரலோக மந்திர உபதேச தியானம்.



சேசுநாதர் சுவாமி கற்றுத்தந்த பரலோக மந்திர உபதேச தியானம்.


(அர்ச்சியசிஷ்ட லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதியபடி).

கடவுள் நம்மைத் தம் அன்புப் பிள்ளைகளாக நேசிக்கிறார். பிள்ளைக்குரிய அன்போடு நாம் நம் தந்தையுடன் உரையாட விரும்புகிறார். சேசு சுவாமி, தம் பிதாவை "அப்பா பிதாவே" என்று அழைத்தார். அடிமைத்தனத்தின் புத்தியைப் பெறாமல் 'அப்பா பிதாவே' என்று கூப்பிடுகிற சுவிகாரப் பிள்ளைக்குரிய புத்தியைப் பெற்றுக் கொண்டோம் என அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் உரைக்கிறார். எல்லாம் வல்ல கடவுள் நம் தந்தை என்ற உண்மையைச் சிறிது சிந்திப்போம்.

மௌனமாக தியானிப்போம்.

கடவுளை நம் தந்தை என்று உரிமையுடன் கூப்பிட சேசு சுவாமி நமக்குக் கற்றுத் தந்த மொழி தான் பரலோகமந்திரம். ''பரலோகமந்திரம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம்'' என்கிறார் தெர்த்துல்லியன். "மற்றெல்லா செபத்தையும் விட பிதா அதிக விருப்பமுடன் கேட்கின்ற செபம் பரலோகம் மந்திரமே" என்கிறார் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் இப்புனிதர் பரலோக மந்திரத்தை விளக்கம் செய்துள்ளதை இங்கு நாம் சிந்திக்கு முன்னர் இவ்வரிய செபத்தை எல்லோரும் சேர்ந்து நிறுத்தி இப்பொழுது செல்வோம்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடையநாமம் அர்ச்சிக்கப் படுவதாக! உம்முடைய இராச்சியம் வருக! உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக! எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்! எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழ விடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

இவ்வதிசய செபத்தைச் சொல்லத் துவக்கும் போதே ''தந்தை" என்னும் இனிய பெயரால் இறைவனை "எங்கள் பிதாவே" என்றழைத்து அவருடைய இதயத்தைத் தொட்டு விடுகிறோம். அவரே எல்லாத் தகப்பன்மாரையும் விட அதிக அன்புள்ள தந்தை சிருஷ்டிப்பில் அவர் சர்வவல்லவர். உலகை நடத்தி வருவதில் மிக வியப்புக்குரியவர். அவருடைய தெய்வீக பராமரிப்பைப் பார்க்கையில் அவர் முற்றும் நேசத்துக்குரியவர் அவரை மீண்டும் மீண்டும் "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!'' என்று நாம் அன்போடு அழைப்போமாக.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!
(முழு செபத்தையும் சொல்ல வேண்டாம்)

முதல் உமது மட்டற்ற உளவாகும் தன்மையினால் பரலோகத்தையும் பூலோகத்தையும் நிரப்பியிருப்பவரே!
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!

உமது மகிமையினால் புனிதர்களில் இருக்கின்றீர். உமது நீதியினால் தீர்ப்பிடப்பட்டவர்களில் இருக்கின்றீர். உம் அருளினால் நல்லவர்களிடத்திலும் உமது பொறுமையினால் அவர்களை சகித்துக் கொள்கின்றீர்.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!

அன்புள்ள தந்தாய்! உம்மிடமிருந்தே நாங்கள் வருகிறோம் என்பதை எப்போதும் எங்கள் நினைவில் கொண்டிருக்க அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!

உம்முடைய உண்மையான பிள்ளைகள் எப்படி வாழ வேண்டுமோ அப்படி, நாங்கள் வாழச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!

நாங்கள் நடக்கும் பாதை உம்மை நோக்கியதாயிருக்கவும் அதிலிருந்து ஒரு போதும் வழுவாதிருக்கவும்
செய்தருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!

எங்கள் இருதயம், ஆன்மா, எங்கள் பலம் யாவற்றையும் உம்மை நோக்கியிருக்கச் செய்தருளுவீராக.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே!

கடவுள் நம் தந்தையாக இருக்க விரும்புகிறார். நான் அவருடைய பிள்ளையாக இருக்க விரும்புகிறேனா?
மௌனமாக தியானிப்போம்.

முதல் தீர்க்கதரிசியான தாவீதரசன் கூறினார். ஆண்டவரின் திருநாமம் புனிதமானதும் அச்சம் விளைவிப்பதும் என்று, தளங்களின் ஆண்டவரான கடவுளின் பரிசுத்ததனத்தை செராபியம் வானவர்களை இடைவிடாமல் புகழும் புகழ் ஒலியால் வானுலகம் எப்பொழுதும் எதிரொலிப்பதாக இசையாஸ் உரைத்தார். இத்தனை பெரிய பரிசுத்தரான நம் இறைவனின் குண இலட்சணங்களை, எல்லா உலகமும் அறிந்து ஆராதிக்க வேண்டுமென்று நாம் மன்றாடுவோம்.
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!

உண்மைக் கடவுளை அறியா அனைவராலும் இறைவன் அறிந்து நேசிக்கப்பட வேண்டுமென மன்றாடுவோம்.
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!

எல்லா மாந்தருளும் தவறான கொள்கைகளை விட்டு விட்டு உயிருள்ள விசுவாசத்தோடும் திடமுள்ள நம்பிக்கையோடும் பற்றியெரியும் அன்போடும் அவருக்குப் பணி புரிந்து அவரை மகிமைப் படுத்த வேண்டுமென்று மன்றாடுவோம்.
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!

நம் தந்தையின் நாமம் நம் வாயில் எப்பொழுதும் இருக்கும்படி இதை நம் இருதயத்தில் வைத்திருப்போமாக.
1 நிமிட மௌனம்.

கடவுளின் அரசு இவ்வுலகத்தைச் சார்ந்ததல்ல. அது அன்பின் அரசு மக்களின் இருதயங்களில் இருப்பது. எல்லா மக்களிடையும் கடவுளின் இராச்சியம் வரும்படி மன்றாடுவோமாக.
உம்முடைய இராட்சியம் வருக!

மரணத்துக்குப் பின் முடிவற்ற உத்தம பேரின்பத்தில் உமது அரசில் உம்முடன் நாங்களும் ஆட்சி புரியத் தகுதியுடையவர்கள் ஆகுமாறு உமதருளால் எங்கள்
ஆன்மாக்களில் ஆட்சி புரிவீராக.
உம்முடைய இராட்சியம் வருக!

ஆண்டவரே! வரவிருக்கும் இப்பேரின்பத்தை நாங்கள் விசுவசித்து ஏற்று அதை நம்பி எதிர்பார்த்திருக்கிறோம்.
உம்முடைய இராட்சியம் வருக!

ஏனென்றால் பிதாவான சர்வேசுரன் தமது பெரும் நன்மைதனத்தால் அதை எங்களுக்கு வாக்களித்துள்ளார்.
உம்முடைய இராட்சியம் வருக!

சுதனாகிய சர்வேசுரன் அதை எங்களுக்கு வாங்கித் தந்துள்ளார்,
உம்முடைய இராட்சியம் வருக!

ஒளியாயிருக்கும் பரிசுத்த ஆவியான சர்வேசுரன் அதை எங்களுக்கு வெளிப்படுத்தினார்.
உம்முடைய இராட்சியம் வருக!

நம் ஆண்டவரின் அன்பின் அரசு எல்லா உள்ளங்களிலும் விரைவில் வரும்படி வேண்டிக் கொள்வோம்.
1 நிமிட மெளனம்

கடவுளின் சித்தத்துடன் நம்முடைய சித்தத்தை எவ்வித தயக்கமுமின்றி இணைத்துக் கொள்வதில்தான் நம் அர்ச்சிப்பு அடங்கியுள்ளது. இறைவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல நம்மிடத்திலும் செய்யப்படும்படி மன்றாடுவோமாக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்தில் செய்யப்படுவதாக.

கடவுளின் திட்டங்களை யாரும் உடைத்துவிட முடியாது. ஏனென்றால் அவருடைய பராமரிப்பால் முன்னறியப்பட்டு அவருடைய திட்டங்களுக்குள் முன்கூட்டியே பொருத்தப்படாத எதுவும் நடைபெறவே முடியாது. இறைவனின் சித்தம் நிறை வேற்றப்படாமல் தடை செய்ய
உலகில் எதனாலும் முடியாது.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்தில் செய்யப்படுவதாக.

உம்முடைய சித்தம் நடைபெறுக என்னும்போது இவ்வாழ்வில் இறைவன் நமக்கு என்னென்ன அனுப்பத்தகும் என்று சித்தங் கொண்டுள்ளாரோ அவற்றையெல்லாம் நாம் தாழ்மையுடன் அமைந்த மனதோடு ஏற்றுக் கொள்ளும்படி அவர் அருள் வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்தில் செய்யப்படுவதாக.

இறைவனின் சித்தம் அவருடைய கட்டளைகளில் வெளியாக்கப்பட்டுள்ளது. அச்சித்தத்தை பிரமாணிக்கத்துடனும் தாமதமின்றியும் அன்புடனும் விண்ணக சம்மனசுக்களும் அர்ச்சிஷ்டவர்களும் நிறைவேற்றுகிறது போல நாமும் நிறைவேற்ற மன்றாடுவோம்.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்தில் செய்யப்படுவதாக.

"கடவுள் சித்தம் நம் பாக்கியம்" இதன் பொருளை நாம் சற்று நினைத்துப் பார்ப்போம்.
1 நிமிட மெளனம்

இறைவனைத் துதித்தபின் தம் ஆன்மீகத் துறையிலும் லெளகீகத் துறையிலும் நமக்கு வேண்டிய யாவற்றையும் நாம் கடவுளிடம் கேட்கவும் நமதாண்டவர் நமக்குக் கற்றுக் தந்துள்ளார். அதுவே நம் அனுதின் உணவு. இவ்வனுதின உணவுக்காக மன்றாடுகிறோம்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

நமது வறுமையையும் போதா தன்மையையும் தாழ்மையையும் ஒப்புக் கொண்டு இறைவனுக்கு மகிமையளிக்கிறோம். அவருடைய தெய்வீக பராமரிப்பினால் இவ்வுலக நலன்கள் யாவும் வருகின்றன
என்று அறித்து அவரை வாழ்த்துகிறோம்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

உணவை'' என்கிறோம். அதாவது வாழ்வதற்குத் தேவையானதை அவ்வாறு குறிப்பிடுகிறோம். செல்வச் செழிப்பை அல்ல.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

முதல் : "இன்று அளித்தருளும் என்கிறோம்" அதாவது நாம் தற்சமயத்தைப்பற்றி மட்டுமே நினைக்கிறோம். நாளையைப் பற்றிய கவலையை அவருடைய பராமரிப்பில் விட்டு விடுகிறோம்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

எங்கள் "அனுதின" உணவை என்று சொல்லும் போது நாம் இறைவனின் உதவியை ஒவ்வொரு நாளும் நாடியிருக்கிறோம் என்றும், நம் பாதுகாப்பையும் உதவியையும் முழுவதும் அவரிடமே தேடி அவரிலேயே
ஊன்றி நிற்கிறோம் என்றும் ஒப்புக் கொள்கிறோம்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

காலை முதல் மாலை வரை விநாடியும் நாம் நம் தந்தையின் பாதுகாப்பில் உள்ளோம் என்பதை சற்று நினைவு கூறுவோம்.
1 நிமிட மெளனம்

நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும், எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மை கடனாளியாக்குகிறது என்றும் அவரின் நீதிப்படி நாம் கடைசி காசுவரை உத்தரித்தே தீர வேண்டும் என்றும் புனித அகுஸ்தீனும் தெர்த்துல்லியன் என்பவரும் கூறியுள்ளார்கள். நாம் அனைவருமே இத்தகைய கடனாளி யாயிருப்பதை எண்ணி மன்றாடுவோம்.
எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல் எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

எங்கள் தந்தாய்! எங்கள் நினைவாலும் சொல்லாலும் நாங்கள் செய்த பாவங்களையும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டதால் நாங்கள் கட்டிக்கொண்ட பாவங்களையும் மன்னித்தருள்வீராக!
எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல் எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

நாம் யாருடனாவது மனத்தாங்கலாய் இருக்கிறோமா? என்று நினைத்துப் பார்த்து அப்படி இருந்தால் அவர்களை மனதார மன்னிப்போமாக.
1 நிமிட மெளனம்

உலகம், பிசாசு, சரீரம் ஆகிய மூன்று எதிரிகளும் நம்மைத் தாக்குகிறார்கள். நம் அன்பைப் பரீட்சிக்கும்படி கடவுள் நமக்கு சோதனைகளை அனுமதிக்கிறார். ஆதலால் அதில் விழாதபடி மன்றாடுவோம்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்!

அவர் மீதுள்ள அன்பால் சோதனைகளை நாம் வெல்ல வேண்டும். எனவே மன்றாடிக் கேட்போம்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்!

பாவத்தின் தீமை, அநித்திய தண்டனை நித்திய நரகம் இவைகள் நமக்குத் தகும் என்று நாம் அறிவோம். ஆனால் இவற்றிலிருந்து விடுதலை பெறக் கேட்போம்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்!

ஆமென்! "ஆம் என்று" அதாவது அப்படியே ஆகுக, என்று நாம் பரலோக மந்திரத்தை முடிக்கிறோம். ஆமென் என்ற வார்த்தை ஆறுதலான வார்த்தை. நாம் கேட்ட யாவும் நமக்குத் தரப்படும் என்று நம்பி அதை
அர்த்தத்துடன் சொல்வோம்.
ஆமென்!

ஆமென் என்பது ஓர் முத்திரை, நம் மன்றாட்டுக்களைத் தாம் தருவதாக இறவைன் ஆமோதிப்பதன் ஒரு முத்திரைபோல அது உள்ளது என்று புனித ஜெரோம் கூறுகிறார். அதையே நாமும் சொல்வோம்.
ஆமென்!

நீ கேட்டபடியே உனக்கு நடை பெறட்டும், நீ கேட்டவற்றை உண்மையாகவே நீ அடைந்து விட்டாய், இதுவே ஆமென். அதை நாம் எல்லோரும் சொல்வோம்.
ஆமென்!

இப்போது நாமெல்லோரும் சேர்ந்து பரலோக மந்திரத்தைப் பாடுவோமாக.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடையநாமம் அர்ச்சிக்கப் படுவதாக! உம்முடைய இராச்சியம் வருக! உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக! எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்! எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழ விடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

ஆமென் சேசு.