புனித லிகோரியாரின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்

கிறிஸ்துபிறப்பு விழாவிற்கான நவநாள் பக்தி முயற்சிகள் நமது ஆலயங்களிலும், குருமடங்கள், கன்னியர் மடங்களிலும் நடைபெற்று வருகின்றன. சில ஆலயங்களில் பாடலுடன் செபங்கள் கூறப்படுகின்றன. திருச்சபையில் மக்களுக்கு மறையுரை, தியானம் முதலியவற்றை நடத்தி வரும் இரட்சகர் சபையை நிறுவிய புனித அல்போன் லிகோரியார் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபத்தை எழுதினார். இது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது.

1. ஒரே ஓர் ஆன்ம / சமூக / தனிநல கருத்தை வைத்து ஒன்பது நாள்களிலும் செபிக்கலாம்.

2. ஒவ்வொரு செபத்திற்குப் பின்னரும் ஒரு பரலோக செபம், அருள் நிறை மரியே செபம், திரி, செபம் கூறி அந்தக் கருத்துக்காகச் செபிக்கலாம்.

(16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை)

முதல் நாள்:

இறைவனின் மைந்தரே, இயேசுவே, எங்களுக்காக எங்களில் ஒருவராகப் பிறந்து மரித்தீர். இந்த அன்புக்குக் கைமாறாக வாழாமல் இருந்திருக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னித்து, உன்னதமான எண்ணத்துடன் வாழ அருள்புரியும்.

அன்புத் தாயே, மரியே! இறைவனை முழுவதும் நேசித்து அவரது அருளைப் பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி).

இரண்டாம் நாள்:



நேசத்திற்குரிய குழந்தை இயேசுவே! காணாமற்போன ஆடாக உம்மை விட்டு ஓடிப் போகாமல், உமது கரத்திலே இருக்க வரம் தாரும். வாழ்க்கையில் உம்மை விடாது நேசிக்க வரம் தாரும்.

ஓ மரியே, எங்களுக்காகப் பரிந்து பேசுபவரே! எங்களை மன்னித்து, ஆயுள் முழுவதும் அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க உம் மகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி)

மூன்றாம் நாள்:

அன்பான குழந்தை இயேசுவே! பலமுறை என் பாவத்தால் உம்மை மனம் வருத்தியிருக்கிறேன். நீரே என் சொத்தும், நல்லதும் ஆவீர். வேறு எதுவும் வேண்டாம். நீரே எனக்குப் போதும்!

மரியே! எப்போதும் இயேசுவையே நான் நேசிக்கவும், இயேசுவால் நேசிக்கப்படவும் அருள் பெற்றுத் தாரும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி)

நான்காவது நாள்:

அன்பான இயேசுவே! நீர் எனக்காக எவ்வளவோ பழிச்சொற்கள், மனக்காயங்கள் போன்றவற்றை அணைத்துக் கொண்டீர்! ஆனால் ஒரு சுடுசொல் கூட பிறர் கூறும்போது என்னால் தாங்க இயலவில்லை. என்னைத் திட்டுபவர்கள் மீது கோபமான எண்ணமே வருகின்றது. நான் இதற்காக வெட்கப்படுகிறேன். இதுபோன்று இனி நடந்து கொள்ள மாட்டேன். பிறர் என்னை வசை கூறிப்பேசும்போது உம்மீது கொண்ட அன்பால் அதைத் தாங்கிக்கொள்ள அருள்புரியும்!

அன்புள்ள மாதாவே! எனக்காக இயேசுவிடம் பரிந்து பேசி வேண்டிக்கொள்ளும்.
(கருத்து) (பர, அரு, திரி)

ஐந்தாம் நாள்:

இனிய இயேசுவே! நீர் பாடுபட, மனம் கஷ்டப்பட நானும் காரணமாய் இருந்திருக்கிறேன். உம்மிடம் மன்னிப்புப் பெற நான் என்ன செய்ய வேண்டும் எனக் காட்டும். என்னைவிட உம்மை அதிகமாக நான் நேசிக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு உமது அன்பால் பிணைத்துக் கொள்ளும்.

அன்பான தாயே! இறைவனை அதிகம் அன்பு செய்ய எனக்கு உதவும். இதை மட்டுமே நான்கேட்கிறேன். எனக்கு இதை உம் வழியாக அடைவேன் என்ற நம்பிக்கையை அருளும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி)

ஆறாவது நாள்:

எனது இரட்சகரே! உம்மால் ஓர் ஆன்மாவைக்கூட இழக்க மனம் வராது. இவ்வளவு நாட்கள் நான் பாவியாக இருந்தும் பொறுமையாகத் தாங்கி கொண்டீர். மீதமுள்ள நாட்களில் உம்மை அன்பு செய்ய வரம் தாரும்.

எனது தாயே! என் நம்பிக்கையே, நீர் எனக்காகப் பரிந்து பேசி செபித்தால் எனக்கு நிச்சயம் அருள் உண்டு.ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி)

ஏழாவது நாள்:

குழந்தை பாலனே, நீர் அழுவதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் நாங்களே உம்மை எங்கள் பாவங்களால் வருத்தினோம். மன்னியும். நான் உம்மை நேசிப்பதை நீர் அறிந்திருக்கிறீர். என்னை மன்னியும். உம்மை விட்டு பிரியவிடாதேயும்.

மரியே! இறைவனின் அன்பில் எப்போதும் வாழவும், அவரது அன்பில் மரிக்கவும் தயை செய்யும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி)

எட்டாம் நாள்:

இறைவனாகிய இயேசுவே! முப்பது ஆண்டுகளாக ஒரு தச்சுப் பட்டறையிலேயே நீர் வாழ்ந்திருக்கிறீர். அவ்வாறு இருக்க இவ்வுலக செல்வங்களில் எனக்கு ஈடுபாடு ஏன்? எல்லாவற்றையும் விட்டு விட்டு உமது அன்பால் வாழ விரும்புகிறேன். பாவத்தால் உமது அருளை இழப்பதைவிட, எனது வாழ்க்கையை ஆயிரம் முறை இழப்பேன்.

மரியே! பாவிகளின் அடைக்கலமே! நம்பிக்கையே! ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி)

ஒன்பதாம் நாள்:

வணக்கத்துக்குரிய குழந்தை பாலனே! நீர் என்னை அழைத்தீர் என்பதால் மட்டுமே, நானாக உம் காலடியில் வர எனக்கு தைரியம் வந்தது. உமது அன்புத் தீயில் நான் வளரவும், உம் அன்பை விட்டு விலகாதிருக்கவும் அருள்புரியும்!

என் அன்பு மாதாவே! உம்மால் இயேசுவிடம் எதையும் செபத்தால் கேட்டுப் பெற முடியும். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆமென். (கருத்து) (பர, அரு, திரி)

செபம்:

இனிய இயேசுவே! புனித தேவதாயின் பெயரால் என்னை ஆசீர்வதித்துத் தேற்றி, முழு இதயத்துடன் உம்மைப் புகழ எனக்கு அருள் தாரும்.

ஆமென்.