ஆறாம் தேவ இலட்சணம்

1. சர்வேசுரனுடைய ஆறாம் தேவ இலட்சணத்தைச் சொல்லு.

“சர்வேசுரன் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக் கிறார்.” 


2. “எல்லாவற்றிற்கும்” என்னும் பதத்தால் குறிக்கப்பட்டவைகள் எவை?

பூலோகமும், பரலோகமும், அவைகளில் அடங்கிய சகலமும் ஒன்றுவிடாமல் குறிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, வானம், பூமி, மனிதர், பறவைகள், வீடுகள், பொருள்கள் முதலியவைகள்.


3. ஆதிகாரணம் என்றால் என்ன?

ஆதி என்பதற்கு முதல் என்று அர்த்தமானதால், ஆதி காரணம் என்னும் பதத்துக்கு முதல் காரணம் என்று அர்த்தமாம்.


4. சர்வேசுரன் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?

சர்வேசுரன் எந்த விதிவிலக்குமின்றி சகலத்துக்கும் முதல் காரணமாயிருக்கிறதுமன்றி, இரண்டாம் காரணங்களாகிய உயிருள்ளவைகள் இன்னின்ன காரியத்தைச் செய்ய தங்கள் கொண்டிருக்கும் சக்தியை அவருடைய உதவியில்லாமல் உபயோகிக்க முடியாதென்று அர்த்தம் ஆகும்.  உதாரணமாக: குருவிகளுக்குக் கூவ சக்தியிருக்கிறது; ஆனாலும் சர்வேசுரனுடைய உதவியில்லாமல் அவைகள் அந்தச் சக்தியை உபயோகித்துக் கீச்சிட முடியாது.


5. குயவன் தான் செய்த சட்டி பானைகளுக்கு ஆதிகாரணமா யிருக்கிறானென்று சொல்லலாமோ?

சொல்லக் கூடாது.  ஏனெனில், ஏற்கெனவே இருந்த மண்ணை உபயோகித்து அவைகளைச் செய்வான்.  சர்வேசுரன் மண்ணை உண்டாக்கினதினாலே, அவர் அந்தச் சட்டி பானைக்கு முதல் காரணமாயிருக்கிறார். குயவனோவென்றால் அவைகளுக்கு இரண்டாம் காரணம் என்று சொல்ல வேண்டியது.


6. அப்படியானால் மனிதன் ஆதிகாரணமாயிருக்க முடியாதா?

மனிதன் ஏற்கனவே இருந்த பொருளை உபயோகியாமல் ஒன்றும் செய்ய முடியாததினால், அவன் ஆதிகாரணமாயிருக்க முடியாது.


7. சர்வேசுரன் எப்படி சகலத்துக்கும் ஆதிகாரணமாயிருக்கிறார்?

சர்வேசுரன் ஒன்றுமில்லாமையினின்றும், யாதொரு உதவியின்றியும், சகலத்துக்கும் இருத்தல் கொடுத்திருக்கிறபடியால். அவர் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார்.