வேறு தேவ இலட்சணங்கள்

1. ஞானோபதேசத்தில் குறிக்கப்பட்ட ஆறு இலட்சணங்கள் தவிர சர்வேசுரனுக்கு வேறு இலட்சணங்கள் இல்லையா?

இன்னும் அவருக்கு அநேகம் உண்டு.


2. அவைகளில் சிலவற்றைச் சொல்லு.

சர்வேசுரன்:

1. மாற்றமற்றவர்.
2. சகலத்தையும் அறிகிறவர்.
3. சர்வ ஞானமுடையவர்.
4. சர்வ வல்லபர்.
5. மட்டற்ற பரிசுத்தர்.
6. நீதியுள்ளவர்.
7. இரக்கமுள்ளவர்.
8. சர்வ சத்தியமுள்ளவர்.
9. நல்லவர்.


3. சர்வேசுரன் எப்படி மாற்றமற்றவராயிருக்கிறார்?

உலகத்திலுள்ள படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும் நாளுக்கு நாள் மாறிப்போகின்றன. இன்றைக்கு இருந்து நாளைக்குக் காணாமல் போகக் கூடியவைகளா யிருக்கின்றன. இப்படித் தங்கள் உயிரையாவது, இருக்கையையாவது நிலைநிறுத்த மனிதரிடத்தில் சக்தியில்லை. அவர்கள் பிராயத்திலும், குணங்களிலும், அறிவிலும், மனதிலும் எந்நேரமும் மாறுகிறார்கள். அவர்களுக்கு நாளுக்குநாள் புத்தி அதிகரிக்கிறதுமுண்டு, குறைவதுமுண்டு. அவர்கள் இன்று விரும்பினவைகளை, மறுநாள் வெறுக்கிறார்கள். அடைவதும், அடைந்ததை இழந்துபோவதும் மனிதனுடைய தன்மை. சர்வேசு ரனோ அப்படியல்ல. அவர் நித்தியராகையால் இவ்வகைப்பட்ட மாற்றங்கள் அவரிடத்திலிருக்க முடியாது. அவர் சுபாவத்திலும், இலட்சணங்களிலும், தீர்மானங்களிலும், அறிவிலும், ஞானத்திலும் எப்போதும் மாறாமலிருக்கிறார். வானமும் பூமியும் மாறிப்போகும். தேவரீரோ எப்போதும் அதே விதமாயிருக்கிறீர் என்று வேதாக மத்தில் வாசிக்கிறோம் (சங்.  28) சர்வேசுரனிடத்தில் யாதொரு வேற்றுமையும் விகற்பத்தின் நிழலுமில்லை என்று அர்ச். இயாகப்பர் எழுதியிருக்கிறார். (இயாக.1:17)


4. சர்வேசுரன் சகலத்தையும் அறிகிறவர் என்றால் என்ன?

(1) சர்வேசுரன் தம்மைத் தாமேயும், தமது இலட்சணங் களையும் அதியுன்னதமாய் அறிகிறார். இந்த அறிவிலிருந்து சகல வஸ்துக்களையும் அறிகிறார்.

(2) முன் இருந்ததும், இப்போது இருப்பதும், இனி இருக்கக்கூடியதுமான சகல சிருஷ்டிகளும் அவருக்குத் தெரியும். (யோப். 24:1.)

(3) ஒவ்வொரு மனிதனுடைய கிரியைகளையும், இரகசிய நினைவுகளையும், அந்தரங்க ஆசைகளையும் பிரத்தியட்ச மாய்ப் பார்க்கிறார். (சர். பிர. 23:27,28)

(4) என்ன இருந்தது என்பதையும் அல்லது என்ன இருக்கும் என்பதையும் தெளிவாக அவர் அறிவதுமல்லாமல் இன்னும் சில திட்டங்கள் நிறைவேறியிருந்தால், என்ன இருந் திருக்கும் என்றும், என்ன இருந்திருக்கலாம் என்றும் அறிகிறார். இப்படியே கொராசின் என்னும் இடத்தில் பண்ணப்பட்ட அற்புதங்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருக்கு மேயாகில், அந்த நகரத்தார் தபம் செய்திருப்பார்கள் என்று சேசுநாதர் நமக்கு அறிவித்திருக்கிறார். (மத். 11:21).

(5) ஒவ்வொரு மனிதனும் வருங்காலத்தில் தன் மனச் சுயாதீனத்தினால் செய்யப் போகிற எல்லாவற்றையும் அவர் அறிகிறார்.


5. சர்வேசுரன் எப்படி எல்லாவற்றையும் அறிவார்?

சர்வேசுரன் நித்தியராயிருப்பதைப்பற்றி அவருக்கு இறந்த காலமும். எதிர்காலமும் இராமல். அவருக்கு எல்லாம் நிகழ் காலமே ஆதலால், அவர் ஒரே ஏக பார்வையில் ஒரே நேரத்தில் பிரயாசையும் குறைவுமின்றி நித்தியத்தில் சகலத்தையும் அறிவார். சகலமும் ஒரு பூகோளப் படம் போல் அவருக்கு முன் தென்படுகின்றன. அவரது கண்களுக்குமுன் சகலமும் திறப்பாயும், வெட்டவெளியாயுமிருக்கின்றது என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார் (எபி.4:13).


6. சர்வேசுரன் எப்படி சர்வ ஞானமுடையவராயிருக்கிறார்?

சர்வேசுரனுக்குச் சகலமும் தெரிந்திருக்கிறபடியால், தாம் நியமித்த கதியை அடைய அதி உத்தமமான வழிமுறைகளை எப்போதும் பயன்படுத்துகிறார். ஆதலால் உலகமும், சிருஷ்டிகளும் சர்வேசுரன் தங்களுக்குக் குறித்திருக்கும் கதியைக் கட்டாயம் அடையும். சர்வேசுரனுடைய ஞானத்திறனுக்கு வரம்பொன்று மில்லை. (சங்.146:4.)


7. சர்வேசுரனை ஏன் சர்வ வல்லபர் என்று அழைக்கிறோம்?

சர்வேசுரன் எல்லாவற்றையும் செய்யக்கூடியவரானபடி யாலும், அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லாததினாலும், அவரைச் சர்வ வல்லபர் என்று அழைக்கிறோம். சர்வேசுரனால் எல்லாம் கூடும் என்று சேசுநாதரே சொல்லியிருக்கிறார் (மத்.19:26). சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை (லூக்.1:37). ஆண்டவர் வானத்திலும், பூமியிலும். சமுத்திரத்திலும், சகல பாதாளங்களிலும் தமக்குச் சித்தமான யாவையும் செய்தருளினார். (சங்.134:6)


8. சர்வேசுரன் எப்படிச் சர்வ வல்லபராயிருக்கிறார்?

(1) சொல்லுவதும், செய்வதும், விரும்புவதும், சக்தி கொண்டிருப்பதும் சர்வேசுரனுக்கு ஒன்றுதான்.

(2) அவர் தாம் விரும்புவதையே, எவ்வித உதவியும் பிரயாசையுமின்றி தமது திருச்சித்தத்தினாலே மாத்திரம் செய்யக் கூடியவர். ஒனறுமில்லாமையினின்று ஒரு வஸ்துவைச் சிருஷ்டிக்கவும், முன்னிருந்த பொருளை அழிக்கவும், வேறென்றாக  மாற்றவும் அவரால் கூடும். ஆகட்டும் என்று சர்வேசுரன் சொல்லுகிற கணமே அவர் விரும்புகிறது நிறைவேறும்.

3) அவருடைய வல்லபத்தை எதிர்க்கக் கூடுமானவன் ஒருவனுமில்லை. சர்வேசுரனுடைய திருவுளத்திற்கு எதிர்த்து வரத் தக்கவன் ஒருவனுமில்லை என்று எஸ்தேர் வேதபுஸ்தகத்தில் வசனித் திருக்கின்றது. (எஸ். 13:9.)


9. சர்வேசுரனுடைய வல்லமையை விசேஷமாய் எடுத்துக் காட்டுகிறது என்ன?

பரலோகத்தையும், பூலோகத்தையும், அவற்றிலடங்கிய சகலத்தையும் அவர் படைத்த செயல் சர்வேசுரனுடைய வல்லமையை விசே­மாய் எடுத்துக்காட்டுகிறது. வான மண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன: ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டுகின்றது (சங்.17:1).


10. சர்வேசுரன் செய்யக்கூடாதது ஒன்றுமில்லையா?

(1) சர்வேசுரன் தமது இலட்சணங்களுக்கு விரோத மானவைகள் எதையும் செய்யமுடியாது. அப்படியே சர்வேசுரன் தாம் ஏமாறவும். நம்மை ஏமாற்றவும், பாவம் செய்யவும் முடியாது. ஏனென்றால், பிசகானதும், பாவமானதும் குறைவுள்ள சுபாவத்துக் குரியது.

(2) சர்வேசுரன் புத்திக்கு முழுதும் விரோதமானவை களையும், ஒன்றுக்கொன்று ஒவ்வாததும் எதிரானதுமான காரியங் களையும், ஒரு வஸ்து அந்த வஸ்துவாக இருக்க வேண்டிய சுபாவ குணங்களை மாற்றி அதே வஸ்துவாக இருக்கவும் செய்யமுடியாது. இப்படியே ஒரே நேரத்தில் வட்டம் சதுரமாயிருக்கும்படி அவர் செய்யமுடியாது. ஆகிலும், வட்டமான ஒன்றைச் சதுரமாக மாற்றுவதற்கு அவருக்கு அளவில்லாத வல்லமையுண்டு. ஒரு கல் சிந்திக்கும்படி செய்வது சர்வேசுரனுக்குக் கூடாத காரியம்.

(குறிப்பு: ஒரு கல் சிந்திக்க ஆரம்பித்தால், அது தன் சுபாவ குணத்தை இழந்து விட்டது என்பது பொருள்.)


11. சர்வேசுரன் எப்படி மட்டற்ற பரிசுத்தர்?

(1) சர்வேசுரன் நன்மையை விரும்பி அகத்தியமாய் அதை நேசிக்கிறார். ஆதலால் அதி உன்னத நன்மைத்தனமாகிய தம்மை அளவற்ற விதமாய் நேசிக்கிறார்.

(2)அவர் இவ்வுலகத்திலும், மோட்சத்திலுமுள்ள எல்லாப் பரிசுத்ததனத்துக்கும், அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஆதி காரணமாயிருக்கிறார்.

(3) தாம் யய்யும் சகலத்திலும் பரிசுத்தமாயிருக்கிறார். சர்வேசுரன் தமது சகல கிரியைகளிலும் பரிசுத்தராயிருக்கிறார் என்று தாவீது இராசா வசனித்தார் (சங்.144:13).

(4) மனிதனை பரிசுத்தம் பண்ணி அர்ச்சிப்பது அவரால் மாத்திரம் கூடியது.

(5) புத்திக்குத் தீமையான பிசகையும், மனசின் தீமை யான பாவத்தையும் அவசியமாய் வெறுக்கிறார். 

இதைப்பற்றியே சம்மனசுகள் அவருடைய சிம்மாசனத்தைச் சூழ்ந்து பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று இடைவிடாமல் அவரை ஸ்துதித்து வருகிறார்கள். (காட்சி.4:8; இசை.6:3.)


12. சர்வேசுரன் எப்படி நீதியுள்ளவர்?

அவரவர் பாவ புண்ணியங்களுக்குத் தக்கபடி ஒவ்வொரு வருக்கும் இவ்வுலகத்தில் அல்லது நிச்சயமாய் மறு உலகில் பலன் அளிக்கிறார். உள்ளபடி பொதுத்தீர்வையில் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்குத் தக்கதுபோல் சம்பாவனையாவது, தண்டனையாவது விதிப்பார். அப்பொழுது ஒவ்வொருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கபடி பலனளிப்பார். (மத்.16:27.) ஆண்டவர் தமது எல்லா நடைகளிலும் நீதியுள்ளவராயிருக்கிறார் (சங்.144:17).


13. சர்வேசுரன் எப்படி இரக்கமுள்ளவர்?

(1) நன்மைத்தனத்தின் சுருபியாகிய சர்வேசுரன் எல்லா மனிதரும் இரட்சணியமடைய வேண்டுமென விரும்பி அவர்களைப் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்டருளினார் (1 தீமோ.2:4).

(2) நித்திய பேரின்பத்துக்காக மனு­னைச் சிருஷ்டித்து அதை அவன் அடையும்படியாக, மற்றச் சகல சிருஷ்டிகளையும் அவனுக்கு உதவியாகக் கொடுத்திருக்கிறார்.

(3) இரட்சணியத்திற்கு வழியாகிய அநேகநேக தேவ வரப்பிரசாதங்களை அனைவர்மீதும் திரளாய்ப் பொழிந்தருளுகிறார்.

(4) பாவியின் நித்திய மரணத்தையல்ல, அவன் மனந்திரும்பி, நித்திய சீவியத்தைப் பெறவேணுமென்று ஆசித்து, தம்மைவிட்டுச சிதறிப்போன பாவிகளை உடனே தண்டியாமல், அவர்களைத் தம்மிடம் வரும்படி அழைத்து மனந்திரும்பும்படி வேண்டிய நேரம் கொடுத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். அக்கிரமி யுடைய மரணத்தை நாம் தேடுகிறதில்லை. அவன் பிழைக்க வேண்டுமென்பதையே விரும்புகின்றோம் (எசேக்.33:11) ஆகையினாலே சர்வேசுரன் கரைகாணாத இரக்க தயாளமுள்ளவர் என்று சொல்லவேண்டியது.


14. சர்வேசுரன் எப்படி சர்வசத்தியமுள்ளவர்?

சர்வேசுரன் தாம் ஏமாறாமலும், ஒருபோதும் யாரையும் மோசம் செய்யாமலும் உண்மையுள்ளவராயிருப்பதால் அவர் சர்வ சத்தியமுள்ளவர்.

15. சர்வேசுரன் எப்படி நல்லவர்?

(1) சர்வேசுரன் சுபாவமாய்த் தம்மிலே தாமே அளவில்லாத நல்லவராயிருக்கிறார்.

(2) எப்போதும் தமது சிருஷ்டிகளின் நன்மையைக் கோரி, தமது நன்மைகளை அவைகள்மீது பொழிந்தருளுகிறார். உள்ளபடி நாம் அனுபவிக்கும் நன்மைகளெல்லாம் அவரிடமிருந்தே வருகின்றன.

(3) நாம் கேட்கும் மன்றாட்டைத் தயவாய்த் தந்தருளுகிறார்.