ஐந்தாம் தேவ இலட்சணம்

1. சர்வேசுரனுக்குள்ள ஐந்தாம் தேவ இலட்சணத்தைச் சொல்லு.

“சர்வேசுரன் எங்கும் வியாபித்திருக்கிறார்.” 


2. வியாபித்திருக்கிறது என்ற பதத்திற்கு அர்த்தமென்ன?

எவ்விடத்திலும், முழுவதும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தமாம்.


3. சர்வேசுரன் எங்கும் வியாபித்திருக்கிறார் என்று சொல்வது ஏன்?

ஏனெனில் அவர் பரலோகத்திலும், பூலோகத்திலுமுள்ள சிருஷ்டிக்கப்பட்ட சகல வஸ்துக்களிலும், அவைகளுக்கு வெளியேயும் முழுதும் இருக்கிறார்.  அளவுள்ள வஸ்துக்களில் இருக்கிற இடங்களில் மாத்திரமல்ல, அவைகளுக்கு அப்பாலும், இன்னும் இனி இருக்கக்கூடிய சகல ஸ்தலங்களிலும் வியாபித் திருக்கிறார்.


4. சர்வேசுரன் ஏன் எவ்விடத்திலும் நிறைந்திருக்க வேண்டும்?

சர்வேசுரன் பூரணமாயிருக்கிறவராகையால், அவர் எங்குமிருக்க வேண்டியது.  அவர் ஓர் இடத்தில் இல்லையானால், அது அவருக்கு ஒரு குறையாயிருக்கும்.  உள்ளபடி அந்த இடம் அவருக்கு ஓர் எல்லையைப் போலிருக்கும்.


5. இந்தச் சத்தியத்தை நமக்குப் படிப்பிக்கிறதற்கு வேதாகமம் சொல்லுகிறதென்ன?

“உமது இஸ்பிரீத்துவுக்கு மறைவாக நான் எங்கே போவேன்?  உம்முடைய சமூகத்தை விட்டு நான் எங்கே ஒளிந்து கொள்வேன்? நான் வானத்தில் ஏறினால் நீர் அங்கே வீற்றிருக்கிறீர்;  நான் பாதாளத்தில் இறங்கினால், அங்கேயும் இருக்கிறீர்.  நான்... சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்திக் கொண்டு போகும்” (சங்.138:7-10).


6. சர்வேசுரன் இப்போது எங்கே இருக்கிறார்?

அவர் எங்கும் இருக்கிறார்.


7. இங்கு இருக்கிறாரோ?

இருக்கிறார்.


8. இங்கே இருந்தாலும் நம்முடைய வீட்டிலும், ஊரிலும் தேசத்திலும்கூட இருக்கிறாரோ?

உலகத்தில் எவ்விடத்திலும் இருக்கிறார்.


9. உலகத்தில் என்ன செய்கிறார்?

உலகத்தை ஆண்டு காப்பாற்றுகிறார்.


10. இங்கே இருக்கிற சகலத்திலும் இருக்கிறாரா?

இருக்கிறார்.


11. சகல பொருட்களில் இருந்து என்ன செய்கிறார்?

அவைகளைக் காப்பாற்றி வருகிறார்.


12. சர்வேசுரன் மோட்சத்தில் இருக்கிறாரா?

இருக்கிறார்.


13. மோட்சத்தில் என்ன செய்கிறார்?

அவர் மோட்சத்திலுள்ள சம்மனசுக்களுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஒரு நித்திய சந்தோஷ ஆனந்தத்தைக் கொடுக்கிறார்.


14. உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறாரா?

உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அங்கே இருக்கிற ஆத்துமங்களை சுத்திகரிக்கிறார்.


15. அவர் நரகத்திலே இருக்கிறாரோ?

சர்வேசுரன் இல்லாத இடமே இல்லையாகையால் அவர் நரகத்திலும் இருக்கிறார்.


16. சர்வேசுரன் நரகத்தில் சுடப்பட மாட்டாரோ?

நரகத் தீ சர்வேசுரனைச் சுடாது.


17. ஒரு உவமையினால் அதை விளக்கிக் காட்டு.

சூரிய வெளிச்சம் தண்ணீரில் விழுந்தால் அது நனையாது; அசுத்தத்தில் பட்டாலும் அது அசுத்தப்படாது. அது போல் அசரீரியாயும், சகல நன்மையை உடையவராயுமிருக்கிற சர்வேசுரன் தாம் உண்டாக்கின நரகத் தீயால் வேதனைப்பட மாட்டார்.


18. சர்வேசுரன் நரகத்தில் என்ன செய்கிறார்?

அவர் நரகத்திலுள்ள பசாசுகளையும், நரகவாசிகளையும் தண்டிக்கிறார்.


19. அப்படியானால் சர்வேசுரன் இல்லாத ஒரு இடம் உண்டா?

அவர் இல்லாத ஒரு இடமும் இல்லை.


20. சர்வேசுரன் எப்படி எல்லாவிடங்களிலும் இருக்கிறார்?

அறிவினாலும், வல்லமையாலும், சுபாவத்தாலும் எங்குமிருக்கிறார்.


21. சர்வேசுரன் அறிவினாலே எங்கும் இருப்பதெப்படி?

சர்வேசுரன் அளவில்லாத அறிவு ஞானமுடையவராதலால், சகலத்தையும் அறிகிறார்.  சிருஷ்டிகளின் சுயாதீனக் கிரியைகளால் இனி நடக்கப்போகிறவைகளையும் முதலாய்ப் பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறார்.  “சர்வேசுரனுடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. அவர் கண்களுக்கு முன்பாக சகலமும் திறப்பாயும், வெட்டவெளியாயும் இருக்கிறது” (எபி.4:13).


22. சர்வேசுரன் வல்லமையாலே எங்கும் இருப்பதெப்படி?

தாம் சிருஷ்டித்த சகலத்தையும் காப்பாற்றிப் பராமரித்து, ஆண்டு, நடப்பித்து வருவதால், அவர் தமது வல்லமையினாலும் அவைகளிலிருக்கிறார்.


23. சர்வேசுரன் தமது சுபாவத்தால் சிருஷ்டிகளிடம் இருப்பது எப்படி?

கண்டிப்புள்ளதும், கண்டிப்பற்றதுமான சகல வஸ்துக்களில் ஆழ்ந்தவிதமாய் உள்ளிருந்து சகல இடங்களிலும் முழுதும் பிரசன்னமாயிருக்கிறார்.  முன்சொன்னபடி சர்வேசுரனுடைய இலட்சணங்களுக்கும் சுபாவத்துக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை.  அவருடைய இலட்சணமும் சுபாவமும் ஒன்றே.  ஆதலால் அவர் எங்கெங்கே தமது அறிவினாலும், வல்லமையினாலும் இருக்கிறாரோ, அங்கே தமது சுபாவத்தினாலும் வியாபித்திருக்கிறார்.


24. சர்வேசுரன் சகல சிருஷ்டிகளில் பிரசன்னமாயிருந்து, அவைகளோடு கலந்து ஒரே பொருளாய்ப் போகிறதில்லையா?

அவர் சகல சிருஷ்டிகளோடு பிரசன்னமாயிருந்த போதிலும், ஒருபோதும் அவைகளோடு கலந்து போகிறதில்லை.  ஏனெனில், சர்வேசுரன் தமது மெய்யான சுபாவத்தில் உலகத்துக்குப் பிரத்தியேகமாயிருக்கும் தனிப் பொருள்.


25. வாயு ஓர் அறையின் ஒவ்வொரு பாகத்திலுமிருக்கிறது.  ஆகிலும் வாயு முழுதும் அவ்வறையின் ஒவ்வொரு பாகத்திலும் இருப்பதில்லை.  வாயுவின் ஓர் பாகம் மாத்திரம் ஓர் பாகத்திலிருக்கிறதேயயாழிய மற்றப்படி யல்ல. அதுபோலவே சர்வேசுரன் பாகபாகமாய் சிருஷ்டிகளில் இருக்கிறாரா?

இல்லை. அவர் எவ்விடத்திலும், எல்லாவற்றிலும், முழுதும் பிரசன்னமாயிருக்கிறார்.


26. அதெப்படி?

சர்வேசுரன் பாகமில்லாத அரூபியானதால், இவ்வுலகின் ஒவ்வொரு பாகத்திலும் பாகுபடாமல் தமது சுபாவத்தோடு முழுதும் இருக்க வேண்டியது.


27. சர்வேசுரன் இவ்வுலகின் ஒவ்வொரு பாகத்திலும் எப்படி முழுமையாயிருக்கக் கூடுமென்று நமது புத்தியால் சரியாய்க் கண்டுபிடிக்கக் கூடுமா?

நமது புத்தி மட்டுள்ளதாயிருக்கிறபடியால், சரியாய் அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் ஆத்துமத்தின் ஒப்பீட்டைக் கொண்டு அதைச் சற்றேனும் கண்டுபிடிக்கக் கூடும்.


28. அந்த ஒப்பீட்டைச் சொல்லு.

மனுஷனுடைய ஆத்துமம் பிரிக்கமுடியாத அரூபியானதால், உயிருள்ள சரீரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் முழுதும் இருக்கிறது.  இப்படியே விரலிலும் முழு ஆத்துமமுண்டு;  தலை யிலும் அதே ஆத்துமம் முழுதுமிருக்கிறது.  அத்தன்மையாகவே சர்வேசுரன் உலகத்திலும் அதன் ஒவ்வொரு பாகத்திலும் நிறைந் திருக்கிறார்.


29. ஆத்துமம் சரீரத்தில் எவ்விதமாயிருக்கிறதோ, அவ்விதமாய்ச் சர்வேசுரன் எல்லாவற்றிலும் இருக்கிறாரா?

இல்லை.  இவ்விரண்டு பிரசன்னத்துக்கும் பாரதூர வித்தியாசம் உண்டு.  ஆத்துமம் அளவுள்ள அரூபியானதால், சரீரத்துக்கு வெளியே இருப்பதில்லை.  உள்ளபடி ஆத்துமத்துக்குச் சரீரம் எல்லை போல் இருக்கிறது.  சர்வேசுரன் அப்படியல்ல.  அவருக்கு, உலகம் எல்லையல்ல.  அவர் அளவற்றவராதலால், உலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் எப்படி முழுதுமிருக்கிறாரோ, அப்படியே உலகத்துக்கு அப்பாலும் முழுதும் இருக்கிறார்.


30. சர்வேசுரன் எவ்விடத்திலும் முழுதுமிருந்த போதிலும் சில குறிப்பான இடங்களில் தம்மை விசேஷவிதமாய் வெளிப்படுத்துகிறதில்லையா?

ஆம்.  அப்படியே மோட்சத்தில் அர்ச்சியசிஷ்டவர்களுக்குத் தம்மை முகமுகமாய்க் காட்டுகிறார். இவ்வுலகத்திலும் நீதிமான்களுடைய ஆத்துமத்தில் விசேஷித்த விதமாய்க் குடி கொண்டிருந்து, அவர்களை இஷ்டப்பிரசாதத்தால் நிரப்புகிறார்.  கோவில்களிலும் அவர் விசேஷித்த விதமாய் வியாபித்திருந்து, தமது கொடைகளை மனிதர்பேரில் பொழிந்துவருகிறார்.


31. சர்வேசுரன் எங்கும் இருக்கிறபடியால் நாம் தீர்மானிக்க வேண்டியதென்ன?

நாம் தேவனுடைய சர்வ பிரசன்னத்தை மறக்காமல் “சர்வேசுரன் என்னைப் பார்க்கிறார்” என்னும் வாக்கியத்தை அடிக்கடி நினைத்து, அந்தத் தேவ பிரசன்னத்துக்கு ஏற்காத கிரியைகளையும், ஆசைகளையும், நினைவுகளையும் விலக்கி, தக்க மேரையோடும், வணக் கத்தோடும் நடப்போமென்றும், நாம் படும் சோதனைகளிலும், துன்பங்களிலும் அவரைப் பார்த்து அவரது ஒத்தாசையையும் ஆறுத லையும் கேட்போம் என்றும் தீர்மானிக்க வேண்டியது.