அர்ச். மிக்கேல்

அர்ச். மிக்கேலின் பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் சாத்தான் விலகியோட முயற்சித்தான். அவருக்கு ஸ்தோத்திரமாகச் சொல்லப்படும் ஜெபம் அவனை சித்திரவதை செய்தது. பிரமாணிக்கமுள்ள சம்மனசுக்களின் தலைவராக, அர்ச். மிக்கேல் அதிதூதர் லூசிபரை அவனுடைய படைகளுடன் நரக பாதாளத்திற்குள் தள்ளும்படியான வார்த்தைகளைக் கவனிக்க அவன் முற்றிலுமாக மறுத்தான். பூசையின் இறுதியில் பொதுவாக சொல்லப்படுகிற அந்த ஜெபத்திற்கு அவன் எந்த அளவு பயந்தான் என்பது, அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த வி­யம். அந்த ஜெபம் பின்வருமாறு:

“அதிதூதரான அர்ச். மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் துர்க்கருத்தையும், அதன் சற்பனைகளையும் நீக்கி எங்களுக்குத் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டுக்கு இரங்கி சர்வேசுரன் பசாசுக்குக் கற்பிப்பாராக. நீரும், மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகமெங்கும் சுற்றித் திரியும் பேயையும் மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக. ஆமென்.” 

கிறீஸ்தவர்களாகிய நாம் இந்த ஜெபத்தை அர்ச். மிக்கேலுக்குத் தோத்திரமாக, இன்னும் அதிக பக்திப் பற்றுதலோடும், வணக்கத்தோடும் ஜெபித்து வர வேண்டும்.

இந்த வல்லமை மிக்க ஜெபத்தை எழுதும்படி பாப்பரசர் 13-ஆம் சிங்கராயரைத் தூண்டியது ஒரு விநோதமான சூழ்நிலையாகும். ஒருநாள் பூசை நிறைவேற்றிய பிறகு, அவர் கர்தினால்மாருடன் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தார். திடீரென அவர் தரையில் விழுந்தார். ஒரு மருத்துவர் அழைக்கப்பட, பல மருத்துவர்கள் உடனடியாக அங்கு வந்தனர். அவரிடம் நாடித் துடிப்பே இல்லை. ஏற்கெனவே பலவீனமாகவும் மூப்பாகவும் இருந்த உடலிலிருந்து உயிரே பிரிந்து விட்டது போலக் கூடத் தோன்றியது. ஆனால் திடீரென அவர் சுயநினைவுக்குத் திரும்பினார். உடனே, “எத்தகைய பயங்கரக் காட்சியைக் காண நான் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்று வியந்து கூறினார். எதிர்காலத்தில் நடக்க இருப்பவைகளை, எல்லா நாடுகளிலும் திருச்சபைக்கு எதிராக பசாசுக்கள் கொண்டிருந்த தவறாக வழிநடத்தும் வல்லமைகளையும், வெறியாட்டங்களையும் அவர் கண்டார். ஆனாலும் அர்ச். மிக்கேல் இறுதித் தருணத்தில் தோன்றி, சாத்தானையும், அவனது துணைவர்களையும் நரகப் பாதாளத்திற்குள் மீண்டும் தள்ளியதையும் அவர் கண்டார். திரிதெந்தின் இலத்தின் திவ்ய பலி பூசை முடிவில் உலக முழுவதும் சொல்லப்படுகிற இந்த ஜெபத்தை பாப்பரசர் 13-ஆம் சிங்கராயர் எழுதக் காரணமாயிருந்தது இந்தச் சந்தர்ப்பம்தான்.