பங்குக் குருவானவர் தமது திருவஸ்திர சாலையில் ஒரு சிறிய சிமிழில் குழநதை சேசுவின் சிறிய புஷ்பமாகிய அர்ச். தெரேசம்மாளின் சிறு அருளிக்கம் ஒன்றை வைத்திருந்தார். இது சுவாமி தியோபிலஸுக்குத் தெரியாது. பாதுகாப்புக்காக அதை அவர் ஒரு நாள் தமது அங்கியின் பக்கப் பையில் வைத்துக் கொண்டு பேயோட்டும் சடங்கு நடந்து கொண்டிருந்த மடத்திற்குள் நுழைந்தார். அவர் அறையினுள் நுழைந்த அதே கணத்தில், “அதை வெளியே கொண்டு போ, சிறுமலரின் அருளிக்கத்தை இங்கிருந்து அகற்றி விடு” என்று அவன் அலறத்தொடங்கினான்.
“சிறிய புஷ்பத்தின் எந்த அருளிக்கமும் எங்களிடம் இல்லையே” என்று அதிசயித்தார் பேயோட்டுபவர்.
“நிச்சயம் இருக்கிறது. இப்போதுதான் உள்ளே வந்தவரிடம் ஒன்று இருக்கிறது” என்றது பசாசு, பங்குக் குருவைச் சுட்டிக் காட்டியபடி. அதே சமயத்தில் பங்குக் குரு அருளிக்கத்துடன் நெருங்கி வந்தார். உடனே பசாசு எச்சில் உமிழவும், எதிர்த்து நிற்கவும் தொடங்கியது.
வேறு சமயங்களிலும் சிறிய புஷ்பம் பேயோட்டும் சடங்கில் ஒரு முக்கிய பங்கை வகித்தாள். மேலும் சாத்தான் அர்ச். மிக்கேல் அதிதூதருடன் எத்தகைய பயங்கரப் போரில் ஈடுபட்டான் என்பதையும் காண முடிந்தது.