பாடுபட்ட சுரூபமும், திருச்சிலுவை அருளிக்கமும்

ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளது போல, சிலுவை அடையாளம், பாடுபட்ட சுரூபம், அல்லது ஆண்டவருடைய உண்மையான திருச்சிலுவையின் ஓர் அருளிக்கத்திற்கு சாத்தான் அஞ்சி நடுங்கினான். ஒருமுறை, மரத்தால் செய்யப்படாத ஒரு சிலுவை சுவாமி தியோபிலஸின் கைகளில் கொடுக்கப்பட்டது. உடனே சாத்தான் மிகவும் பரிகாசமாகவும், நக்கலாகவும் சிரிக்கத் தொடங்கினான்: “ஹா! ஒரு அட்டைச் சிலுவையோடு ஒரு வழியாக வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அவர் எப்போது காகிதச் சிலுவையில் மரித்தார்? என் அறிவு தவறு செய்யவில்லை என்றால் அவர் ஒரு மரச்சிலுவையுடன்தானே ஆணிகளால் அறையப்பட்டார்!” என்றான் அவன்.

அந்தப் பாடுபட்ட சுரூபம் உடனே நனகு ஆராயப்பட்டபோது, அது மரத்தில் செய்யப்படாமல், உண்மையில், காகிதமும், பசைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் அட்டையால் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு முறை கிறீஸ்து நாதர் சிலுவையில் அறையுண்ட விதத்தை சாத்தான் கேலி செய்தான். “அவருடைய கால்கள் அருகருகே வைத்து அறையப்படாமல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துத்தானே சிலுவையில் அறையப்பட்டன!” என்றான் அவன். கத்தரீன் எம்மெரிக்கும் இதே தகவலைத்தான் தருகிறாள். முதலாவதாக ஒரு நீளம் குறைந்த ஆணியால் அவரது இடது பாதம் முதலில் சிலுவையில் அறையப்பட்டது என்றும், பிறகு அதைவிட நீளமாயும், உறுதியாயும் இருந்த மற்றொரு ஆணி (இதைக் கண்டதும் நம் இரட்சகரின் உடல் தன்னிச்சையாக நடுங்கியதாகக் கூறப்படுகிறது.) முதலில் வலது பாதத்திலும், பிறகு இடது பாதத்தினூடாகவும் அறையப்பட்டது என்றும் அவள் கூறுகிறாள். நம் ஆண்டவர் சிலுவையில் அறையுண்ட போது அருகில் இருந்தவர்களால் அந்த ஆணி எவ்வாறு இரு பாதங்களையும் ஊடுருவிச் சென்றது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.

கத்தரீன் எம்மெரிக்கின் விவரணத்தை பெயல்செபூபின் அறிக்கை உறுதி செய்வதாக இருந்தாலும், நம் இரட்சகரின் பாதங்கள் எவ்வாறு சிலுவையில் அறையப்பட்டன என்ற வி­யம் இப்போது நமக்கு உறுதியாகி விட்டது என்பது இதன் பொருள் அல்ல. பொய்களுக்குத் தகப்பனாகிய சாத்தானை, அதுவும் ஆண்டவர் சிலுவையில் அறையுண்டது போன்ற ஒரு காரியத்தில், நாம் நம்ப முடியாது. அந்தப் புனித நிகழ்ச்சிக்கு பல பசாசுக்கள் தாங்களே கண்கண்ட சாட்சிகளாக இருந்தாலும் கூட, இதே போல், இயர்லிங் பேயோட்டும் நிகழ்ச்சியில் தொடர்புள்ள பேய்களில் யூதாஸும் ஒருவன் என்று நம்பும்படியான சூழல் இருந்தாலும், யூதாஸ் நரகத்தில்தான் இருக்கிறான் என்பது நிச்சயமாக நமக்குத் தெரியாது. யூதாஸைப் பற்றி நம் ஆண்டவர்: “அவன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்” என்று கூறியிருந்தாலும் கூட, நம் பரிசுத்த தாய்த் திருச்சபையானது இந்த வி­யத்தில் ஓர் உறுதியான அறிக்கையை இதுவரை ஒருபோதும் தந்ததில்லை.