பரிசுத்த தீர்த்தம்

பரிசுத்த தீர்த்தமும் சாத்தானுக்கு வெறுப்புக்குரிய ஒன்றாக இருந்தது. பரிசுத்த தீர்த்தத்துடன் அவனை நெருங்கிய போதெல்லாம், “அதைத் தூரமாய்க் கொண்டு போ, அந்த வெறுப்புக்குரிய அசுத்தத்தை தூரக் கொண்டு போ, ஓ, அது எரிகிறது” என்று அவன் அலறினான். ஒரு முறை ஒரு போலியான இலத்தின் ஜெபம் எழுதியிருந்த காகிதத் துண்டு ஒன்று அந்தப் பெண்ணின் தலை மீது வைக்கப்பட்டது. அந்த நல்ல கன்னியர்களும் கூட அந்த ஜெபம் நல்ல ஜெபம்தான் என்று நம்பியிருந்தார்கள். ஆனால் உண்மையில் அது ஓர் அஞ்ஞான இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கி யிருந்தது. அந்தப் பரிசோதனையின் போது சாத்தான் முழு அமைதியோடு இருந்ததைக் கண்டு கன்னியர்கள் மிகவும் வியப்படைந்தனர். ஆயினும் பேய் ஓட்டுபவர் பசாசின் இந்தக் காரணத்தை அறிந்திருந்தார். அதன்பிறகு உடனடியாக, இரண்டாவதாகத் தயாரிக்கப்பட்ட வேறொரு காகிதம் முன்னதாகவே சிலுவை அடையாளத்தாலும், பரிசுத்த தீர்த்தத்தாலும் யாரும் காணாதபடி மந்திரிக்கப்பட்டு, அந்தப் பெண்ணின் தலையில் வைக்கப்பட்டது. ஒரே கணத்தில் அந்தக் காகிதத் துண்டு ஓராயிரம் துண்டுகளாகக் கிழித்து வீசப்பட்டது.