பசாசு அனுபவித்த வேதனையின் மிகப் பலமான காரணம்

பேயோட்டும் சடங்கு தொடர்ந்து நடந்த போது, திவ்ய நற்கருணை ஆசீர்வாதமே பசாசுக்கு மிக அதிக வேதனையைத் தந்தது என்பதை அனைவராலும் காண முடிந்தது. அது எப்போதுமே அவனுக்கு தாங்க முடியாத சித்திரவதையாக இருந்தது. அவன் எப்படி உமிழவும், வாந்தியயடுக்கவும் தொடங்கினான்! திருச்சிலுவை அருளிக்க ஆசீர்வாதத்தின் போது, அவன் தன்னையே முறுக்கிக் கொண்டான்! குருவானவர் திருச்சிலுவையோடும், “இதோ ஆண்டவருடைய சிலுவை, நரக சத்துராதிகளே, ஓடிப் போங்கள், யூதா கோத்திரத்துச் சிங்கமும், தாவீதின் வேருமானவர் ஜெயங் கொண்டார்” என்ற ஜெபத்தை உச்சரித்தபடியும் அவனை நெருங்கியபோதெல்லாம் மிகப் பயங்கரமான முறையில் அவன் துடித்துப் போனான்.

“அதை நிறுத்தும், அதை நிறுத்தும், அதை என்னால் தாங்க முடியவில்லை, அதை என்னால் தாங்க முடியவில்லை” என்று அவன் சொல்வது போல் இருந்தது.

பேயோட்டுபவர் தமது அங்கியின் அடியில் திருச்சிலுவை அருளிக்கத்தை மறைத்தபடி அவனை நெருங்கியபோது, சாத்தான் வெறிபிடித்த பைத்தியக்காரனைப் போல ஆனான். “போய்விடும், போய் விடும், அதை எனனால் தாங்க முடியவில்லை. ஓ! இது பெரும் சித்திரவதை! இது தாங்க முடியாதது” என்று அவன் ஊளையிட்டான்.

“அமல உற்பவ மரியாயே!” என்ற மனவல்லய ஜெபம் மிகக் கொடிய வேதனையை அவனுக்குத் தந்தது. “அமல உற்பவியின் நாமத்தினால், சர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசித்தவர்களின் நாமத்தினால், நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்ற வார்த்தைகள் அவன் மீது பிரயோகிக்கப்பட்ட போது அவன் துவண்டு போனதோடு, கொடிய வேதனையையும் அனுபவித்தான். பிறகு அந்தப் பெண்ணின் உடலை வீங்கச் செய்து விட்டு, யாவரும் அதிர்ந்து நிற்க, மீண்டும் அதைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தான்.