பேயோட்டும் ஜெபம் மீண்டும் ஜெபிக்கப்பட்ட போது, ஜேக்கப் என்னும் பேய் தனது ஆண்மைத்தனமுள்ள குரலை வெளிப்படுத்தியது. யூதாஸின் காரியத்தில் நடந்தது போலவே, இதுவும் ஒரு மனித ஆத்துமமாக முன்பு இருந்ததுதான் என்பது உடனடியாக எல்லோருக்கும் புரிந்து விட்டது.
“நீ எந்த ஜேக்கப்?” என்று கேட்டார் பேயோட்டுபவர்.
“பேய் பிடித்த பெண்ணின் தந்தை.”
இந்த ஜேக்கப் ஒரு மோசமான, அசுத்த வாழ்வு நடத்தி வந்தான். அவ்வாழ்வு சரீர அசுத்த பாவங்களும், இழிசெயல்களும் நிறைந்ததாக இருந்தது என்பதை அவனுடனான பிந்தைய உரையாடல்கள் வெளிப்படுத்தின. இவன் தன்னோடு அசுத்த உறவு வைத்துக் கொள்ளும்படி தன் சொந்த மகளையே தொடர்ந்து தான் வற்புறுத்தி வந்ததை இப்போது ஒப்புக் கொண்டான். ஆனால் அவளோ அவனை மிக உறுதியாக எதிர்த்து நின்றாள். எனவே அவன் அவளைச் சபித்தான். பசாசுக்கள் அவளைப் பீடிக்கவும், தூய கற்புக்கெதிராக சாத்தியமான சகல பாவங்களையும் செய்யுமாறு அவை அவளைச் சோதிக்கவும் வேண்டுமென்று சாபமிட்டான். இவ்வாறு அவளது உடலையும், ஆத்துமத்தையும் கெடுத்து அவளைச் சீரழிக்க விரும்பினான். தான் திடீரென இறக்கவில்லை என்றும், அவஸ்தைப் பூசுதல் பெற்றுக் கொள்ள தான் அனுமதிக்கப் பட்டதாகவும் அவன் ஒத்துக் கொண்டான். ஆனாலும் தனக்கு இந்தத் தேவத் திரவிய அனுமானத்தை வழங்கிய குருவானவரையும், அவரது செயல்களையும் அவன் எள்ளி நகையாடியதால், அதன் பலனை அடைய அவனால் முடியவில்லை. பேயோட்டும் நிகழ்ச்சியில் பிற்பாடு அவன் பின்வரும் விளக்கத்தைத் தந்தான்: தான் தன் வாழ்வில் கட்டிக் கொண்ட எந்தப் பாவத்தையும் தன் சாவுக்கு முன்பாக மன்னித்து விட சர்வேசுரன் தயாராயிருந்தார். அவனும் இரட்சிக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் தன் சொந்தக் குழந்தையையே பசாசுக்களிடம் ஒப்படைத்த குற்றம்தான் இறுதியான அவன் நித்திய ஆக்கினையை அடையக் காரணமாக இருந்தது. நரகத்திலும் கூட, எப்படித் தன் மகளை இன்னும் சித்திரவதை செய்து சீரழிக்கலாம் என்றே அவன் திட்டமிட்டபடி இருந்தான். லூசிபரும் இதற்கு அவனைச் சந்தோமாக அனுமதித்தான். தன் சொந்த மகளுக்குள்ளேயே இப்போது அவன் இருந்ததால், திருச்சபையின் எல்லாச் செபங்களையும் மீறி, அவளை விட்டு விடவோ, அவளிடமிருந்து வெளியேறவோ அவன் சற்றும் எண்ணம் கொள்ளவில்லை.
“ஆயினும் நீ கீழ்ப்படிவாய்! கிறீஸ்துநாதருடையவும், மகா பரிசுத்த தமத்திரித்துவத்தினுடையவும் வல்லமையானது, உனக்குரிய நரகப் படுகுழிககுள் உன்னை மீண்டும் கொண்டு போய்ச் சேர்த்து விடும்!”
உடனே அவனிடமிருந்து பலத்த உறுமலும், எதிர்ப்பும் கிளம்பியது: “வேண்டாம். வேண்டாம். அதிலிருந்து மட்டும் என்னை விடுவியும்!” என்றான் ஜேக்கப்.
பேயோட்டும் ஜெபங்கள் தொடர்ந்தபோது, நரகத்தில் ஜேக்கப்போடு இருந்த அவனுடைய முறையற்ற துணைவியும் தேவ வல்லமைக்கு உட்பட்டு பதில் கூற வேண்டியதாயிற்று. உயர்ந்த ஸ்தாயியில் இருந்த அவளது குரல் ஏற்கனவே மற்ற பல குரல்களோடு கலந்து ஒலித்திருந்ததை அங்கிருந்தவர்கள் கவனித்திருந்தனர். தன் பெயர் மினா என்று இப்போது அவள் ஒப்புக் கொண்டாள்.
ஜேக்கப்பின் மனைவி உயிரோடிருந்தபோதே, அவனுடன் தான் வாழ்ந்த நீண்ட, அசுத்த ஜீவியமே தன் அழிவுக்குக் காரணம் என்று மினா ஒத்துக் கொண்டாள். ஆனாலும் மனந்திரும்ப மறுத்து அவள் செய்த கருச்சிதைவுகள் அவளது நித்திய சாபங்களின் மற்றுமொரு விசே காரணமாக இருந்தது.
பேயோட்டுபவர்: “நீ உயிரோடிருந்த போதே கொலை செய்தாயா? யாரைக் கொலை செய்தாய்?”
மினா கசப்புடன்: “சிறு குழந்தைகளை.” தன் சொந்தக் குழந்தைகளையே அவள் குறிப்பிட்டாள் என்பது வெளிப்படை.
பேயோட்டுபவர்: “உண்மையில் எத்தனை குழந்தைகளை நீ கொன்றாய்?”
மினா, உண்மையைச் சொல்ல சற்றும் மனமேயின்றி, மிகச் சுருக்கமாக, “மூன்று... இல்லை, உண்மையில் நான்கு!” என்றாள்.
மினா வெறுப்புணர்வு மிக்கவளாகத் தன்னைக் காட்டிக் கொண்டாள். இதுவரை நிகழ்ந்த எல்லாவற்றையும் வெகுவாக மிஞ்சி விடும் அளவுக்கு அவளது பதில்களில் கசப்பான வெறுப்புணர்வும், எரிச்சலும் நிரம்பி வழிந்தன. திவ்ய சற்பிரசாதத்தின் முன் அவள் நடந்து கொண்ட விதம் விவரணத்திற்கு அப்பாற்பட்டது. மிக மிக அருவருப்பான முறையில் உமிழ்வாள்; வாந்தியயடுப்பாள். இதனால் சுவாமி தியோபிலஸும், பங்குக் குருவும் தங்கள் அங்கிகளிலிருந்தும், திருவஸ்திரங்களிலிருந்தும் அவளது அசுத்தங்களைத் துடைக்க பல கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தகுதியற்ற விதமாக அவள் திவ்ய நற்கருணை உட்கொண்டு வந்ததால் அவளுடைய நித்திய மீட்பின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய அந்த நித்திய ஜீவியத்தின் அப்பம், அவளது நித்திய ஆக்கினையின் காரணமாக ஆகிப் போனது. திவ்ய சற்பிரசாதத்திடம் பற்றியயரியும் பழியுணர்வோடும், வெறுப்போடும் செல்ல அவள் முயன்றாள். இந்தப் பேய்க் கூட்டத்தில் மினாவும், யூதாஸும்தான் திவ்ய நற்கருணைக்கு எதிராக மிக அதிகத் தேவத்துரோகம் செய்தவர்களாக இருந்தார்கள்.
இந்தக் கேள்வி பதில்கள் ஓர் ஒழுங்கு முறைப்படி நடந்தன என்று இதை வாசிப்பவர் நினைப்பாரெனில், சந்தேகமின்றி அவர் நினைப்பது தவறு. பசாசுக்களுடனான இந்தப் போராட்டங்களும், வாதங்களும் பல நாட்களாகத் தொடர்ந்தன என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பேய்கள் பதில் சொல்வதற்குப் பதிலாக மணிக்கணிக்காக ஊளையிடுவதும், ஓலமிடுவதுமாக இருந்தன. இச்சமயங்களில் நீண்ட ஜெபம் மற்றும் இடையறாத பேயோட்டுதலின் மூலமாகத்தான் அவற்றை வழிக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. அடிக்கடி, பசாசுக்களிடமிருந்து வேறு எந்த முறையிலும் பதில்களை வரவழைக்க முடியவில்லை. எண்ணற்ற வேறு பசாசுக்களும் கூட, ஏற்க முடியாதவையும், ஏறக்குறைய தாங்கவே முடியாதவையுமாகிய தங்கள் தலையீடுகளின் மூலம் பேயோட்டும் சடங்குக்கு இடையூறு செய்தன. இந்தத் தொந்தரவுகளின் காரணமாக, அந்தப் பெண்ணின் இயல்பான முக அம்சங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவளுடைய முகம் வெகுமாக மாற்றமடைந்தது. மேலும், அச்சமயங்களில் அவளது உடலின் வழக்கமான புறத் தோற்றமே மறைந்து போகும் அளவுக்கு, அவளது உடல் முழுவதும் மிகப் பயங்கரமான முறையில் உருமாற்றம் அடைந்தது. நிறம் வெளிறி, உயிரற்றது போல தோற்றம் தந்ததும், வற்றிப் போனதுமான அவளது தலை, அடிக்கடி கவிழ்த்து வைக்கப்பட்ட தண்ணீர்க் குடத்தைப் போல் ஆனது. மேலும் கனன்று கொண்டிருக்கும் தீக்கங்குகள் போன்ற சிவந்த தோற்றத்தையும் அது அடைந்தது. அவளது கண்கள் தங்கள் குழிகளிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவளது உதடுகளோ, கைகளின் அளவை எட்டும் அளவுக்குப் பெரிதாக வீங்கின. ஒல்லியான, வற்றிப் போன அவளது தேகம், எந்தளவுக்கு பிரம்மாண்டமாக வீக்கமடைந்தது என்றால், அந்தப் பெண் துண்டு துண்டாக வெடித்துச் சிதறி விடுவாளோ என்ற அச்சத்துடன் அவ்வேளைகளில் பங்குக் குருவும், கன்னிகாஸ்திரீகளும் பின்வாங்க நேர்ந்தது. சில சமயங்களில் அவளது வயிற்றுப் பகுதியும், கரங்களும், கால்களும், இரும்பும், கல்லும் போல, மிகக் கடினமாக மாறின. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவளது கட்டிலின் இரும்புக் கம்பிகள் வளையும் அளவுக்கு அவளது உடல் அந்த இரும்புக் கட்டிலின் கிராதிகளை அழுத்தின.
திருச்சபை, பேயோட்டுவதற்கென பரிந்துரைத்துளள ஜெப முறையின்படி, பேயோட்டும் சடங்கு சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பிரார்த்தனையோடு தொடங்கியது. அங்கிருந்தவர்கள் அனைவரும் முழந்தாளிட்டு, ஜெபங்களுக்குப் பதில் கூறினார்கள். தொடக்கத்தில் பசாசுக்கள் அமைதியாக இருந்தன. ஆனால் “பரலோகப் பிதாவாகிய சர்வேசுரா,” “உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,” “இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா,” “பரிசுத்த தமத்திரித்துவ மாகிய ஏக சர்வேசுரா” போன்ற விண்ணப்பங்கள் சொல்லப்பட்ட போது, வழக்கமான குழப்ப நிலையும், பற்கடிப்பும் தொடங்கின. “அர்ச். மரியாயே,” “அர்ச். மிக்கேலே” ஆகிய பிரார்த்தனை மன்றாட்டுக்களின் போது, பயங்கர மின்னலால் தாக்கப்பட்டவை போல பசாசுக்கள் அசைவற்றுப் போயின. நவ விலாச சம்மனசுக்களும், பரிசுத்த அப்போஸ்தலர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட போது ஒரு முணுமுணுப்பும், ஓசை குறைவான நீண்ட முனகல்களும் எழுந்தன. “பசாசின் சகல தந்திரங்களில் இருந்தும்” என்னும் வார்த்தைகளின் போது அசுத்த ஆவி, ஒரு கசையால் அடிக்கப்பட்டது போல துள்ளிக் குதித்தது. “அசுத்த அரூபியிடமிருந்து” என்ற வார்த்தைகளின் போது, அடிபட்ட ஒரு விலங்கைப் போல அவன் முனகினான், ஓலமிட்டான்.