தீய பசாசுக்கு எதிராக, திருச்சபைக்கு சேசுநாதர் வழங்கியிருக்கிற வல்லமைகளைக் கொண்டு இயர்லிங்கில் ஒரு முறை வெற்றிகரமாக பேய்கள் ஒரு பெண்ணிடமிருந்து துரத்தப்பட்டது பற்றிய பின்வரும் பயங்கரத்துக்குரிய சம்பவமானது, மேற்கண்ட விளக்கங்களின் ஒளியில் மிகத் தெளிவான, ஆணித்தரமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இங்கு விவரிக்கப்பட இருக்கும் உண்மை நிகழ்வுகள் அமரரான சுவாமி ஜோசப் ஸ்டீகர் என்பவரின் உறுதியான சாட்சியத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன. இவர் இந்த நிகழ்வுகளுக்குத் தாமே ஒரு கண்கண்ட சாட்சியாக இருந்தார். இவர் 1928ல் இயர்லிங் நகரத்தில் உள்ள ஒரு பங்கில் ஒரு தியான போதனைகள் அளித்துக் கொண்டிருந்த போது, சுவாமி தியோஃபிலஸ் ரியேசிங்கர் என்ற கப்புச்சின் துறவி, ஒரு பெண்ணை அவளுடைய உறவினர்களின் துணையோடு அந்தப் பங்கிற்கு அழைத்து வந்தார். அங்கே, நல்ல முறையில் செயல்பட்டு வந்த பிரான்சிஸ்கன் சபைச் சகோதரிகளின் மடம் ஒன்றில் அவளை வைத்து, அவளைப் பிடித்திருந்த பேயை விரட்டும் சடங்கை நடத்த பங்குக்குருவிடம் அனுமதி கேட்டார். அந்தப் பங்குக் குரு ஏற்கனவே சுவாமி தியோபிலஸூக்கு நல்ல நண்பராக இருந்தார்.
“என்ன? இன்னுமொரு பேயோட்டும் நிகழ்ச்சியா? இன்னுமா இத்தகைய சம்பவங்கள் அதிகரித்தபடி இருக்கின்றன? நீங்கள் ஏற்கனவே பலரிடமிருந்து பசாசுக்களைத் துரத்தியிருக்கிறீர்களே!” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பங்குக் குரு.
“அது உண்மைதான். ஆனாலும் இநதப் பெண்ணிடம் இருந்து பேய் ஓட்டும் பொறுப்பையும் மேற்றிராணியார் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தப் பெண் இயர்லிங்கில் இருந்து சிறிது தூரத்தில் வசிக்கிறாள். அவளது வீட்டில் வைத்தே இதைச் செய்வது பலருடைய கவனத்தை ஈர்க்கும் என்பதோடு, அவளுககும் கூட பல தொந்தரவுகளை அது ஏற்படுத்தும். எனவேதான் அவளை இங்கு கொணடுவர நான் முடிவு செய்தேன்” என்றார் சுவாமி தியோபிலஸ்.
“சரி, ஆனால் என் பங்கை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?”
“இதைப் போன்ற ஒதுக்குப்புறமான நாட்டுப்புறப் பகுதியில்தான் இச்சடங்கை அமைதியாக செய்து முடிக்க முடியும். இங்குள்ள இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றில் வைத்து இந்தச் சடங்கைச் செய்யலாம். ஒன்று இங்குள்ள கன்னிகாஸ்திரீகளின் மடம், மற்றொன்று பங்குக் கோயிலின் திரு வஸ்திர சாலை (ளுயஉசளைவல). உலகிலுள்ள வேறு யாருக்கும் தெரியாமல் பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணை அவளது பயங்கரமான சுமையில் இருந்து விடுவிப்பது முற்றிலும் சாத்தியமான காரியமாக இருக்கும்.”
“சுவாமி! இதைப் போன்ற ஒரு காரியம் தன் மடத்திற்குள் நடத்துவதற்கு மடத்துத் தாயார் அனுமதிப்பார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா? எனக்கு நம்பிக்கையில்லை. மேலும் என் சொந்த இல்லத்திற்குள் அந்தப் பெண்ணைக் கொண்டு வருவது என்ற பேச்சுக்கே இடமில்லை.”
“நண்பரே, ஒரு வியம் மட்டும் எனக்குச் சொல்லுங்கள்: மடத்துத் தாயார் இதற்கு அனுமதி தந்தால் நீங்களும் அதற்குச் சம்மதிப்பீர்களா?” என்று புன்னகையோடு கேட்டார் சுவாமி தியோபிலஸ்.
“நல்லது, அப்படியே ஆகட்டும். ஆனால் அவர்கள் சம்மதித்தால் மட்டும்தான். மடத்தில் நீங்கள் விரும்புகிற இந்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கொஞ்சம் கூட இல்லை.”
“உங்கள் அனுமதிக்கு நன்றி. தொடக்கத்திலேயே மடத்துத் தாயார் தனது சம்மதத்தைத் தந்து விட்டார்கள். அதனால் இப்போது பிரச்சினை முடிந்து விட்டது. இந்தச் சடங்கிற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர்களிடம் நான் பேசி, ஏற்கனவே செய்து முடித்து விட்டேன். உங்கள அனுமதியைப் பெறுவது மட்டுமே தேவையாயிருந்தது.”
இவ்வாறு மடத்தில் வைத்துப் பேயோட்டும் சடங்கை நடத்துவது என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த இடம் ஒரு கிராமப் பகுதி. மேலும் அது கோடை காலமாக இருந்ததால் மக்கள் திறந்த வெளிகளிலும், வயல் வெளிகளிலும் தத்தமது வேலைகளில் அமைதியாக ஈடுபட்டிருந்தார்கள். இங்கு என்ன நடக்கிறது என்று யாரும் கவலைப் படப் போவதில்லை.
முன்னெச்சரிக்கையுடன் இந்தப் பேயோட்டும் சடங்கு பற்றிய தனி விவரங்கள் ஆயரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப் பட்டன. ஆயரும் நடக்கப் போவது பற்றி பங்குக் குரு என்ன நினைக்கிறார் என்று அறிய அவரைத் தம்மிடம் வரவழைத்தார்.
“வந்திக்கத் தக்க ஆயரவர்களே! வெளிப்படையாகக் கூறுவதானால், நான் இதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. இத்தகைய வழக்கத்துக்கு மாறான நிகழ்ச்சிகளை உண்மையில் நான் மிகவும் வெறுக்கிறேன். ஆனாலும் என் பங்கு ஒதுக்குப் புறமானது, மடத்திற்குச் செல்லும் வழியும் சுலபமானது என்பதால், இத்தகைய ஒரு சடங்கிற்கு என் பங்கு மிகப் பொருத்தமானது என்று சுவாமி தியோபிலஸ் எனக்கு விளக்கிக் கூறினார். எனவே நான் மறுக்க விரும்பவில்லை.”
“உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சில மிக மோசமான விளைவுகள் இதனால் ஏற்படலாம் என்று உங்கள் மேற்றிராணியார் என்ற முறையில் நான் உங்களை மிக உறுதியாக எச்சரிக்கிறேன். இது பற்றி சுவாமி தியோபிலஸ் அவர்கள் உங்களுக்குப் போதுமான விளக்கங்களைத் தராமல் இருக்கிறார் என்றால், இத்தகைய நிகழ்வுகளில் பொதுவாகக் காணப்படும் அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளையும், அனுபவங்களையும் பற்றிய தகவல்களை உங்களுக்கு நான் தர விரும்புகிறேன். பரிதாபத்திற்குரிய இந்தப் பெண் இந்தப் பயங்கரமான அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் மனதார விரும்பினால், பசாசு உங்களைப் பழிவாங்க நிச்சயமாக விரும்பும்.”
“அந்த அளவுக்கு இது மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆண்டவரே! சர்வேசுரனுடைய பாதுகாவலின் திருக்கரம் என்னைக் கைவிடாது. கடவுள் அனுமதிப்பதை விட அதிக பாதிப்பை எனக்கு ஏற்படுத்த பசாசால் இயலாது. கடவுள் அதை அனுமதிக்கவில்லை என்றால், துரும்பளவு தீமையைக் கூட எனக்குச் செய்ய பசாசினால் முடியாது. எனவே இதுபற்றி எனக்கு எந்த விதக் குழப்பமும், பயமும் இல்லை. என் வாக்கை நான் காப்பாற்றுவேன். நான் ஏற்கனவே என் சம்மதத்தைத் தந்து விட்டேன். அதனால், அதைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை, இதற்காக சில பரித்தியாகங்களை நான் எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றை மகிழ்ச்சியோடு நான் தாங்குவேன். அந்தப் பரித்தியாகங்களால் அழிவில்லாத ஓர் ஆத்துமம் பயனடைந்து, நரகக் கூளியின் கொடிய பிடியிலிருந்து விடுவிக்கப் படுமானால், அதுவே எனக்குப் போதும்.”