அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், 1928-ம் ஆண்டில் நிகழ்ந்த பயங்கரத்துக்குரிய பேயோட்டும் சடங்கு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சர்வேசுரனுடைய திருச் சுதனாகிய சேசு கிறீஸ்து நாதர் இவ்வுலகிற்கு வந்தார். அவர் இவ்வுலகின் அரசனாகிய சாத்தானின் மீது வெற்றி கொண்டு, தம் சொந்த இராச்சியமாகிய திருச்சபையை உலகில் ஸ்தாபித்தார். பிதாவிடமிருந்து தாம் பெற்றுக் கொண்ட அதே அதிகாரங்களை அவர் தமது திருச்சபைக்கு வழங்கினார்.

தேவ ஊழியத்திற்கெனத் தனது குருமாணவர்களை உருவாக்கும் போது, பரிசுத்த தாய்த் திருச்சபையானது, இந்த அதிகாரங்களை அவர்களுக்குத் தந்து, கிறீஸ்து நாதரின் இராச்சியம் பூலோகத்தில் நிறைவேற்ற வேண்டிய தேவ ஊழியத்தை அவர்கள் தொடர்ந்து நிறைவேற்ற வழிவகை செய்கிறது. பரிசுத்த குருத்துவத்தைப் பெறுவதற்கு ஆயத்தமாக, ஒரு குருமாணவர் நான்கு சிறு பட்டங்களையும், மூன்று உயர் பட்டங்களையும் பெற்றுக் கொள்கிறார். இந்தச் சிறு பட்டங்களில் பேயோட்டுபவர் எனப்படும் துணைப் பட்டமும் ஒன்றாகும். மேற்றிராணியார் இந்தப் பட்டத்தை வழங்கும் போது “பேய் பிடித்தவர்களின் மீது உன் கரத்தை விரிக்கும் அதிகாரத்தை நீ பெற்றுக் கொள்கிறாய். உன் கரங்களை விரிப்பதன் மூலமாகவும், இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதத்தாலும் பேயோட்டும் வார்த்தைகளாலும், அவ்வாறு பேய்பிடித்தவர்களின் உடல்களிலிருந்து துஷ்ட அரூபிகளை நீ துரத்துவாய்” என்ற பிரசித்தமான வார்த்தைகளை உச்சரிக்கிறார்.

வேறெந்தப் பட்டங்களிலும் வழங்கப்படாத இந்தப் பேயோட்டும் வல்லமையுள்ள திருச்சடங்கின உன்னதமான, அதிகாரமிக்க உட்பொருளை மேற்றிராணியார் தொடர்ந்து உச்சரிக்கும் பின்வரும் வார்த்தைகளிலிருந்து நாம் ஓரளவு கண்டுபிடிக்கலாம்: “பேய் பிடித்தவர்களின் மீது உன் கைகளை வைக்கும் உரிமையை நீ பெற்றுக் கொள்கிறாய் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, அதை உன் மனதில் பதிய வைத்துக் கொள்வாயாக.”

பிறகு மேற்றிராணியார் இந்தப் பட்டத்தைப் பெறும் குருமாணவரிடம் பேய் பிடித்தவர்களிடமிருந்து துஷ்ட அரூபிகளைத் துரத்துகிற ஒரு வல்லமை மிக்க ஊழியராக அவர் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் போது, அவர், தம்மோடு சேர்ந்து ஜெபிக்கும்படி விசுவாசிகளை அழைக்கிறார். சர்வ வல்லவரான சர்வேசுரனால் திருச்சபையின் மீது பொழியப்படுகிற இந்தக் குணப்படுத்தும் வரத்தின் வழியாக, அந்தக் குருமாணவர் திருச்சபையின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராக ஆகும்படி அவர் தொடர்ந்து ஜெபிக்கிறார்.

பல தடவைகள் பேய்களைத் துரத்தியவரும், தாம் செய்தபடியே பேயோட்டுவதற்குத் தம் சீடர்களுக்கு முழு அதிகாரம் வழங்கியவருமாகிய கிறீஸ்து நாதரின் முன்மாதிரிகையையே திருச்சபையும் தன் செயல்பாட்டுக்கு அடித்தளமாகக் கொள்கிறது. மனித அறிவை மட்டுமே மையமாகக் கொண்டுள்ள நம் காலத்தின் போலி விசுவாசமானது, இவ்வளவு உன்னதமான பேயோட்டுபவர் என்னும் திருப்பட்டத்தை மூட நம்பிக்கை என்று கேலி செய்கிறது. நரகம் இருக்கிறது என்ற நிதர்சனமான உண்மை, பசாசுக்கள் இருப்பது, மற்றும் பேய்கள் துரத்தப்பட்ட நிகழ்ச்சிகள் வெறும் கட்டுக்கதைகளாகக் கருதப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன. கிறீஸ்து நாதரும், அப்போஸ்தலர்களும் கூட திரும்பத் திரும்ப பசாசின் வல்லமைகளைப் பற்றி வலியுறுத்திக் கூறியுள்ள போதிலும், அவை வெறும் மூட நம்பிக்கைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. சாத்தான் மனிதர்களை நரகத்தின் பாதையில் இழுத்துச் செல்ல, தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றி மனிதர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும்படியாக செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனுடைய மிகப் பெரிய, மிகுந்த தீமை பயக்கக் கூடிய சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது. சுபாவத்திற்கு மேற்பட்ட தன்மையுள்ள எதையும் மனிதன் இன்று ஆழ்ந்து கவனிப்பதில்லை.

எனவேதான் நம் காலங்களில் நிகழ்ந்துள்ள சுபாவத்திற்கு மேலான நிஜமான நிகழ்ச்சிகள் மறுக்கப்பட முடியாதவையாக உள்ளன. மிக அலட்சியமாக, தோள்களைக் குலுக்கியபடி அவைகளை மறுத்து விடுவது இயலாத காரியம். லூர்து மாநகரில் நடந்துள்ள மறுக்கப்பட முடியாத ஏராளமான புதுமைகள், அசாதாரணமான காட்சிகள், ஐந்து காய வரம் பெற்றவர்கள், உணவே இன்றி வாழ்ந்தவர்கள், தெரேசா நியூமனின் பல பாஷை வரம், சமீபத்தில் திருச்சபையின் அர்ச்சிஷ்டவராகப் பிரகடனம் செய்யப்பட்ட அர்ச். மரிய வியான்னி அருளப்பரின் வாழ்வு போன்றவை அவைகளில் சிலவாகும். அர்ச். வியான்னி அருளப்பருக்கு ஏறத்தாழ 35 ஆண்டுகளாக நரகக் காட்சி என்பது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நிகழ்ந்த ஒரு அன்றாட அனுபவமாக இருந்தது. பலருக்கு நிகழ்ந்துள்ள பேய்பிடித்தல் நிகழ்ச்சிகளும் கூட இப்படி மறுக்கப்பட முடியாத சுபாவத்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளாகவே இருக்கின்றன. அதுவும் இவை நம் காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: 1891ஆம் ஆண்டில் பவாரியா சுவாபியாவின் வெம்டிங் நகரத்தில் ஒரு சிறுவனுக்குப் பேய்பிடித்திருந்த நிகழ்ச்சி, 1906ல் ஆப்ரிக்காவில் உள்ள அர்ச். மிக்கேல் அதிதூதர் வேதபோதக ஊழியத்தோடு தொடர்புடைய பேயோட்டும் சடங்கு (இதில் இரு சிறுமிகளுக்குப் பேய் பிடித்திருந்தது), 1926, 1929ல் சீனாவின் யஹனான் என்னுமிடத்தில் லாவ்´யயன் என்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட பேயோட்டும் சடங்கு, இலினாய்ஸ் மாகாணத்தின் ராக்ஃபோர்ட் நகரத்தில் 1940ஆம் ஆண்டிலிருந்து நிகழ்ந்துள்ள பல பேயோட்டும் சடங்குகள் ஆகியவை. இவற்றில், சீனப் பெண்ணாகிய லாவ்´யயனிடமிருந்து பசாசு துரத்தப்பட்ட சம்பவம் இப்போது சீனாவில் வேதபோதகராகப் பணியாற்றும் சங். பீட்டர் யஹய்யர், ளு.ஏ.னு. சுவாமியவர்களின் தலைமையில் நடந்தது. இவர் ஹேக் (சூ.னு.) நகரத்தைச் சேர்ந்தவர்.

தமது பேயோட்டுகிற வல்லமையைப் பயன்படுத்த ஒரு குருவுக்கு அடிக்கடி வாய்ப்புகள் கிடைக்கின்றன. பரிசுத்த தீர்த்தத்தால் மந்திரிக்கப்படுவதும், திருச்சபையின் பல வித அருட்கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப் படுகிற மந்திரிப்புகளும், ஆசீர்வாதங்களும் இந்தப் பேயோட்டும் வல்லமையையே சார்ந்துள்ளன. பாப்பரசர் 13ஆம் சிங்கராயர், கெட்டுப்போய் நரகத்தில் தள்ளப்பட்ட அசுத்த சம்மனசுக்களுக்கும், தீய அரூபிகளுக்கும் எதிராக குருக்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு வல்லமையுள்ள, உன்னதமான பேயோட்டும் ஜெபத்தை எழுதினார். நம் காலத்தில் சாத்தான் செய்து வரும் ஒரு மிகப் பெரும் விசுவாச அழிவைத் தீர்க்கதரிசனமாக ஒரு காட்சியில் காண சர்வேசுரன் அவரை அனுமதித்தார். அதன் பின் அவர் அர்ச். மிக்கேல் அதிதூதருக்குத் தோத்திரமாக அந்தப் பேயோட்டும் ஜெபத்தை எழுதினார். அது இப்போது திரிதெந்தின் திவ்ய பலி பூசைக்குப் பின் வரும் ஜெபங்களில் ஒன்றாக இருக்கிறது. அது பிரதேச மொழிகளில் ஜெபிக்கப் படுகிறது.