(மந்திரிக்கப்பட்ட கோயில், சிற்றாலயத்தின் உபயோகத்திற்காக)
குரு: ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
பதிலுரைப்பாடல் : திபா. 66: 1, 2, 4-6.
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1. ஆண்டவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். -பல்லவி
2. அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர் என்று சொல்லுங்கள். - பல்லவி
3. வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி
4. கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். - பல்லவி
குரு: நம் ஆண்டவர் நமக்கு அருளியவாறு வானகத் தந்தையை நோக்கி வேண்டுவோம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற …….
குரு: ஆண்டவர் திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக.
எல்: இன்றும் என்றும் வாழ்த்தப் பெறுவதாக.
குரு: ஆண்டவரே, எம் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: எமது குரல் உம் திருமுன் எழுவதாக.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
இறைவா, திருச்சட்டம் இயற்றிய உம் ஊழியர் தூய மோசே வழியாக எக்காளங்களை வெள்ளியில் உருவாக்கக் கற்பித்தீரே. பலி வேளையில் குருக்கள் அவற்றை ஊதும்போது மக்கள் அவற்றின் இனிய ஒலியால் அறிவிக்கப்பெற்று, உமக்கு ஆராதனை புரியவும், பலி செலுத்தவும் ஒன்று கூடுவர். உமது கோயிலுக்கான இம்மணியை எளிய எம் ஊழியத்தின் வழியாகத் தூய ஆவியின் வல்லமையால் புனிதமாக்கியருளும். இவ்வாறு இதன் ஒலியால் இறைமக்கள் புனித கோவிலுக்கும் வானக மகிமைக்கும் அழைக்கப்படுவார்களாக. இதன் ஒலியை மக்கள் கேட்கும்போது அவர்களுள் விசுவாசப் பற்று வளர்வதாக. இம்மணியின் ஒலி கேட்டுத் தீய சக்திகள் அகல்வனவாக. இவற்றையெல்லாம் சிலுவை வழியாகச் சாவை வென்ற எங்கள் ஆண்டவர் தாமே அருள்புரிவாராக.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)