தேர், சப்பரம் இவற்றைப் புனிதப்படுத்துதல்

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: நம் தந்தையாகிய இறைவனின் அன்பும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், தூய ஆவியின் நட்புறவும் இவ்விழாவைச் சிறப்பிக்கும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்: உம்மோடும் இருப்பதாக.

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல விண்ணகத் தந்தையே, நீர் படைத்த அண்டங்கள், கோள்கள் யாவும் நீர் குறித்துள்ள எல்லைக்குள் வலம் வந்து, உம்மைப் போற்றிப் புகழ்கின்றன. இன்று நாங்கள் உம் திருமகன் (அல்லது) தூய …… வழியாக, எங்கள் புகழ் அஞ்சலியை நன்றி உணர்வோடும், பெரு மகிழ்வோடும் உமக்குச் செலுத்துகின்றோம். நாங்கள் விண்ணகத் திருப்பயணிகள் என்பதை இத்திருப்பவனி எங்களுக்கு நினைவுபடுத்தி, என்றும் உம்மை நோக்கிய வண்ணமாக நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு உதவுவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

அருள்வாக்கு  : திருவெளி.14:1-5

சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும், பேரிடி முழக்கம்போலும், யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் ஒலித்தது. அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக்கொண்டவர்கள்: ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் : திபா. 122:1-4,6,9

பல்லவி: ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். 

1."ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். - பல்லவி

2. ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். - பல்லவி

3. எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! - பல்லவி

4. நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

மன்றாட்டுகள்:

குரு: அன்பார்ந்தவர்களே. நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை (அல்லது தூய ... ரைப்) போற்றிப் பவனியாகச் செல்லக் குழுமியுள்ள நாம் நமது அனைத்துத் தேவைகளுக்காகவும் மன்றாடுவோமாக.

1. உலகளாவிய திருச்சபை விண்ணகத்தை நோக்கிய தனது பயணத்தில் எல்லா இனத்தாரையும் தன்வயப்படுத்தித் தூய்மைப்படுத்தும் பணியைச் சிறந்த முறையில் ஆற்றுமாறு இறைவா (தூய …. வழியாக) உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆண்டவரே, எங்களை வழிநடத்திக் காத்தருளும்.

2. உள்ளம் உடைந்தோர் ஆறுதல் பெறவும், நோயால் நலிந்தோர் நலம் பெறவும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெறவும், அமைதி இழந்தோர் அமைதி பெறவும் இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. இத்திருவிழாவைச் சிறப்பிக்க இங்குக் குழுமியுள்ள நாங்கள் அனைவரும் இறையன்பு, பிறரன்பு, ஆழ்ந்த விசுவாசம், அருள்நிறை வாழ்வு யாவும் நிரம்பப் பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தொழிலகம், அலுவலகம், நிலம், வீடு போன்ற இடங்களில் பணிபுரியும் எங்களுக்கு நிறைவான கைம்மாறு கிடைத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

குரு: என்றும் வாழும் தந்தாய், எங்களது அனைத்துத் தேவைகளையும் உம் திருமுன் சமர்ப்பிக்கும் எங்களை ஆசீர்வதியும். இத்தேர்ப்பவனி வழியாக உம்மைப் புகழும் அனைவருடைய உள்ளங்களிலும் நீர் குடிகொள்வீராக. இதனால் எங்கள் வாழ்வு விண்ணக மணம் கமழும் வாழ்வாக அமைவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

புனிதப்படுத்துதல்:

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக: 

ஆண்டவரே, உமது அன்னையின் (அல்லது தூய …. ரின்) திருவுருவம் தாங்கிய இந்தத் தேரினை ஆசீர்வதியும். இது பவனி வரும் இடமெங்கும் இறையாற்றல் செயல்படுவதாக; உமது உண்மையின் ஒளி வீசுவதாக. தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்; தூபம் காட்டுகிறார்.)