குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
அருள்வாக்கு : எசாயா 40:9-11
சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக் குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் : திபா. 29:3-4, 5a, 7, 8a, 9c, 10-11.
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவராக!
1. ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சி மிகு இறைவன் முழங்குகின்றார். ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி
2. ஆண்டவரின் குரல் கேதுரு மரங்களை முறிக்கின்றது; ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது. ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது. - பல்லவி
3. ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! - பல்லவி
நற்செய்தி: மத். 17:1-5
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஒர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(அனைவரும் அமைதியாக செபிக்கின்றனர்.)
குரு: மன்றாடுவோமாக:
எல்லாம் வல்ல இறைவா, நீர் தங்கி வாழ்வதற்கு உரிய இல்லிடமான இந்த ஆலயத்தின் மணிக் கூண்டை ( …....... ) ✠ ஆசீர்வதியும். உமது குரலின் எதிரொலியான இந்த மணியின் ஓசையைக் கேட்கின்ற யாவரும் உம் திருமகனை நோக்கி வந்து அவருக்குச் செவிசாய்ப்பார்களாக; இதன் மூலம் என்றும் உமக்கு மகிமை அளிப்பார்களாக. இந்த மணி ஓசை (ஒலிபெருக்கியின் ஓசை) எங்களை வழிநடத்தும் உமது அன்புக் குரலாக, மொழியாக அமைவதாக. எங்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் புது வாழ்வையும் தருவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன்...
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)