சிலுவைப் பாதைப் படங்களைப் புனிதப்படுத்துதல்

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே பேறான திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளையும் மரணத்தையும் உயிர்ப்பையும் தியானிக்க நாங்கள் தேர்ந்தெடுத்து இங்கு நிறுவும் இப்படங்களை (சுரூபங்களை) ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்த உம்மை மன்றாடுகிறோம். இப்படங்களின் (சுரூபங்களின்) முன் உம்மைப் பக்தியுடன் வழிபடும் மக்கள் அனைவரும், இவ்வாழ்வில் உம் அருளைத் தொடர்ந்து பெற்று, மறுவாழ்வில் முடிவில்லா மகிமை அடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு அவற்றின்மீது தீர்த்தம் தெளித்துத் தூபம் காட்டுவார். பின்பு மரத்தினாலான சிலுவைகளைப் புனிதப்படுத்தும் சடங்கு தொடர்கிறது.)

குரு: மன்றாடுவோமாக:

தூயவரான தந்தையே, எல்லாம் வல்ல இறைவா, இச் சிலுவைகள் மனித இனத்திற்கு மீட்பளிக்கும் சின்னமாகி, விசுவாசத்தைத் திடப்படுத்தி, நற்செயல் பல புரிய உதவுவனவாக. இவை எங்களுக்கு ஆறுதலும் பாதுகாப்புமாகி, எதிரியின் கொடிய தாக்குதல்களிலிருந்து விடுவிப்பனவாக.

(தொடர்ந்து குரு சிலுவைகள்மீது தீர்த்தம் தெளித்துச் சொல்வது:)

இச்சிலுவைகள் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தூயன ஆவதாக. இதனால் ஆண்டவரை நினைவுகூர்ந்து இச்சிலுவைகளின் முன்பாகச் செபிப்போர் உடலிலும் உள்ளத்திலும் நலம் பெறுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(தொடர்ந்து பவனி இருந்தால் பொருத்தமான பாடலைப் பாடவும்.)

எ.கா : 1. நம்பிக்கை தரும் சிலுவையே நீ

2. உலகில் எழுந்தது அரசனின் விருது

(சிலுவைப்பாதை நிலைகளை நிறுவ வேண்டிய இடம் வந்ததும் அல்லது மேற்படி பாடலுக்குப் பதிலாகக் குரு கூறும் செபமாவது:)

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, சிலுவை வழியாகத்தான் முடிவில்லா மகிமையை அடையலாம் என உம் திருமகனின் தூய பாடுகளால் எங்களுக்குக் கற்றுத் தந்தீர். பக்திப் பற்றுதலுடன் அவரோடு ஒன்றித்துச் செல்லும் நாங்கள், அவருடைய வெற்றியிலும் பங்கு பெறுவோமாக. உம்மோடு என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

சிலுவைப் பாதையிலே

(குரு ஒவ்வொரு நிலையை அடைந்ததும் அந்த இடத்திற்குரிய சிலுவை, படம் (சுரூபம்) ஆகியவற்றை முத்தி செய்து உரிய இடத்தில் அவற்றை வைக்க ஏற்பாடு செய்கிறார். பின்பு அந்நிலைக்குரிய பாடல், தியானம், செபம் இடம் பெறுகின்றன.)

நன்றி கீதம்:

இறைவா உம்மை வாழ்த்துகிறோம் 

ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம் 

நித்திய தந்தாய் உமை என்றும் 

இத்தரை எல்லாம் வணங்கிடுமே.


விண்ணும் விண்ணகத் தூதர்களும் 

விண்ணில் மாண்புறு ஆற்றல்களும் 

சேரபீம் கேருபீம் யாவருமே 

சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்.


தூயவர் தூயவர் தூயவராம்

நாயகன் மூவுலகாள் இறைவன்.

மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால் 

வானமும் வையமும் நிறைந்துள்ளன.


அப்போஸ்தலரின் அருள் அணியும் 

இறைவாக்கினரின் புகழ் அணியும் 

மறைசாட்சியரின் வெண்குழுவும்

நிறைவாய் உம்மைப் போற்றிடுமே.


இத்தரை எங்கும் திருச்சபையும் 

பக்தியாய் உம்மை ஏத்திடுமே. 

பகருதற்கரிய மாண்புடையோய்

தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்.


உம் ஒரே திருமகன் இயேசுவையும் 

எம் இறையெனப் புகழ்ந்தேத்துகின்றோம்.

தேற்றர வெமக்குத் தருபவராம்

தூய உம் ஆட்சியைத் துதிக்கின்றோம்.


வேந்தே. மாண்புயர் கிறிஸ்துவே. நீர் 

தந்தையின் நித்திய மகனாவீர். 

மண்ணுயிர் மீட்க மனம் கொண்டு 

கன்னியின் வயிற்றில் கருவானீர்.


சாவின் கொடுக்கை முறித்தழித்து 

பாவிகள் எமக்கு வான் திறந்தீர். 

இறுதிநாளில் நடுத் தீர்க்க 

வருவீர் எனயாம் ஏற்கின்றோம் 

உம்திரு இரத்தம் மீட்ட எமை 

அன்பாய்க் காத்திட வேண்டுகிறோம்.


முடியா மகிமையில் புனிதருடன்

அடியார் எமையும் சேர்த்திடுவீர்.

உம்மவர் நாங்கள் எமை மீட்பீர் 

உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்.


எம்மை ஆண்டு இறை மக்களாய் 

சிறப்புறச் செய்திடுவீர். 

எந்நாளும் உம்மை வாழ்த்துகின்றோம். 

என்றும் உம் பெயர் போற்றுகின்றோம்.


இறைவா இந்நாள் எம் பாவக் 

கறைகள் போக்கிக் காத்திடுவீர். 

கனிவாய் இரங்கும் ஆண்டவரே

கனிவாய் இரங்கும் எம்மீதே.


உம்மையே நம்பினோம் ஆண்டவரே.

எம்மீதிரக்கம் கொள்வீரே.

உம்துணை நம்பினேன் ஆண்டவரே

என்றும் கலக்கம் அடையேனே.


முடிவு செபங்கள்

குரு: தந்தை, மகன், தூய ஆவியை வாழ்த்துவோம். 

எல்: என்றென்றும் அவரைப் போற்றிப் புகழ்ந்தேத்துவோம்.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உம் இரக்கச் செயல்கள் எண்ணற்றவை. உமது அன்பின் கருவூலம் அளவற்றது. நீர் இரக்கமுடன் நல்கிய கொடைகளுக்காக உமது மகத்துவத் திருமுன் நன்றி கூறுகின்றோம். வேண்டுதல்களைக் கேட்டருள்கின்ற இறைவா, எங்களைக் கைவிடாமல், உயிர்ப்பின் பலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதியை எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.

ஆசியுரை

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்.

எல்: இறைவா, உமக்கு நன்றி.