சிலுவைப்பாதை நிலைகளை நிறுவும் சடங்குமுறை

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் அன்பும் உங்களோடு இருப்பதாக.

எல்: உம்மோடும் இருப்பதாக.

(குரு சிலுவைப்பாதை என்னும் பக்தி முயற்சியின் மாண்பினையும் அதன் பயனையும் சுருக்கமாக மக்களுக்கு எடுத்துரைப்பார். தொடர்ந்து, 'வருக தூய ஆவியே' என்னும் பாடலைத் தொடங்குவார். மக்கள் தொடர்ந்து பாடுவர்.)

வருக தூய ஆவியே

வருக எங்கள் நெஞ்சிலே 

தருக வானின் வரங்களை 

தவழும் தீமை விலகவே

1. அகத்தில் ஒளியை ஏற்றவே 

அன்புக் கனலை மூட்டவே 

அறமும் ஒழுங்கும் ஓங்கவே 

அருளும் அன்பும் மல்கவே.

2. கொடைகள் ஏழின் வள்ளலே 

கொடுத்தருள்வீர் உம்மையே 

பாவ இருளைப் போக்கும் - உம் 

தேவ அருளைத் தாருமே.

(அல்லது)

குரு: தூய ஆவியே எழுந்தருள்வீர், விசுவாசிகளின் உள்ளங்களை உமது ஒளியால் நிரப்புவீர். அவற்றில் அன்புத் தீயை மூட்டியருள்வீர். உம்முடைய ஞானக் கதிர்களை வர விடுவீர்.

எல்: அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உம் மக்களின் உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவுபடுத்தினீரே. அத்தூய ஆவியால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழவும் அருள்புரிவீராக.

பேரிரக்கமுள்ள பரமனே, நாங்கள் நற்செயல்களைத் தொடங்கவும், அவற்றைத் தொடர்ந்தாற்றவும் உமது அருளுதவியைத் தாரும். இவ்வாறு எங்கள் செபங்கள், வேலைகள் அனைத்திற்கும் நீரே தொடக்கமும் முடிவுமாயிருப்பீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.