மகா உந்நத தேவனுடைய திரு நாவிலிருந்து புறப்பட்டு வந்து வீரவேகத்துடனேயும், மதுர இன்பத்தோடேயும் ஒரு இறுதி தொட்டு இன்னோரு இறுதிமட்டும் பிடிப்பாய் சார்ந்து எல்லாவற்றையும் சீர்படுத்துகிற ஞானமே, எங்களுக்கு விமரிசையின் பாதையைக் கற்பிக்க வாரும். முட்செடியில் பற்றிக் கொண்டு எரிந்த அக்கினியில் மோயீசனுக்குத் தரிசனையானவரும், இசரவேலரின் சந்ததிக்குக் கர்த்தரும் எசமானரும் ஆனவரே, அவருக்குச் சீனாப் பர்வதத்தில் முறைமை தந்தவரே, உமது புஜபல வீரத்தால் எங்களை இரட்சிக்க வந்தருளும். சனங்களுடைய விருதுக் கொடியாக இருக்கிற இசயாவின் ஆதிமூலமே, தேவரீர் முன்பாக இராசாக்கள் வாய்ப்புதைத்துக் கொண்டிருக்கவும், சனங்கள் பணிபுரிந்து மன்றாடவும் வேண்டியிருப்பதால் இனியாகிலும் தாமதம் செய்யாமல் எங்களை மீட்க - வாரும். தாவீதன் திறவுகோலே, இசரவேல் இராச்சியத்தின் கிரீடமே, தேவரீர் திறப்பதை ஒருவர் அடைக்கவும், தேவரீர் அடைப்பதை ஒருவர் திறக்கவும் கூடாதே. தேவரீர் வந்து சிறைச்சாலையில் அடைபட்டிருப்பவனை மீட்டு, அந்தகாரங்களிலும் மரணத்தின் நிழலிலும் இருக்கிறவனை விடுவித்தருளும். கீழ்த்திசையோனே, நித்திய பிரகாசத்தின் சோதியே, நீதி ஆதித்தனே, தேவரீர் வந்து இருட்டிலும் சாவின் இரவிலும் அகப்பட்டுக்கொண்டு இருக்கிற வர்களுக்கு ஒளியைத் தந்தருளும். சனங்களுடைய இராசாவே, அவர்களால் ஆசிக்கப்பட்டவரே, இரண்டையும் ஒன்றாக்குகிற மூலைக்கல்லே, தேவரீர் மண்ணால் உண்டு பண்ணின மனிதனை இரட்சிக்க வாரும். ஓ எம்மானுவேலே! எம்மோடிருக்கும் தேவனே, எங்களுக்குக் கற்பனை கொடுக்கும் இராசாதிபதியே, பிரஜைகள் ஆவலோடு காத்திருக்கிறவருமாய் அவர்கள் இரட்சகருமானவரே, எங்கள் ஆண்டவராகிய சர்வேசுரா, எங்களைக் காப்பாற்ற எழுந்தருளிவாரும். இதோ பூமியின் இராசாக்களுக்கெல்லாம் இராசாதிபதியானவர் வருவார். அவருக்கு எதிர்கொண்டுபோய் அவரை சந்திக்க முஸ்திப்பாய் இருக்கிறவர்களே பாக்கியவான்கள். மனுமகன் வரும்போது பூமியின் பேரில் விசுவாசத்தை அவர் காண்பாரென்று நினைக்கிறாயா? கடவுள் தமது சுதனை உலகில் அனுப்பும் காலம் சரியாய் வந்து விட்டது. இரட்சகருடைய ஊற்றுகளில் சந்தோஷத்தோடு நீரை மொள்ளுவீர்கள். ஆண்டவர் தமது பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எழுந்தருளித் தமது பிரஜைகளைக் காப்பாற்ற வருவார். பரமண்டலங்களே மேலே இருந்து பொழியுங்கள். மேகங்கள் நீதிமானைக் கீழே இறக்கட்டும். பூமி வாய் திறந்து இரட்சகரை எழுந்தருளச் செய்யட்டும். ஆண்டவரே, வனாந்தரத்தின் கற்பாறையிலிருந்து உலக சக்கரவர்த்தியாகிய செம்மறிப்புருவையைச் சீயோன் பர்வதத்திற்கு அனுப்பும். கர்த்தரே, நாங்கள் பூமியில் உமது வழியையும், எல்லாச் சனங்களிடத்திலும் உமது இரட்சணியத்தையும் கண்டுகொள்வோம். ஆண்டவரே, உமது தீர்க்கதரிசிகள் சொன்னதெல்லாம் சரியாகும்படிக்கு உம்மை அண்டி இருக்கிற எங்களுக்குச் சம்பாவனையைத் தந்தருளும். சட்டம் மோயீசனால் கொடுக்கப்பட்டது. அருளும் உண்மையும் சேசுகிறீஸ்துவால் அருளப்பட்டது. கன்னிமரியம் மாளிடத் திலிருந்து இரட்சகர் பிறப்பதாய்த் தீர்க்கதரிசிகள் அறிவித்தார்கள். ஆண்டவருடைய இஸ்பீரித்து என்னிடமுண்டாகி எளியவர் கட்குச் சுவிசேஷம் சொல்ல என்னை அனுப்பினது. அவரது நீதியின் சோதிப்பிரகாசம் எழுந்தருளுகிற வரையில் சீயோனைப் பற்றி நான் பேசுவேன். பிரபுக்களோடு ஆசனங் கொள்ளவும், மகிமைப் பிரதாபத்தின் பத்திராசனத்தில் எழுந்தருளவும் இதோ ஆண்டவர் வருவார். இதோ தேவனாகிய இரட்சகர் வருகிறாரென்று சனங்களுக்கு அறிவித்துச் சொல்லுங்கள். சர்வ வல்லவராகிய ஆண்டவர் தமது பிரஜையை இரட்சிக்கச் சீயோனிலிருந்து வருவார். ஆண்டவரே, சற்றே கடைக்கண்பாரும். உமது தாசர்களிடம் வரத்தாமதியாதேயும். அரசாளப் போகிற ஆண்டவர் சீயோனிலிருந்து வருவார். இதோ எனது தேவன், அவரை நான் தொழுதுகொள்வேன். அவர் என் பிதாவினுடன் கடவுளாகையால் நான் அவரை ஏத்தி ஸ்துதிப்பேன். எங்கள் ஆண்டவர் எங்களுக்கு முறைமை கொடுப்பவர். எங்கள் ஆண்டவர் எங்களுக்கு இராசாதிபதி. அவரே வந்து எங்களை இரட்சிப்பார். தைரியமாயிருங்கள். உங்கள் மேல் ஆண்டவர் ஆதரவைக் காண்பீர்கள். ஆண்டவரே, என் ஆத்துமம் உம்மையே நோக்குகின்றது. தேவரீர் வந்து என்னை மீட்டருளும் ஆண்டவரே, நான் தேவரீர் இடத்தில் அடைக்கலம் புகுவேன் வாரும் ஆண்டவரே, தாமதம் செய்யாதேயும். உமது இசரயேல் பிரஜைகளுடைய தோஷ துரோகங்களைப் பொறுத்தருளும். லீபானிலிருந்து சுவாமி வருவார். அவருடைய மகிமை பிரகாசம் போலிருக்கும். நானோவென்றால் ஆண்டவரை நோக்கிக் காத்துக்கொண்டிருப்பேன். என் இரட்சகருக்காக எதிர்பார்த் திருப்பேன். ஆமென்.