✠ காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்

"அன்செல்மோ டி’அவோஸ்டா” (Anselmo d’Aosta) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் காண்டர்பரி நகரின் ஆன்செல்ம் (Anselm of Canterbury), ஆசீர்வாதப்பர் சபை துறவியும் (Benedictine monk), மடாதிபதியும், மெய்யியலாளரும், கத்தோலிக்க திருச்சபையின் இறையியலாளரும், காண்டர்பரி நகரின் பேராயராக கி.பி. 1093ம் ஆண்டு முதல் 1109ம் ஆண்டுவரை சேவை புரிந்தவரும் ஆவார். 'கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை' (Ontological argument for the existence of God) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவார். இவரது மரணத்தின் பின்னர் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவரது நினைவுத் திருநாள், ஏப்ரல் மாதம் 21ம் நாளாகும்.

புனிதர் ஆன்செல்ம் அவர்களின் தாய் இறந்தபிறகு, இவருக்கும், இவரின் தந்தைக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் ஆன்செல்ம் ஃபிரான்ஸிலுள்ள தன் தாயின் உறவினர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.

பின்னர் இத்தாலி நாட்டில் தன் படிப்பை தொடர்ந்தார். தன் தொடக்க கல்வியை முடித்தபிறகு, இறையியலையும், மெய்யியலையும் கற்ற இவர், அதில் வல்லுனராக திகழ்ந்தார். படிப்பை முடித்தபிறகு தனது 27 வயதில் "பெக்" (Bec) எனுமிடத்திலுள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் துறவியாக (Benedictine abbey) இணைந்த இவர், அம்மடத்தின் தலைவராக 1079ல் தேர்வானார்.

இங்கிலாந்து நாட்டில் அக்காலத்தில் இருந்த சடங்குகளோடு பதவியில் அமர்த்தும் சர்ச்சைகளினிடையே, திருச்சபையின் நலன்களை பாதுகாத்தார். ஆங்கிலேய அரசர்கள் இரண்டாம் வில்லியம் (William II) மற்றும் முதலாம் ஹென்றி (Henry I) ஆகியோரை இவர் எதிர்த்ததன் காரணத்தால், கி.பி. 1097ம் ஆண்டு முதல் 1100ம் ஆண்டுவரை முதல் தடவையும், பின்னர் கி.பி. 1105 to 1107ம் ஆண்டுவரை இரண்டு தடவையுமாக, இவர் இரண்டு முறை நாடு கடத்தப்பட்டார்.

ஆன்செல்ம் நாடுகடத்தலில் இருந்த காலத்தில், இத்தாலியின் “பாரி” (Bari) எனுமிடத்தில், திருத்தந்தை இரண்டாம் அர்பன் (Pope Urban II) அவர்களால் 1098ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதலாம் சிலுவைப்போர் காலத்தில் (First Crusade) நடத்தப்பட்ட “பாரி சங்கத்தில்” (Council of Bari) ரோம உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கிரேக்க ஆயர்களுக்கு உதவி செய்தார்.

ஆன்செல்ம், ஆசீர்வாதப்பர் சபையின் தலைவரானதால், இச்சபையில் இருந்த அனைத்து குழுமங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இதனால் துறவற இல்லங்களை பார்வையிட இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அச்சமயத்தில் இவருக்கும், காண்டர்பரி ஆயருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு கி.பி. 1089ம் ஆண்டு காண்டர்பரி பேராயர் இறந்துவிட்டார்.

இதனால் காண்டர்பெரி மறைமாநிலத்திற்கு ஆன்செல்ம் வலுக்கட்டாயமாக பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கடவுளின் சிறப்பான அருள் வரங்களை பெற்றிருந்தார். இதனால் மக்களின் மனங்களில் மிக விரைவில் இடம் பிடித்தார். தனது எளிமையான வாழ்வினாலும், தாழ்ச்சியினாலும், கல் போன்ற மனம் கொண்டவர்களையும் கவர்ந்து, இறைவன்பால் ஈர்த்தார்.

உத்தம நன்நெறியிலும், தளரா ஊக்கத்துடனும் பேராயர் முன்னேறிச் சென்றார். தொடர்ந்து திருச்சபையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அப்போது பல இறையியல் நூல்களை திறம்பட எழுதினார்.

கி.பி. 1109ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் நாளன்று, இவர் இறந்தபிறகு இவரின் உடல் காண்டர்பெரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இங்கிலாந்து அரசர்களிடம் திருச்சபைக்காக போராடியவர்களுள் இவரும் ஒருவர் ஆவார். இன்று வரை பேராயரின் பெயர் இங்கிலாந்து நாட்டின் தேவாலயங்களில் கூறப்பட்டு வருகின்றது.