கிறீஸ்துவின் இராச்சியம் அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை வெளியீடு பாகம்-6

"அந்த இராஜாங்கங்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஓர் இராச்சியத்தை எழும்பப் பண்ணுவார்” (தானி. 2.44)

கிறீஸ்து இராஜாவினால் ஸ்தாபிக்கப்பட்ட இராச்சியமாகிய திருச்சபை அப்போஸ்தலர் காலத்தில் வளர்ந்த விதமும் மீன் பிடிப்பவர்களாயிருந்து மனிதரைப் பிடிப்பவர்களாக அழைக்கப்பட்ட சீஷர்கள் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டு, யாவரும் ஆச்சரியப்படும்படியாய் பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கியதும், அர்ச்.இராயப்பர் செய்த முதல் பிரசங்கத்தின் பலனாக ஏறக்குறைய மூவாயிரம் பேர் ஒரே தினத்தில் திருச் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டதும், சேசுநாதருடைய திருநாமத்தினால் அர்ச்.இராயப்பரும் மற்ற அப்போஸ்தலர்களும் அநேக புதுமைகளையும், அற்புதங்களையும் செய்ததால், ஆண்டவர் பேரில் விசுவாசம் கொள்கிற ஸ்திரீ பூமான்களுடைய கூட்டம் அதிகரித்துப் பெருகிக்கொண்டு வந்ததுமான விசேஷங்களை அப்போஸ்தலர் நடபடியை வாசித்து அறிந்து கொள்கிறோம்.

கிறிஸ்து இராஜாவின் இராச்சியமான திருச்சபை இவ்வாறு பரவி வருவதைக் கண்ட குருக்களும், சதுசேயரும் கோப வைராக்கியத்துடன் எழும்பி சேசுவின் திருநாமத்தினால் அப்போஸ்தலர் போதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினார்கள். அடித்தார்கள் அவர்களோவென்றால் சேசுநாதருடைய திருநாமத்தைப்பற்றித் தாங்கள் அவமானப்படப் பாத்திரவான்களாக எண்ணப்பட்ட தினிமித்தம் சந்தோஷித்து (அப். நட. 5:41) கலப்பையின் மேல் கை வைத்துக்கொண்டு பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கிற எவனும் சர்வேசுரனுடைய இராச்சியத்துக்குத் தகுந்தவனல்லவென்று நமதாண்டவர் திருவுளம்பற்றியதையும் (லூக். 9:62) நினைவுகூர்ந்து, சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பிரசங்கிக்கிற ஊழியத்தில் விடாமுயற்சியாயிருந்தார்கள். இதற்காகத் தங்கள் உயிரையும் பலியாக ஒப்புக் கொடுத்தார்கள்.

மேலும் இந்த உன்னத ஊழியத்துக்குத் தகுந்தவர்களையும் தெரிந்தெடுத்து, ஜெபம் செய்து அவர்கள்மேல் கைகளை நீட்டி வைத்தார்கள். சீஷர்களுடைய தொகையும் வெகுவாய்ப் பெருகினது (அப். நட. 6:7). அவர்களும் இஸ்பிரீத்து சாந்துவினால் இஷ்டப்பிரசாதமும், திடனும் நிறைந்தவர்களாய் ஜனங்களுக்குள்ளே அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்துகொண்டு மோட்ச இராச்சியம் பரவும்படி உழைத் தார்கள். பட்டணங்கள் தோறும் குருக்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு “அவைகளின் சத்தம் பூமியெங்கும் சென்றது, பூலோகக் கடைசி எல்லைவரைக்கும் அவைகளின் வார்த்தைகள் எட்டின” என்று தாவீது இராஜா தமது 18ம் சங்கீதத்தில் பாடியிருந்ததும் நிறைவேறத் தொடங்கிற்று.

கிறீஸ்து இராஜாவின் இராச்சியம் இவ்விதமாகப் பெருகி வளருவதைக் கண்ட அர்ச்.சின்னப்பர், தங்கள் வல்லமையாலும், புத்திசாமர்த்தியத்தாலும் ஜனங்கள் நடுவில் தங்களுக்குள்ள செல்வாக்காலும் இந்த விருத்தி உண்டானதென்று சில வேளை அப்போஸ்தலர் தப்பிதமாய் எண்ணிப் பெருமை பாராட்டக் கூடுமென்று அஞ்சி, “ஞானிகளை நாணச் செய்ய சர்வேசுரன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமானவைகளை நாணச் செய்ய பலவீனமான வைகளைத் தெரிந்து கொண்டார்” என்று (1 கொரி. 1:26-28) நினைப்பூட்டினார்.

திருச்சபை என்னும் கிறீஸ்து இராஜாவின் இராச்சியம் உலகத்தில் இருந்தாலும், உலகத்துக்கடுத்த முறையாய், மனிதனுடைய சுபாவ வல்லமையாலும், புத்திக் கூர்மையாலும் ஆளப்படாமல், சர்வேசுரனுடைய விசேஷ வரத்தாலும் அருளாலுமே அது ஆளப்படுகிறதென்று யாவரும் உணரும்படி உறுதிப்படுத்திக் கூறினார்.