✠ புனிதர் ஒன்பதாம் லியோ

திருத்தந்தை ஒன்பதாம் லியோ, ஜெர்மன் பிரபு குடும்பத்தில் பிறந்தவர். இவர் பெற்றோர் இவருக்கு 'புரூனோ' (Bruno of Egisheim-Dagsburg) என்று பெயர் சூட்டினர். புரூனோ, ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள “டெளள்” (Toul) என்ற ஊரில் கல்வி பயின்றார்.

இவர் படிக்கும்போதிலிருந்தே இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். புரூனோ சிறு வயதிலிருந்தே பூசை உதவி செய்வதிலும், பாடல் குழுவோடு இணைந்து திருப்பலியில் பாடல் பாடுவதிலும், ஆடம்பர திருப்பலியில் பங்கெடுப்பதிலும், அதிக ஆர்வம் காட்டிவந்தார். இறைவன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தினமும் திருப்பலியில் பங்கெடுத்த புரூனோ, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டு குருவானார்.

புரூனோ குருவான பிறகு, ஜெர்மனியிலிருந்த அரசர் இரண்டாம் கோன்ராட் (Konrad II) அவர்களின் குடும்பத்திற்கு ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் திருச்சபையில் இருந்த அரசியலைப் பற்றியும் படித்தார். அதன்பிறகு ஃபிரான்சு நாட்டிற்கு இறையியல் படிப்பதற்காக அனுப்பப்பட்டார்.

அப்போது இவர் அப்போஸ்தலர் சீமோனின் வாழ்க்கை வரலாற்றை படித்து, அவரால் ஈர்க்கப்பட்டார். பின்னர் இறையியல் படிப்பை முடித்தபிறகு இத்தாலி நாட்டில் இருந்த அரசர் குடும்பத்திற்கு மீண்டும் ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் இத்தாலி நாட்டின் ஆயரின் உதவியாளராக பணியாற்றினார். அப்போது இத்தாலி மறைமாநிலத்திலிருந்த ஏழை எளியவர்க்கு ஆயரின் உதவியுடன் பலவிதமான உதவிகளை செய்தார்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அப்போது திருச்சபையில் இருந்த கத்தோலிக்க ஆலயங்களின் வழியாகவும், துறவற இல்லங்களின் வழியாகவும், நாள்தோறும் ஏழைகளுக்கு உணவு கொடுத்தும், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் வந்தார். இவரின் தாராள குணத்தை அறிந்த ஜெர்மனி மற்றும் பிரான்சிலுள்ள ஆயர்களும் புரூனோவுக்கு ஏழைகளை பராமரிக்க தேவையான உதவிகளை செய்தனர். பின்னர் இவர் ஃபிரான்சிலுள்ள லையன் (Lyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புரூனோ ஆயராக இருந்தபோது திருத்தந்தை “டமாசஸ்” (Damasus) திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23 நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்தவர், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டு இறந்துப்போனார். அதனால் அவரைப் பின்பற்றி திருச்சபையை வழிநடத்த புரூனோ அவர்களை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர்.

1049ம் ஆண்டு புரூனோ "ஒன்பதாம் லியோ" என்று பெயர் மாற்றம் பெற்று திருத்தந்தையானார். திருத்தந்தை ஒன்பதாம் லியோ திருச்சபையின் மோசமான நிலையைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் திருத்தந்தையான சிறிது நாட்களிலேயே ஆயர்களின் மாநாட்டை கூட்டினார். இம்மாநாட்டிற்கு பொதுமக்களையும் வரவழைத்தார். இதில் பங்குபெற்ற ஒவ்வொருவருமே திருச்சபையில் இருக்கும் குறை, நிறைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள வலியுறுத்தப்பட்டது. அம்மாநாட்டின் இறுதியில் தனிப்பட்ட முறையில் ஐரோப்பாவிலிருந்த ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களையும், அரசர்களையும், மக்களையும் திருத்தந்தை சந்தித்து உரையாடினார். ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, அருமையான மறையுரை வழங்கினார். புதிய ஆலயங்களும், துறவற மடங்களும் கட்ட அடிக்கல் நாட்டினார்.

ஐரோப்பிய நாடுகளைப் பார்வையிட்டபோது, அரசர்களால் மக்கள் படும் வேதனையை, திருத்தந்தை கண்கூடாக பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் மக்களின் பசியையும், அவர்களின் அவல நிலையையும் போக்க தன் சொந்த வீட்டு பணத்தை எடுத்து உதவிசெய்தார். மக்களை வழிநடத்த நல்ல குருக்களை உருவாக்கினார். இதனால் ஐரோப்பிய அரசர்கள் மிகவும் ஆத்திரமடைந்து திருத்தந்தை ஒன்பதாம் லியோவை பிடித்து சிறையில் அடைத்தார்கள். ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் கழித்து சிறையிலிருந்து விடுவித்தனர். ஆனால் இவர் மேல் தொடர்ந்து பல பொய்க்குற்றங்கள் சாட்டப்பட்டன.

பின்னர் 1054ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாள், ரோம் சென்று திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார். 52 வயதான திருத்தந்தை ஒன்பதாம் லியோ வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே திருத்தந்தையாக பதவி வகித்தார். ஆனால் இவ்வைந்து ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபைக்கு இவர் ஆற்றிய பணி எண்ணிலடங்காது.

பின்னர் 1054ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 19ம் நாள், ரோமில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் இறந்தார்.

இவரது உடல், பேதுரு பேராலயத்திலுள்ள, திருத்தந்தையர்களை அடக்கம் செய்துள்ள கல்லறையில், புனித யோசேப்பு பலிபீடத்தின் வலதுபுறத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் இறந்தாலும் மக்களின் மனங்களில் புனிதராகவே வணங்கப்பட்டு வருகின்றார்.