✠ மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்

புனிதர் ஆக்னெஸ், டொமினிக்கன் துறவற சபையைச் சார்ந்த அருட்சகோதரியும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

ஆக்னெஸ், இத்தாலி நாட்டின் “மான்டெபல்சியானோ” (Montepulciano) அருகில் உள்ள "க்ராசியானோ"வைச் (Gracciano) சார்ந்த உயர் குடும்பத்தில் 1268ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இவர் சிறந்த கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருக்கு ஒன்பது வயது நடந்தபோதே நகரிலுள்ள “கோணிப்பையின் சகோதரிகள்” (Sisters of the Sack) என்று அறியப்படும் “பெண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்தில்” (Franciscan monastery of women) இணைய தமது பெற்றோரின் அனுமதி பெற்றார். ஒன்பது வயதில் துறவற மடத்தில் இணைய அக்காலத்தில் அனுமதி இல்லையாகையால், இவருக்கு திருத்தந்தையின் விசேட அனுமதி கிடைத்தது. இம்மடத்தின் கன்னியர், மிகவும் கரடுமுரடான சீருடைகளை அணிந்தனர். எளிய, தனிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.

அதன் பிறகு 1281ம் ஆண்டு, இவர் "ப்ரொசெனோ" (Proceno) நகரில் புதிதாக தொடங்கப்பட்ட துறவற மடத்திற்குச் சென்றார். 1288ம் ஆண்டு, தனது இருபதாம் வயதில் இவர் அந்த துறவற மடத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செப வாழ்வில் சிறந்து விளங்கினார். இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்; அவரது வார்த்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

"என் மேல் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் என்னைப் போன்று அதிசயங்களைச் செய்வர்" என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆக்னெசின் வாழ்க்கையில் சிறப்பான விதத்தில் உண்மையாகின. இவர் தனது வாழ்நாட்களிலேயே பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார்.

ஆக்னெஸ், இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்கள் பலரின் மன நோய்களையும், உடல் நோய்களையும் குணப்படுத்தினார். இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பெருகச் செய்தது போலவே, இவரும் அப்பங்களைப் பலமுறைப் பெருகச் செய்திருக்கிறார்.

1306ம் ஆண்டு, மான்டெபல்சியானோ (Montepulciano) நகரிலுள்ள துறவற மடத்தின் தலைமைப் பொறுப்பேற்க ஆக்னெஸுக்கு அழைப்பு வந்தது. திரும்பி வந்த ஆக்னெஸ், முன்னெப்போதும் விட, தீவிர செப வாழ்வில் ஈடுபட்டார். இக்கால கட்டத்தில், எண்ணற்ற திருக்காட்சிகள் காணும் பாக்கியம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர், “சாண்டா மரியா நொவெல்லா” (Santa Maria Novella) எனும் பெயரில், தேவ அன்னைக்கு ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்பினார்.

இவருக்கு, டொமினிக்கன் சபை நிறுவனரான புனிதர் டோமினிக்கின் (St. Dominic Guzman) திருக்காட்சி கிட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஈர்க்கப்பட்ட இவர், டொமினிக்கன் சபையினர் பின்பற்றும் “அகுஸ்தீனிய சட்டதிட்டங்களை” (Rule of St. Augustine) பின்பற்றுமாறு தமது மடத்தின் அருட்சகோதரியரையும் ஊக்கப்படுத்தினார். உள்ளூரிலுள்ள குடும்பங்களிடைய நடக்கும் சண்டை சச்சரவுகளை அமைதிப் படுத்தும் பணிக்கும் இவர் அடிக்கடி அழைக்கப்பட்டார்.

1316ம் ஆண்டு, ஆக்னஸின் உடல்நலம் மிகவும் குறைந்துவிட்டது. அண்டை நகரமான சியான்சியானோ டர்மில் உள்ள வெப்ப நீரூற்றுகளில் குணப்படுத்தி வைப்பதாக இவரது மருத்துவர் பரிந்துரைத்தார். இவரது சமூகத்தின் அருட்சகோதரியர், மருத்துவரின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தினர். மற்ற பலவகை நோயாளிகள் தங்கள் நோய்கள் குணப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஆக்னஸ் நீரூற்றுகளிலிருந்து எந்த ஆதாயத்தையும் பெறவில்லை. அவருடைய உடல்நிலை அத்தகைய அளவிற்கு தோல்வியுற்றது. அவர், தமது மடாலயத்திற்கு ஒரு நகரும் கட்டிலில் (stretcher) மீண்டும் செல்ல வேண்டியிருந்தது. இந்த மடத்திலேயே தாம் இறக்கும்வரை வாழ்ந்தார். 1317ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 20ம் நாளன்று, தமது நாற்பத்தொன்பது வயதில், இவர் மரித்தபோது, இவரது கைகளில் இருந்தும் கால்களில் இருந்தும் இனிமையான நறுமணம் வீசும் திரவம் ஒன்று கசிந்தது.

1726ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் (Pope Benedict XIII) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். மான்டெபல்சியானோ நகர புனிதர் ஆக்னெசின் அழியாத உடல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.