'புனித மார்கரீத் மரிய அலக்கோக்' என்ற கன்னிகை (1647 - 1690) பிரான்ஸ் நாட்டின் 'பாரலே மோனியல்' என்ற இடத்தில் இருந்த மினவுதல் சபை (Visitation Convent)யில் தன்னை அர்ப்பணம் செய்த நாளிலிருந்து, திரு இருதய நாதர் காட்சி தருதலைக் காணத் தொடங்கினார்கள். நற்கருணை மட்டில் மிகுந்த பக்தி வைத்திருந்த இக்கன்னிகை நற்கருணை முன் செபிக்கின்றபோது மொத்தம் 70 காட்சிகள் பெற்றார்கள்.
1672- க்கும் 1690 - க்கும் இடையே இக்காட்சிகள் நடந்தன. 1673 டிசம்பர் 27 - ஆம் தேதி மார்கரீத் மரியா நற்கருணை முன் ஆழ்ந்த செபத்தில் இருக்கும்போது திரு இருதய நாதர் காட்சி கொடுத்து, இறுதி உணவின்போது புனித அருளப்பர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தது போல் மார்கரீத் மரியாவையும் தம் இருதயத்தோடு அணைத்துக் கொண்டார்.' "மனிதர் மேலுள்ள அன்பினால் அவரது இருதயம் பற்றி எரிகிறது" என்று சொன்னார்.
நான்காவது முக்கிய காட்சியின் போது (175) வேறு பல படிப்பினைகளைக் கொடுத்தார். "இதோ மனிதரை எல்லையற்ற விதமாய் அன்பு செய்யும் இருதயம்; தனக்கென ஒன்றும் வைத்துக் கொள்ளாது தம்மையே வெறுமையாக்கிக் கொண்ட இருதயம்; மனிதரிடமிருந்து நன்றிகேடு. புறக்கணிப்பு, நிந்தை, அவமரியாதை இவைத்தான் எனக்குக் கிடைக்கின்றன" என்றார்.
அவர்களது காட்சிகளின் உட்கருத்துக்கள் பல. அவை; "இயேசுவின் திரு இருதயப் பக்தியைக் கொண்டாடுவது, அவரது திருச் சரீரத்தில் அமைந்த இயற்கை இருதயத்திற்கு வணக்கமும் ஆராதனையும் செலுத்துவது, மறக்கப்பட்ட அவரது அன்புக்குப் பரிகாரம் புரிவது, திரு இருதயத்துக்கென தனியாக ஒரு திருவிழா ஏற்படுத்துவது. இந்தப் பக்தியைத் திருச்சபையில் பரப்புவது. இவையாவும் இயேசுவின் விருப்பமாக வெளிப்படுத்தப்பட்டவை.
இந்தக் காட்சிகளை மார்கீரீத்தின் சக கன்னியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 'எப்படி இவைகளைப் பரப்புவது ? என்று கவலையோடு இருந்த மார்கரீத்துக்கு ஆன்ம குருவாக வருகிறார், 'க்ளாட் தெலா கொளப்பியர்' அவர் இறைவனால் அனுப்பப்பட்டு அவர்களது காட்சிகளுக்கு சாட்சியம் கூற வந்தவர்.
புனித மார்கரீத்துக்குத் துணை நின்ற இந்த நல்ல சேசு சபைக் குருவானவர், இரண்டு ஆண்டுகள் இப்புனிதையின் ஆன்மீகக் குருவாகப் பணியாற்றி, மார்கரீத், இவருக்குக் கூறிய அனைத்தையும் தன்னுடைய மறைப் பொழிவு குறிப்புகளில் எழுதி வைத்துள்ளதை வைத்துத்தான், அவரது மறைவுக்குப் பின் சேசு சபைக் குருக்கள் இந்த வெளிப்பாடுகளை வெளியிட்டனர். புனிதைக்கு உறுதுணையாக முதலில் நின்றவர், சங்.கொளம்பியார் சுவாமிதான், இவரும் புனிதையும் சேர்ந்து எழுதிய இருதயப் பக்தி குறித்த செபப் புத்தகங்கள் வெளியாயின.
புனித ஜாண் பூட்ஸ்' என்பவர், புனிதையைப் பார்க்கவில்லையென்றாலும், அவரும் இப்பக்தியைப் பரப்ப பெரிதும் உதவினார். அருட்திரு ரமியேர் ஜீன் குரோசே, அருட்திரு. ஜோசப் காலிபட் ஆகிய சேசுசபைக் குருக்களும் பேருதவியாக நின்றனர். சேசு சபைத் தலைவர்கள் இப்பக்தியைப் பரப்ப பெரிதும் உதவினர்;
இயேசுவின் திரு இருதயநாதர், புனிதை மார்கரீத் மரியாளுக்கு மட்டுமல்ல, வேறு பல புனிதர்களுக்கும் காட்சி கொடுத்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. 'ஹெல்ப்பா ' என்ற இடத்தில் மடத்துத் தலைவியாக இருந்த கன்னிகையான புனித ஜெர்த்துருத்தம்மாளுக்கு ' 1288 - ல் பலமுறை காட்சி கொடுத்துள்ளார். அவற்றுள் முக்கியமானது நற்செய்தியாளர் புனித அருளப்பரின் திருநாளன்று கொடுத்த காட்சியாகும்.
இக் காட்சியின் போது, "இயேசுவின் மார்பின் இடப்பக்கம் புனித அருளப்பரும் வலப் பக்கம் தானும் சாய்ந்திருந்ததைக்" கண்டார். "நான் என் இருதயத்தை உனக்கு அளித்து விட்டேன்; நீ உன் இருதயத்தை எனக்குக் கொடு" இதுதான் இருதயநாதர் இயேசு, புனிதை ஜெர்த்துருத்தம்மாளுக்கு வெளிப்படுத்தியவற்றின் சாரம். இவர், தான் எழுதிய தெய்வீக அன்பின் தூதர்', 'ஞான முயற்சிகள்' என்ற நூல்களில் இயேசுவின் திரு இருதயத்தைக் குறித்து அரிய செபங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
புனித கன்னிகை 'மெக்தில்தம்மாளுக்கு ' 1270 - ல் ஆண்டவர் பல அருங் கொடைகளை வழங்கியதோடு, இயேசு தம் இனிய இருதயத்தின் காயத்தைத் திறந்து, "என் அன்பின் மாண்பைப் பார், என் இதயத்தை முற்றிலும் எடுத்துக் கொள்" எனக் கூறினார்.
14 - ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதர் சபை கன்னிகையான 'மார்கரீட்டா எப்னர்' என்பவர், 'தான் இயேசுவின் பெரிய பாடுபட்ட சுரூபத்தின் அருகே நின்றதாகவும், நம் ஆண்டவர் சிலுவையினின்று குனிந்து அவரது திறக்கப்பட்ட இருதயத்தை முத்தி செய்யவும், அந்த இருதயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைப் பருக அனுமதித்ததாகவும் காட்சி கண்டதாகக் கூறுகிறார்.
சீயேன் நகர் 'புனித கத்தரீனம்மாள்' 1370 - ஆம் ஆண்டு இருதயங்களைப் பரிமாற்றம் செய்யும் காட்சியைக் கண்டார். புனித கத்தரீனம்மாளின் இருதயம் இயேசுவின் இருதயத் துள்ளும், இயேசுவின் இருதயம் புனித கத்தரீனம்மாளின் இருதயத்துள்ளும் சென்றன.'
1549 - ஆம் ஆண்டில் 'கனிசியுஸ் இராயப்பர்' என்ற புனிதருக்கும், இயேசுவின் திரு இருதயம் காட்சி கொடுத்துள்ளது.