✠ புனிதர் முதலாம் மார்ட்டின்

திருத்தந்தை முதலாம் மார்ட்டின், கத்தோலிக்க திருச்சபையின் 74வது திருத்தந்தையாக 649ம் ஆண்டு, ஜூலை மாதம், 21ம் தேதிமுதல் 655ம் ஆண்டில் தனது இறப்புவரை ஆட்சி செய்தவர் ஆவார்.

இவர், “பைஸண்டைன் பேரரசின்” (Byzantine Empire) “ஊம்ப்ரியா” (Umbria) மாகாணத்திலுள்ள “டோடி” (Todi) எனும் நகரில் பிறந்தார். “திருத்தந்தை முதலாம் தியடோருக்குப்” (Pope Theodore I) பிறகு, 649ம் ஆண்டு, ஜூலை மாதம், ஐந்தாம் நாளன்று இவர் திருத்தந்தையானார். பைஸன்டைன் (Byzantine Papacy) திருத்தந்தை ஆட்சி காலத்தின்போது, அப்போதைய "காண்ஸ்டன்டினோபில்" (Constantinople) அரசரிடம் ஒப்புதல் பெறாமல் திருத்தந்தையானவர் இவர் ஒருவரே. இவரை "பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ்" (Emperor Constans II) நாடுகடத்தினார். இவர் “தென்கிரீமியா” (Southern Crimea) மாகாணத்திலுள்ள “செர்சொன்” (Cherson) எனுமிடத்தில் இறந்தார். இவரை மறைசாட்சியாகவும், புனிதராகவும் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் ஏற்கின்றன.

இவர் திருத்தந்தையான பின்பு, முதல் வேலையாக “மொனொதிலிடிசம்” (Monothelitism) என்னும் கொள்கையினைக் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, 649ம் ஆண்டு, “இலாத்தரன்” பொதுச் சங்கத்தினை (Lateran Council of 649) கூட்டினார். இலாத்தரன் யோவான் பேராலயத்தில் (Church of St. John Lateran) கூடிய இக்கூட்டத்தில் 105 ஆயர்கள் கலந்து கொண்டனர். இது ஐந்து அமர்வுகளில் 5 அக்டோபர் முதல் 31 அக்டோபர் 649ம் ஆண்டுவரை நடந்தது. இதில் 20 சட்டங்கள் வெளியிடப்பட்டன. அவை மொனொதிலிடிசம் கொள்கையினை திரிபுக்கொள்கை என அறிக்கையிட்டது.

மார்ட்டின் இச்சங்கத்தின் முடிவுகளை சுற்றுமடலாக வெளியிட்டார். இத்திரிபுக் கொள்கையினரான "பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ்" (Emperor Constans II), இவரை கைது செய்ய ஆணையிட்டார். 653ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் நாளன்று, கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் நாளன்று, காண்ஸ்டன்டினோபிளுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்து பைசாந்தியப் பேரரசின் செர்சனுக்கு (தற்போதைய கிரிமியா) நாடு கடத்தப்பட்ட்டார். கி.பி. 655ம் ஆண்டு, மே மாதம், 15ம் நாளன்று, அங்கு வந்த அவர், அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று உயிர் நீத்தார்.

இவர் மறைசாட்சியாக மரித்த திருத்தந்தையர்களில் கடைசியானவர். காலங்காலமாக பின்பற்றி வரும் கத்தோலிக்க விசுவாசத்தை உயிரைக் கொடுத்து பாதுகாத்தவர்.

காண்ஸ்டன்டினோபிளுக்கு திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான பிறகு பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்தார். அந்நாட்களில், திருச்சபையில் ஒரு குழப்பம் உண்டானது.

"கிறிஸ்துவிடம் இரு தன்மையா - அல்லது ஒரு தன்மை உண்டா" - என்ற வாதம் எழுந்தது. கிறிஸ்துவிடம் மனிதத் தன்மை மட்டுமே உண்டு என்ற தவறான கருத்துக்கு அடிமையாக இருந்த இரண்டாம் கான்ஸ்டான்ஸ் அரசன், இதையே அறிவிப்புச் செய்ய வேண்டுமென்று திருத்தந்தையைக் கேட்டுத் தொல்லை செய்தான். இதனால் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 649ல் ரோமில் விரைவாக லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கத்தின் முடிவில், கிறிஸ்துவில் இரண்டு தன்மைகள் உண்டு என்ற மிகத்தெளிவான முடிவை லாத்ரன் பொது சங்கம் அறிவித்தது.

இதன் விளைவாக, மார்ட்டின் கான்ஸ்டைன்ஸ் மன்னரால் 653ல் கைதியாக கெர்சோன் என்ற இடத்தில் சிறைப்படுத்தப்பட்டார். திருத்தந்தைக்குரிய அடையாளங்கள் அனைத்தையும் அரசன் வெளிப்படையாகவே பறித்துக் கொண்டான்.

திருத்தந்தை பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பட்டினியாக விடப்பட்டார். "எனக்கு அறிமுகமானவர்கள் கூட எனது இடுக்கண் வேளையில் என்னை மறந்துவிட்டனர். நான் இன்னும் உயிரோடிருக்கிறேனா, செத்து மடிந்துவிட்டேனா என்று பார்க்கக்கூட யாருமில்லை. இருப்பினும் எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்று விரும்பும் எல்லாம் வல்ல கடவுள், புனித பேதுருவின் வேண்டுதலால் அனைவரும் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க அருள்புரிவாராக" என்று திருத்தந்தை மார்ட்டின் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். இறுதியாக, கிரிமியாத் தீவில் உள்ள செர்சொனுக்கு நாடுகடத்தப்பட்ட இவர், கி.பி. 655ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று, இறந்தார்.

† ஜெபம்: புனிதர் முதலாம் மார்ட்டினே! மறைசாட்சியாக மரித்த திருத்தந்தையர்களில் கடைசியானவரே! இயேசு கிறிஸ்துவில் இரு தன்மைகள் உள்ளன என்ற கோட்பாட்டில் ஆணிதரமாய் இருந்து விசுவாசத்திற்கு எதிரான சாத்தானின் திரிபு கொள்கையை உடைத்தெரிந்தவரே! எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்ற கடவுளின் விருப்பம் நிறைவேற, நாங்கள் அனைவரும் தளரா கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டி இறைவனிடம் எங்களுக்காக தொடர்ந்து மன்றாடுவீராக! ஆமென்! †