திவ்ய நற்கருணை நாதரின் பேழை முன்பு எப்படி செல்ல வேண்டும்?

மோட்சத்திற்கு செல்வது போல தேவ அரசரது விருந்துக்குப் போவது போல ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் திவ்ய நற்கருணைப் பேழை முன்பு செல்லுங்கள்

உலகில் ஏழைகள் மிகுந்திருக்கிறார்கள். துயரப்படுவோரையும், வேதனைப்படுவோரையும் எங்கும் காணலாம். தனிமையில் வாடுகின்றனர், கண்ணீர் வடிக்கின்றனர். இரத்தம் சிந்துதல், அக்கிரமம், பாவம் ஆகியவை மலிந்து கிடக்கின்றன. அழுகைக் குரல் எங்கும் கேட்கிறது. ஆண்டவருக்கு அஞ்சி, அவரை நேசித்து வாழும் ஆண்களும், பெண்களும் அதிகம் இருக்கிறார்கள்.

"வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே, என் அண்டையில் வாருங்கள், நான் உங்களை இளைப்பாற்றுவேன்" என்று கூறி நம்மை அழைக்கும் சேசு, திருப்பேழையில் நமக்காகக் காத்திருக்கிறார். அவரைப் பயன்படுத்தத் துணையாயிருக்கும்படி இச்சிறுப் பதிவு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வாக்கியத்திற்குப் பின்னும் சிறிது தாமதித்து, சிந்தித்து ஜெபிக்கவும்

சேசு : "இனி நான் உங்களை ஊழியரென்று சொல்லுவதில்லை... உங்களை என்னுடைய சிநேகிதர் என்றேன்” (அரு.15:14-15).

திவ்விய நற்கருணைப் பேழையில் இருக்கும் சேசுவே, உம் திருமுன் நிற்கும் வானதூதர்களுடனும், சிறப்பாக என் காவல் தூதருடனும் சேர்ந்து உம்மை நான் ஆராதிக்கிறேன். நீர் என் ஆன்மாவுக்கும், சரீரத்திற்கும், குடும்பத்திற்கும், ஊருக்கும் உலகுக்கும் செய்துள்ள எண்ணற்ற உதவிகளுக்காக நன்றி செலுத்துகிறேன். என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்க எனக்கு உதவி செய்யும். எங்கள் நாட்டையும், திருச்சபையையும் காப்பாற்றும். உம்மைப் போல் நான் அன்பு, சாந்தம், பொறுமை உள்ளவனாக வாழ அருள்புரியும்.

சேசு நம்மிடம் கூறுகிறார்

நண்பா, எனக்கு நீ மிகப் பிரியப்படும்படி அதிகம் கல்வியறிவு படைத்திருக்க வேண்டுமென்று தேவையில்லை. என்னை உருக்கமாக நேசிப்பதே போதும். இப்பொழுது என்னுடன் பேசு. உன் உற்ற நண்பனுடன் பேசுவதுபோல் பேசு. உன் அன்னையுடன் உரையாடுவது போல் என்னுடன் உரையாடு. உன் சகோதரனுடன் உறவாடுவதுபோல் என்னுடன் உறவாடு. பெற்ற பிள்ளையைத் தாய் மறந்தாலும் நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டேன்.

யாருக்காவது நான் உதவி செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயா? உன் பெற்றோருக்கு நான் செய்யக் கூடியது ஏதாவது உண்டா? உன் சகோதர, சகோதரிகளுக்கு என்ன தேவை? உன் நண்பர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

மதுபானப் பிரியனான ஒருவனை நான் மனந்திருப்ப வேண்டுமென்று நீ ஆசிக்கிறாயா? சூதாட்டத்தினால் பாழாகும் குடும்பங்களுக்கு நான் ஏதாவது செய்யவேண்டுமா? என்னை மறந்து திரிபவர்கள் பலரை நீ அறிவாய். அவர்களுக்காக நீ ஜெபிப்பதில்லையா? உன் ஊரில் இருக்கும் கல்நெஞ்சரான பாவிகளை ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி, அவர்களுக்காக என் இரக்கத்தை நம்பிக்கையுடன் கெஞ்சி மன்றாடுவாயாக. எத்தனையோ வீடுகளில் மணம் முடிக்க வகையில்லாதோர் இருக்கின்றனர். அவர்களுக்காக நீ எனது உதவியைக் கேட்பதில்லையா? என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீ அறிவாய். ஆண்களின் மனதை ஒரு வினாடியில் மாற்ற என்னால் இயலும். உலகப் போக்குடன் இருந்த அப்போஸ்தலர்களை ஒரு வினாடியில் மாற்றிய பரிசுத்த ஆவியானவரை நோக்கி ஜெபி. அவர்களின் மனதை இன்றும் அவர் மாற்ற முடியும்.

சோம்பேறியாக அலைந்து, மனைவி மக்களுக்குச் சுமையாக இருப்பவர்களை நீ அறிவாய். அவர்களுக்காக நீ என்னை மன்றாடு. மனைவி மக்களை மிருகத்தனமாக நடத்தும் ஆண்களையும், ஆண்களின் வாழ்வைக் கசப்பாக்கும் பெண்களையும் நீ அறிவாயானால் அவர்களுக்காகவும் மன்றாடு. நன்றிகெட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனிமையில் வாடும் பெற்றோரை மறந்து விடாதே.