மறக்கப்பட்டு வரும் பாவசங்கீர்த்தனம்..

பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.

அருளப்பர் (யோவான்) 20 : 22-23

மறக்கப்படக்கூடாத ஆனால் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேவதிரவிய அனுமானம் ' பாவசங்கீர்த்தனம்'

தேவ திரவிய…. அதாவது தேவனிடமிருந்து நிறைய திரவியங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் திருவருட்சாதனம் பாவசங்கீர்த்தனம்..

என்னதான் செய்கிறது இந்த திருவருட்சாதனம்..

பாவ அழுக்கால் பிசாசின் ஜாடையில் இருக்கும் நம் ஆன்மாவை பரிசுத்தமாக்கி கடவுளின் ஜாடையை நமக்கு மீண்டும் கொடுத்து நம்மை புத்தம் புதிய படைப்பாக மாற்றுகிறது..

பிசாசுக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கும் கத்தரிகோலாக செயல்படுகிறது..

நம்முடைய பாவங்களுக்காக நம்மை மனம் வருந்தச் செய்கிறது..

பயத்தைப் போக்குகிறது..

நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறது..

பரிசுத்த ஆவியை நமக்கு கொடுக்கிறது..

மேலே பாருங்கள் யூதர்களுக்கு பயந்து கதவுகளை மூடிக்கொடிருந்த சீடர்களை நம் இயேசு ஆண்டவர் சந்திக்கிறார்.. அவர்களின் பயத்தை போக்க இரண்டு முறை “ உங்களுக்கு சமாதானம் “ என்று சொல்கிறார்..

அதன் பின் அவர்கள் மேல் ஊதி “ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் “ என்று சொல்கிறார்.. பரிசுத்த ஆவியை கொடுத்தபின்புதான் மக்களின் பாவங்களை மன்னிக்க சீடர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார்..

பரிசுத்த ஆவியின் வருகை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது “ தேவமாதாவும், சீடர்களும், பெண் சீடர்களும் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவி பொழியப்பட்டு சீடர்கள் அந்நிய மொழிகள் பேசியதுதான்..

நமக்கு ஆர்ப்பாட்டமாக வந்த பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது.. அமைதியாக வந்த பரிசுத்த ஆவியானவர் தெரிவதில்லை..

“ பாவசங்கீர்த்தனம் “ – எவ்வளவு பெரிய அருட்கொடை..

கடவுளின் சாயலை நமக்கு மீண்டும் பெற்றுத்தந்து அவரோடு நம்மை மீண்டும் இணைக்கிறது..

மனதுக்குள் பெரிய சமாதானத்தையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது..

இப்போது நாம் நினைத்துப் பார்ப்போம்..

நாம் பாவசங்கீர்த்தனம் செய்து “ எத்தனை வாரங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள் ஆகிறது “ என்று..

நாம் நம் மனதுக்குள் பாவங்கள் என்னும் அசுத்தத்தை வைத்துக்கொண்டே.. அதாவது நம் ஆன்மாவை கழுவப்படாத ஒரு பாத்திரமாக (சமையல் முடித்து அனைவரும் சாப்பிட்டபின்பு கழுவதற்காக போடப்படும் சோறு, குழம்பு வைத்த மற்றும் கழுவப்படாத தட்டுக்களை நினைவிற்கு கொண்டு வருவோம்) வைத்துக்கொள்வோம்.. அந்த அசுத்தமான பாத்திரத்தில் ஒவ்வொரு முறையும் நம் கடவுளை.. நம் பரிசுத்த கடவுளை வாங்கினால் அது எப்படி இருக்கும்?

அதைத்தானே நாம் ஒவ்வொரு முறையும் செய்கிறோம்.. “ பரிசுத்தமான கடவுளை “ தகுதியற்ற விதத்தில் கழுவப்படாத பாத்திரத்தில்தானே நாம் வாங்குகிறோம்..

அப்படியானால்.. உடனே.. நாம் கிளினீங் பவுடர் போட்டு நம் ஆன்மாவை நன்றாக கழுவி பளப்பான வெள்ளித் தட்டுபோல் வைத்து நம் கடவுளை நாம் வாங்கியாக வேண்டும்..

அந்த கீளீனிங் பவுடர்தான் பாவசங்கீர்த்தனம்.. உடனே நாம் அதைச் செய்ய வேண்டும்..

அதுவும் இந்த தவக்காலத்தில், ஒறுத்தலில் இருக்கிற இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக பாவசங்கீர்த்தனம் செய்தே ஆக வேண்டும்..

அதுவும் வருத்தத்தோடும் மனஸ்தாப உள்ளத்தோடும்..

இப்போது உடனே பாவசங்கீர்த்தனம் செய்ய நாம் தயாரா?

குறிப்பு : பாவசங்கீர்த்த தொட்டியில் இருப்பது குருவானவர் அல்ல..

நம் சேசு ஆண்டவரே..

அந்த மனநிலையோடு, மனஸ்தாப உள்ளத்தோடு, நான் ஒரு பாவி என்ற தாழ்ச்சியோடு இந்த " பாவசங்கீர்த்தனம்" என்னும் திருவருட்சாதனத்தை பயன்படுத்தினால் மேலே சொல்லப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களும் நமக்கு கிடைக்கும்..

அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் மட்டுமல்ல மனஸ்தாப உள்ளத்தோடு செய்யப்படும் பாவசங்கீர்த்தனத்தில் கூட மிகப்பெரிய அற்புதங்களும், குணப்படுத்த முடியாத நோய்களும் நீங்கும்..

ஏன் இதை நம் இயேசு ஆண்டவரே செய்திருக்கிறார்..

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக!

இயேசுவுக்கே புகழ்!

மரியாயே வாழ்க!