தவக்கால சிந்தனைகள் 16 : இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்..

நம் பரிசுத்த தெய்வத்தின் ஆடைகளை களைந்து அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

பாவிகளுக்காக பாவமில்லாத பரிசுத்த ஜீவன் அவமானத்தை ஏற்கிறது..

நம் இயேசு சுவாமி ஏன் அவமானப்படுத்தப்பட்டார்? யார் குற்றத்திற்காக ? யார் பாவத்திற்காக?

எல்லாம் நம் குற்றத்திற்காக; நம் பாவங்களுக்காக..

குறிப்பாக நாம் செய்த கற்பிற்கு எதிரான பாவத்திற்காக.. நாம் மறைவாக செய்த அந்த பாவத்திற்காக அவர் வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் அவர் கேவலப்படுத்தப்படுகிறார். நாம் செய்த கேவலமான இழி செயலுக்காக இந்த பரிசுத்த பரமன் பரிகாரம் செய்கிறார்..

நாம் கற்பிற்கு எதிராக, நம் உடலாகிய பரித்த ஆவியின் ஆலயத்திற்கு செய்த அத்தனை குற்றங்களையும் அவர் அவமானப்படும் நேரத்தில் அவற்றை ஒப்புக் கொடுத்து பரிகாரம் செய்கிறார்..

எப்படிப்பட்ட அன்பான பரிசுத்த கடவுள் நம் கடவுள்...

இந்த பரிசுத்த கடவுளை நோகச் செய்ய எப்படித்தான் நமக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை..

இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நம் நெஞ்சில் கை வைத்துப்பார்த்து நாம் இதுவரை செய்த குறிப்பாக கற்பிற்கு எதிராக செய்த பாவங்களை நினைத்துப்பார்க்க வேண்டும்.

என்னெ என் பாவம்! எத்தனை கொடியது ! எத்தனை அசிங்கம் !

மேலும் மற்ற பாவங்களையும் நினைத்துப் பார்ப்போம்..

எத்தனை பேரை நோகச்செய்திருக்கிறது. எத்தனை பேரை வார்த்தைகளால் கொலை செய்திருக்கிறது. இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லியிருக்கிறது. மேலும் நான் எத்தனை முறை பொறாமை பட்டிருப்பேன், எத்தனை தீய சிந்தனை நினைத்திருப்பேன், யார் யாரை எல்லாம் தவறாக நினைத்திருப்பேன், என் சுயநலத்திற்காக எத்தனை பேரை கஷ்ட்டப்படுத்தியிருப்பேன். யார் யார் மேலாமோ சந்தேகப்பட்டிருப்பேன். எத்தனை பேரை பகைத்திருப்பேன். எத்தனை முறை பொய் சொல்லியிருப்பேன்.

எத்தனைமுறை உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசியிருப்பேன். எத்தனை தீய செயல்கள் செய்திருக்கிறேன்.. இன்னும்.. இன்னும்.. மோகப்பாவங்கள் எத்தனையோ பாவங்கள். அதை என் ஆன்மாவும், என் இறைவன் மட்டுமே அறிவார்கள்.

மொத்தத்தில் எத்தனை முறை பாவங்களால் என் ஆன்மாவை பாவத்தால் கறைபடுத்திருப்பேன்...

இயேசு : “ தன்னைத்தானே நேசிப்பதுபோல பிறரையும் நேசி “

நான் : நான் பிறரை நேசிக்கவில்லை

இயேசு : “ உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே உலகிற்கு வந்தேன் “

நான் : பொய்யைத்தானே தேர்ந்து கொண்டேன்.

இயேசு: “ உன் பகைவரையும் நேசி “

நான் : என் பகைவரை பகைத்தேன்

இயேசு : “ உங்களுள் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எரியட்டும்”

நான் : என் மீது அவ்வளவு அழுக்கை வைத்துக்கொண்டு பிறரை தீர்ப்பிட்டேன்.

இயேசு : பரலோக செல்வங்களை தேடுங்கள், கடவுளின் அரசையே முதலில் தேடுங்கள்.

நான் : உலக செலவங்கள், பணம், பொருள், நகை, சொத்து, கேளிக்கை இவைகளையே தேடி பாவத்தில் உழல்கின்றேன்.

இயேசு : “ நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேர மாட்டீர்கள் “

நான் : கோபம், வன்மம், பகை, இச்சை, பேராசை, பொறாமை, பாவ நாட்டம்

இவைகள் எல்லாம் இருக்க நான் எங்கே தூய குழந்தைகளாக மாறுவது..

இயேசு : மேலே நான் சொல்லிய வார்த்தைகளை உன்னால் நிறைவேற்ற முடியாவிட்டால் நான் உனக்காக திரும்ப ஆடைகள் உரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.. உனக்கு இதுதான் விருப்பமோ?

என் ஆடைகள் என் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தன.. அதை என் உடலில் இருந்து பிரித்து எடுக்கவில்லை..பிய்த்து எடுத்தார்கள்..அப்போது என் உடல் அதிகமாக வலித்தாலும் நான் உனக்காக அனுபவிக்கிறேன் என்ற எண்ணத்தால் அந்த வலிகளை நான் தாங்கிக்கொண்டேன்...

ஆனால் உன் பாவங்களால் நான் அனுபவிக்கும் வலியைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.. ஆனால் நீ என்னை தொடர்ந்து தாங்கச்சொல்லி வற்புறுத்துகிறாயே...

நீ என்மேல் அன்பு வைத்துள்ளது உண்மையானால்.. தயவு செய்து பாவம் செய்வதை நிறுத்தி விடு..

நீ மகிழ்சியாக இரு தவறில்லை..ஆனால் பாவம் செய்யாதே...பாவம் செய்வதுதான் உனக்கு மகிழ்ச்சி என்றால்..

நான் மீண்டும்..மீண்டும் சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டே இருப்பேன்...

எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி... எங்கள் பெயரில் தயவாயிரும்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !