தவக்கால சிந்தனைகள் 40 : ஈஸ்டருக்கு முன் இதையும் படித்துவிடுங்கள்...

மாதாவின் பரிந்துரையில் நல்ல கள்ளனின் மனமாற்றம்... மற்றும் " இதோ உன் தாய் "

கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

இடது பக்கத்துக் கள்வன் சிலுவையிலிருந்தபடியே சேசுவை தொடர்ந்து நிந்திக்கிறான். மற்றவர்களின் வசைகளையெல்லாம் அவன் திருப்பிச் சொல்கிறான். அவற்றின் சுருக்கம் போல் அது இருக்கிறது. முடிவாக இப்படிச் சொல்கிறான்: “ஜனங்கள் உன்னை விசுவசிக்க வேண்டுமென்றால் நீ உன்னையே இரட்சித்துக் கொள். நீயா கிறீஸ்து? உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. தந்திரக்காரர்களுக்கே உலகம். கடவுள் இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். இதுவே உண்மை. எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு. கடவுள்?... முட்டாள்தனம்! நம்மைக் கட்டுப்படுத்த கற்பிக்கப்பட்ட கதை. நான் என்னும் சுயம் நீடூழி வாழ்க! மனித சுயமே இராஜா. அவனே கடவுள்!” என்கிறான்.

வலது பக்கத்துக் கள்வன் தன் பக்கத்தில் நிற்கிற மாதாவைப் பார்க்கிறான். சேசுவைப் பார்ப்பதை விட கூடுதலாக மாதாவையே உற்றுப் பார்க்கிறான். சற்று நேரமாக அவன் அழுதபடி: “என் அம்மா!” என்று தனக்குள்ளே முனகுகிறான். பின் மற்றவனைப் பார்த்து: “நீ பேசாதே. இந்த வேதனை அனுபவிக்கிற இந்த

நேரத்திலுமா நீ கடவுளுக்குப் பயப்படவில்லை? நல்லவரை நீ எதற்காக நிந்திக்கிறாய்? அவருடைய வேதனை நம் வேதனையை விட அதிகமானது. அவரோ எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்கிறான்.

ஆனால் மற்றவன் தொடர்ந்து சபித்துக் கொண்டிருக்கிறான்.

சேசு மவுனங் காக்கிறார். அந்த நிலையில் அவர் இருப்பதற்கு அவர் செய்ய வேண்டியிருக்கிற முயற்சியின் காரணமாக மூச்சுத் திணறுகிறார். அவ்வளவு கொடூரமான முறையில் அவர் அடிபட்டதாலும், அவரை இரத்தம் வியர்க்கச் செய்த ஆழமான மரண அவஸ்தையாலும் ஏற்பட்ட காய்ச்சல், இருதயத்தின் நிலை, அவரைப் பாதித்து விட்டது. அவருடைய பாதங்களில் சுமரும் பாரத்தைக் குறைப்பதால் சற்றேனும் விடுதலை தேட முயல்கிறார். அதற்காக தம்மையே மேலே இழுத்து கைகளிலிருந்தே தொங்கப் பார்க்கிறார். அவர் இப்படிச் செய்வது அவருடைய பாதங்களை வதைக்கிற தசை நார்களின் சுரிப்பை நீக்குவதற்காகவும் இருக்கக்கூடும். சுரிப்பு ஏற்பட்டிருப்பதை அவருடைய தசை நார்களின் துடிப்பு காட்டுகிறது. அவருடைய கரங்களிலும் இதே துடிப்பு தெரிகிறது. கை விரல்கள் நெருக்கப்பட்டிருக்க அந்நிலையில் அவற்றின் நுனிகள் இரத்தம் இல்லாமையால் விறைத்துப் போயிருக்கின்றன. இருதயத்திலிருந்து உயரமாக அவை இருப்பதாலும், கஷ்டத்தோடு மணிக்கட்டு வரையிலும் வருகிற இரத்தம் ஆணியறைந்த துவாரத்தின் வழியாக வெளியேறி விடுவதாலும் விரல்களுக்கு இரத்த ஓட்டம் அற்றுப் போகிறது. குறிப்பாக இடது கரத்தின் விரல்கள் உள்ளங்கை நோக்கி வளைந்து அசைவிழந்து இறந்து விட்டன. காலின் விரல்களும் வேதனைப்படுகின்றன. கால் பெருவிரல்கள் மேலும் கீழும் அசைந்து விரிகின்றன. அதிலுள்ள நரம்பு அதிக சேதம் அடையாமலிருக்கலாம்.

சேசுவின் உடலின் பெரிய வேதனைகள் அதன் அசைவிலிருந்து புலப்படுகிறது. உடல் வேகமாய் அசைகிறது. அது ஆழ்ந்த அசைவாக இல்லை. அவருக்கு சோர்வளிக்கிறது. எந்த வேதனைத் தணிவும் அவருக்கில்லை. அவரின் உடல் அமைப்பு மிகச் சிறந்தது என்பதால் அவருடைய விலா எலும்புகள் உயர்ந்தும் அகன்றுமே இருக்கும். அவை இப்போது அவருடைய சரீரம் வைக்கப்பட்டுள்ள நிலையினாலும், உள்ளே நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் இழைம அழற்சியாலும் மிக அதிகமாக விரிவடைந்துள்ளன. ஆயினும் அதனால் அவருடைய சுவாசம்

எளிதடையவில்லை.

அவருடைய அடிவயிற்றின் அசைவு, செயலற்றுப் போன ஈரல் தாங்கிச் சவ்வை ஏந்தினாலும்கூட, மூச்சுவிட அவர் செய்யும் முயற்சிக்கு எந்த உதவியும் ஏற்படவில்லை.

நிமிடம் நிமிடமாக அவருடைய இறுக்கமும் மூச்சுத் திணறலும் கூடிக்கொண்டே வருகின்றன. கடுங் காய்ச்சலினால் சிவந்த அவருடைய உதடுகள் நீலம் பூத்துப் போவதிலிருந்து அது தெரிகிறது. கழுத்தின் வீங்கிய நரம்புகளின் வழியே ஊதாச் சிவப்புக் கோடுகள் விழுகின்றன. அவை கன்னம் வரைக்கும் விரிந்து பரவுகின்றன. காதுகளையும் சென்னியையும் எட்டுகின்றன. நாசி சுருங்கியும் இரத்தமற்றும் காணப்படுகிறது. கண்களோ வட்டங் களுக்குள் இறங்கிக் கிடக்கின்றன. முள்முடியிலிருந்து சொட்டும் இரத்தம் படாத இடங்களில் வெளிறித் தெரிகின்றன.

இடது விலாக் கூட்டின் கீழே இருதயத்தின் முனை வந்து மோதித் துடிப்பதைக் காண முடிகிறது. அது ஒரே சீராயில்லாமலும் வேகமுள்ள துடிப்பாகவும் இருக்கிறது. உள்ளே இடைக்கிடையே ஏற்படும் ஒரு வலிப்பினால் ஈரல் தாங்கிச் சவ்வு ஆழ்ந்த துடிப்படைகிறது. அது தோளின் மிகக் கூடுதலான முழு விரிசலினால் காட்டப்படுகிறது. அந்தக் காயப்பட்ட, இறந்து கொண்டிருக்கிற சரீரத்தின் தோல் இதற்கு மேலும் எங்கே விரிக்கப்பட முடியும்?

சேசுவின் திருமுகம் புனித துகிலின் படத்தில் நாம் காண்கிற சாயலுக்கு வருகிறது. நாசி இரு பிரிவாகி ஒரு பக்கத்தில் வீங்கிக் காணப்படுகிறது. வலது கண் பக்கத்தில் ஏற்பட்ட வீக்கத்தினால் அது ஏறக்குறைய மூடிப் போய் விட்டது. அவருடைய வாய் திறந்து காணப்படுகிறது. மேலுதட்டின் காயம் இரத்தம் உறைந்து மூடியவாறிருக்கிறது.

இரத்த இழப்பினாலும், காய்ச்சலாலும், எரியும் வெயிலாலும் அவருக்கு ஏற்பட்ட தாகம் எவ்வளவென்றால் துளிர்த்து விழுகிற வியர்வையையும் வடிகிற இரத்தத்தையும் பாய்கிற கண்ணீரையும் தன்னாலே அசைகிற வாயால் பருகுகிறார். அவருடைய நெற்றியிலிருந்து ஒழுகும் இரத்தம் அவர் வாயில் வடிகிறதைக் கொண்டு தம் நாவை நனைக்கிறார்...

அவர் கரங்களால் தொங்கும் வேதனையையும் அவருடைய பாதங்களில் சுமரும் பாரத்தின் வலியையும் சிலுவை மரத்தில் சற்று தலையைச் சாய்த்து குறைக்கலாமென்றால் முள்முடி அப்படிச் செய்ய விடாமல் தடுக்கிறது. அவருடைய சிறுநீரகங்களும்,

முதுகெலும்பும் இடுப்பிலிருந்து சிலுவையை விட்டு வெளிப்புறமாக வளைந்திருக்கின்றன. சேசுவின் சரீரத்தைப் போல் தொங்கவிடப் பட்டுள்ள கனப்பொருள் எதுவும் சடத்துவ பாரத்தால் இவ்வாறு தான் தொங்கும்.

திறந்த இடத்திற்கு அப்பால் விரட்டப்பட்ட யூதர்கள் சேசுவை வசை பேசுவதை நிறுத்தவில்லை. மனந்திரும்பாத கள்வனும் அந்த நிந்தைகளைத் திருப்பிச் சொல்கிறான்.

வலது புறக்கள்வன் இப்போது மேலும் மேலும் ஆழ்ந்த இரக்கத்தோடு மாதாவை நோக்கிப் பார்க்கிறான், அழுகிறான். மாதாவையும் மற்றவன் சேர்த்து நிந்திப்பதைக் கேட்டதும் அவனுக்கு சூடாகப் பதில் கொடுக்கிறான்:

“உன் வாயை மூடு. நீயும் ஒரு ஸ்திரீயிடம் பிறந்தாயென்பதை மறக்காதே. நம் தாய்மார் தங்கள் மகன்களின் பொருட்டு அழுதார்கள் என்பதை நினை. அவை வெட்கத்தின் கண்ணீர்கள்... ஏனென்றால் நாம் குற்றவாளிகள். நம் தாய்மார் இறந்து போனார்கள்... என்னை மன்னிக்கும்படி என் தாயிடம் நான் கேட்க விரும்புகிறேன்... ஆனால் அது முடியுமா? என் அம்மா ஒரு புனித ஸ்திரீயாயிருந்தார்கள். அவர்களுக்கு நான் வருவித்த துயரத்தினால் அவர்களைக் கொன்று விட்டேன்... நான் ஒரு பாவி... என்னை யார் மன்னிப்பார்கள்?”

பின் மாதாவிடம்: “அம்மா! மரிக்கிற உங்கள் குமாரனின் பெயரால் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தாயே!” என்று கேட்கிறான்.

மாதா வாதைப்படும் தன் முகத்தை உயர்த்தி அவனைப் பார்க்கிறார்கள். தன்னைப் பெற்றவளின் நினைவாலும் மாதாவைப் பார்த்துச் சிந்தித்ததாலும் மனஸ்தாபத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிற பரிதாபமான அவனைத் தன் சாந்தமான பார்வையால் நேசிக்கிறார்கள்.

அப்போது தீஸ்மாஸ் சத்தமாக அழுகிறான். அதனால் ஜனக் கும்பலும் அடுத்த கள்வனும் அவனை கூடுதலாக ஏளனம் செய்கிறார்கள்.

ஜனக் கும்பல் கத்துகிறது: “ரொம்பச் சரி! அவளை உன் தாயாக எடுத்துக் கொள். அவளுக்கு அப்போது இரண்டு குற்றவாளி மகன்கள் இருப்பார்கள்!” என்று. “நீ அவளுடைய மகனுடைய சிறு பிரதி போலிருக்கிறாயென்றுதான் அவள் உன்னை நேசிக்கிறாள்” என்று சொல்லி சந்தர்ப்பத்தைக் கூடுதல் மோசமாக்குகிறான் மற்ற கள்வன்.

சேசு அப்போதுதான் முதல்முறையாகப் பேசுகிறார்: “பிதாவே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்கிறார்.

சேசுவின் இந்த மன்றாட்டு தீஸ்மாஸிடம் இருக்கிற எல்லா அச்சத்தையும் மேற்கொள்ளுகிறது. அவன் கிறீஸ்துநாதரை ஏறிட்டுப் பார்க்கத் துணிந்து சொல்கிறான்:

“ஆண்டவரே! நீர் உம்முடைய இராச்சியத்தில் இருக்கும்போது என்னை நினைத்தருளும். நான் துன்பப்படுவது நீதியே. ஆனால் இதற்குப் பின் எனக்கு இரக்கத்தையும் சமாதானத்தையும் தாரும். நீர் போதித்ததை ஒரு தடவை நான் கேட்டேன். ஆனால் நான் மூடத்தனமாய் உம் வார்த்தையைப் புறக்கணித்தேன். இப்பொழுது மனஸ்தாபப்படுகிறேன். உந்நதரின் குமாரனாகிய உமது முன்பாக நான் மனஸ்தாபப்படுகிறேன். நீர் கடவுளிடமிருந்து வருகிறீர் என நான் விசுவசிக்கிறேன். உம்முடைய வல்லமையை நான் விசுவசிக்கிறேன். உம்முடைய இரக்கத்தை நம்புகிறேன். கிறீஸ்துவே! உமது தாயின் பெயராலும் உமது பிதாவின் பெயராலும் என்னை மன்னித்தருளும்” என்கிறான்.

சேசு திரும்பி ஆழ்ந்த இரக்கத்தோடு அவனைப் பார்க்கிறார். அவருடைய வதைக்கப்பட்ட உதடுகளால் அழகிய புன்முறுவல் கொள்கிறார். அவனிடம்: “உனக்குச் சொல்கிறேன், இன்றே நீ என்னுடன் பரகதியிலிருப்பாய்” என்கிறார்.

மனஸ்தாபக் கள்வன் அமைதியடைகிறான். அவன் குழந்தையாயிருந்த போது கற்ற ஜெபங்கள் அவன் நினைவில் இல்லாததால் ஒரு மனவல்லய ஜெபம் போல் இப்படிச் சொல்கிறான்.

“சேசு நசரேயன் யூதர்களின் இராஜாவே, என் மேல் இரக்கமாயிரும். சேசு நசரேன் யூதர்களின் இராஜாவே, உம்மை நம்புகிறேன். சேசு நசரேயன் யூதர்களின் இராஜாவே, உம்முடைய தெய்வீகத்தை விசுவசிக்கிறேன்.”

அடுத்த கள்வன் தொடர்ந்து சபித்துக் கொண்டிருக்கிறான்.

ஆகாயம் மேலும் மேலும் மங்கலாகி வருகிறது. மேகங்கள் சூரிய ஒளியை விழவிடாமல் அடைத்துக் கொண்டிருக்கின்றன. ஈயப் பாளங்கள் போல் ஒன்றின் மேலொன்றாய், வெண்மையாயும், பச்சை கலந்தும் அடுக்கிக் கொள்கின்றன. சமயாசமயத்தில் ஒரு குளிர்ந்த காற்று வீசுவதைப் பொறுத்து அவை கலைகின்றன. காற்று நின்றவுடன் ஆகாயம் கடுமையாகி மங்கி புழுக்கமாகிறது. அது வேகமாய் வீசும்போது உடலைக் கடித்தது போல் தோன்றுகிறது.

வெளிச்சம் குறைகிறது. பச்சை கலக்கிறது. முகங்கள் வினோதமாய்க் காணப்படுகின்றன. பக்கவாட்டில் தெரிகிற போர்ச் சேவகரின் உருவங்கள் முன்பு பளபளத்த அவர்களின் தலைச்

சீராக்களுடனும் கவசங்களுடனும் காணப்பட்டன. இப்பொழுது அவை சாம்பல் பச்சை நிறத்தால் கறைபட்டு செதுக்கிய கடின சிலைகளைப் போலிருக்கின்றன. யூதேயர்களின் முகங்களும் பொதுவாக மர நிறத்தில் காணப்படும் அவர்களின் தலை ரோமம் தாடிகளும் நீரில் மூழ்கி இறந்தவர்களைப் போல் ஒருவகையாக வெளிறிப் போயிருக்கின்றன.

ஸ்திரீகளின் நீலம் பூத்து வெளிறிய உருவங்கள் சிலைகளைப் போல் தெரிகின்றன.

சேசு மிகுதியாக வெளிறி, இறந்து விட்டவர் போல் காணப்படுகிறார். அவருடைய சிரசு அவர் நெஞ்சில் கவிழ்ந்து தொங்குகிறது. அவருடைய உடற்பலம் எல்லாம் துரிதமாய் வற்றிவிட்டது. காய்ச்சல் அவரை எரிக்கிறது. அவர் நடுங்குகிறார். இதுவரையிலும் அவர்தம் இருதயத்தின் அடியில் மட்டும் உச்சரித்த வார்த்தையை இப்பொழுது மெல்ல முனகுகிறார்:

“அம்மா! அம்மா!” என்று. தாழ்ந்த குரலில் ஒரு பெருமூச்சு விடுவது போல் அவ்வார்த்தையை முனகிச் சொல்கிறார். சற்று ஜன்னி ஏற்பட்டு, அவருடைய சித்தம் வெளிப்படுத்த விரும்பாத அதனைத் தடுக்க முடியாத நிலையில் இருப்பவர் போல் அப்படிச் சொல்கிறார். அவர் அப்படிச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் மாதா தன்னால் தடுக்கக் கூடாதபடி, அவருக்கு உதவ விரும்புவது போல் தன் கரங்களை நீட்டுகிறார்கள். ஆனால் அக்கொடியவர்கள், இறந்து கொண்டும் அவஸ்தை அனுபவித்துக் கொண்டுமிருக்கிற இவர்களின் ஊடுருவும் வேதனையைக் கண்டு சிரிக்கிறார்கள்.

கல்வாரி உச்சிக்கு அடுத்த மேட்டில் இடையர்கள் நிற்கிற பக்கம் வரையிலும் குருக்களும் வேதபாரகர்களும் மறுபடியும் ஏறி வருகிறார்கள்.

போர்ச் சேவகர்கள் அவர்களைத் துரத்திவிட வந்த போது, அவர்கள் எதிர்த்து: “இந்தக் கலிலேயர் இங்கே நிற்கிறதா யிருந்தால், நாங்களும் நிற்போம். கடைசி வரையிலும் நீதி செலுத்தப்படுகிறதா என்று நாங்கள் பார்க்க வேண்டும். தூரத் திலிருந்து இந்த வெளிச்சத்தில் எங்களால் பார்க்க முடியவில்லை” என்கிறார்கள்.

எதார்த்தமாகவே உலகத்தை மூடியிருக்கிற இருளைப் பற்றி பலர் குழப்பமடைகிறார்கள். படைவீரர்கள், ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி அங்கே ஒரு மலையுச்சிக்குப் பின்னாலிருந்து எழுந்து வருகிற கருநிறக் கூம்பு வடிவப் பொருள் ஒன்றைக் காட்டுகிறார்கள். அது மிகக் கறுப்பாக, பைன் மரம் போல, தண்ணீர் பாயும் கெண்டி வாய் போலிருக்கிறது. அது உயர உயர எழும்பி அதிக கறுப்பான

மேகங்களை உற்பத்தி செய்வது போலிருக்கிறது. அது புகையும் நெருப்புக் குழம்பும் கக்குகிற பூகம்பம் போல் காணப்படுகிறது.

இந்தப் பயங்கரமான அந்திப்பட்ட வெளிச்சத்தில்தான் சேசு, மாதாவுக்கு அருளப்பரையும், அருளப்பருக்கு மாதாவையும் கொடுக்கிறார். சேசு தம் தலையைத் தாழ்த்துகிறார். ஏனென்றால் மாதா அவரை நன்றாகப் பார்க்கும் பொருட்டு சிலுவையை நெருங்கிப் போய் நிற்கிறார்கள். அப்போது அவர்:

“ஸ்திரீயே உன் மகன். மகனே இதோ உன் தாய்” என்று சொல்கிறார்.

மாதா இந்த வார்த்தையைக் கேட்டபின் கூடுதலாக குழம்பித் துயரப்படுகிறார்கள். இது சேசுவின் சித்தம். அதன்படி அவரிடம், தம் தாய்க்கு ஒரு மனிதனைக் கொடுப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர் மனிதர் மேல் கொண்ட சிநேகத்தினால் தம் தாயிடமிருந்து பிறந்த கடவுள்-மனிதனை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். இதனால் அத்தாயால் அழாதிருக்கக் கூடவில்லை. ஆயினும் மவுனமாகவே அழுகிறார்கள்... தாரையாக அவர்கள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து பாய்கிறது. எவ்வளவு முயன்றாலும் அவர்களால் அதைத் தடை செய்யக் கூடவில்லை. அந்த நேரத்திலும் அவருக்கு ஆறுதலளிப்பதற்காக அவர்களுடைய உதடுகள் ஒரு உள்ளம் உடைந்த சிறுநகையைக் காட்டுகின்றன...

சேசுவின் வேதனை மேலும் அதிகரிக்கிறது. வெளிச்சமும் குறைந்து கொண்டே போகிறது.

நன்றி : www.catholictamil.com