தவக்கால சிந்தனைகள் 39 : இயேசு சுவாமி சிலுவையில் அறையப்படுதல்..

கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

கள்வர்கள் இருவரும் தங்கள் சிலுவையில் கட்டப்பட்டு அவர்களின் இடங்களுக்கு, ஒருவன் சேசுவுக்கு வலது பக்கத்திற்கும், ஒருவன் இடது பக்கத்திற்கும் தூக்கிச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் ஓலமிட்டு ஆணையிட்டு சபிக்கிறார்கள். விசேஷமாக சிலுவையின் குழிகளில் அவை நாட்டப்படும்போது கயிறுகள் அவர்களுடைய மணிக்கட்டுகளை இறுக்கி உள்ளே அறுத்துக் கொண்டு போகும்போது ஏற்பட்ட வேதனையால் அவர்கள் கடவுளைப் பழித்தும் சட்டத்தையும் உரோமையரையும் யூதேயரையும் பழித்தும் நரகக் கூச்சலிடுகிறார்கள்.

இனி சேசு சிலுவையில் அறையப்பட வேண்டும். அவர் சாந்தமாக சிலுவையில் படுக்கிறார். இரு கள்வர்களும் சிலுவைகளில் கட்டப்பட்ட போது கொலைஞர்களை அவர்கள் உதைத்துத் தள்ளிவிடாமல் தடுப்பதற்காக நான்கு பேர் போதாமல் சில போர்ச் சேவகரும் தலையிட வேண்டியிருந்தது. சேசு விஷயத்தில் யாருமே தேவைப்படவில்லை. அவரே படுத்துக் கொள்கிறார். தலையை வைக்கச் சொன்ன இடத்தில் வைக்கிறார்.

சொன்னபடியே தம் கரங்களையும் கால்களையும் நீட்டுகிறார். தம் இடையில் சுற்றிய துகில் சரியாயிருக்கும்படி மட்டும் பார்த்துக் கொள்கிறார். செம்மண் நிலத்திலிருந்தும் இருண்ட சிலுவை மரத்திலிருந்தும் அவருடைய வளர்ந்த ஒல்லியான வெண்மையான திரு உடல் எடுப்பாகத் தெரிகிறது.

அவரை அமுக்கிக் கொள்ளும்படி இரு கொலைஞர்கள் அவருடைய நெஞ்சில் உட்கார்ந்து கொள்கின்றனர்.

அப்போது அந்தப் பாரத்தால் அவர் அனுபவிக்கிற இறுக்கத்தையும் வேதனையையும் நான் நினைக்கிறேன். மூன்றாம் கொலைஞன் அவருடைய வலது கரத்தை எடுக்கிறான். ஒரு கையால் சேசுவின் முழங்கைக்குக் கீழாகவும் மற்யறாரு கையால் அவருடைய விரல் நுனிகளையும் பிடித்திருக்கிறான். நான்காம் கொலைஞனின் கையில் நீண்ட, கூர்மையான, நான்கு பட்டமும் உருட்டைத் தலையுமுள்ள ஆணியை வைத்திருக்கிறான். அந்த உருண்டை பழங்கால நாணயத் தளவாக இருக்கிறது. அவர் சிலுவை மரத்தில் ஏற்கெனவே இடப் பட்டிருக்கிற துளை சேசுவின் முன் கை எலும்புகளின் மணிக்கட்டுப் பொருத்தில் சேர்கிறதா என்று பார்க்கிறான். அது சேருகிறது. அவன் ஆணியில் நுனியை சேசுவின் மணிக்கட்டுப் பொருத்தில் ஊன்றுகிறான். சுத்தியலை உயர்த்தி முதல் அடியை அடிக்கிறான்.

தம் கண்களை மூடியிருந்த சேசு ஒரு சத்தம் கொடுக்கிறார். அவர் உடல் நடுங்கி சுருங்குகிறது கூரிய வேதனையால். கண்களைத் திறக்கிறார். கண்ணீர் நிறைந்து வழிகிறது. அவர் படும் வேதனை மிகப் பயங்கரமாயிருக்க வேண்டும்... ஆணி இறங்குகிறது. தசை நார்களையும், இரத்தத் தாரைகளையும், நரம்புகளையும் கிழித்துக் கொண்டு எலும்புகளைச் சிதைத்துக் கொண்டு இறங்குகிறது.

வாதைப்படும் தன் குமாரனின் குரலுக்கு மாதா தேம்பும் முனகல் ஒலியால் பதிலளிக்கிறார்கள். அது வெட்டப்படும் ஆட்டுக் குட்டியின் குரல் போலிருக்கிறது. தன் தலையைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, மிதிக்கப்படுவது போல் கவிழ்கிறார்கள். சேசு தம் தாய்க்கு வேதனை கொடுக்கக் கூடாதென்று, அதற்குப் பின், எந்தக் குரல் ஒலியும் எழுப்பவில்லை.

ஆனால் சுத்தியல் அடிகள் தொடருகின்றன - முறையாக. கடினமாக இரும்பால் இரும்பை அடிக்கிறார்கள்... ஒரு உயிருள்ள உடலின் அங்கம் அதைப் பெறுகிறதென்பதை நாம் நினைக்க வேண்டும்.

வலது கையை அறைந்தாயிற்று. இடது கைக்கு வருகிறார்கள். மரத்தில் இடப்பட்ட துளைக்கு மணிக்கட்டு எட்டவில்லை. அதனால் அவர்கள் ஒரு கயிற்றை எடுத்து அவருடைய இடது மணிக்கட்டில் கட்டி தோளின் மூட்டு விடுகிற வரையிலும் இழுக்கிறார்கள். தசை நாண்கள் அறுகின்றன. தசை நார்கள் கிழிகின்றன. அவரைக் கைது செய்யும்போது கட்டிய கயிறுகள் முன்பே அறுத்திருந்த தோல், மேலும் அறுபட்டுக் கிழிகிறது. இதனால் வலது கையிலும் வேதனை. அதுவும் இழுக்கப்படுகிறது. அதன் காரணமாக மணிக்கட்டின் காயம் ஆணியைச் சுற்றி விரிகிறது.

இவ்வாறாக இடது கையின் பெருவிரல் பக்கமான உள்ளங்கை கஷ்டத்துடன் துளையை எட்டுகிறது. அவ்வளவு போதும் என்று எண்ணிய அவர்கள், எங்கே முடிகிறதோ அங்கே ஆணியைச் செலுத்துகிறார்கள். அதாவது பெருவிரலுக்கும், மற்ற விரல்களுக்கும் மத்தியில் - பெருவிரலுக்குச் சமீபமாக உள்ளங்கையில். அங்கே ஆணி எளிதாக இறங்கி விட்டது. ஆனால் கூடுதலான வேதனையுடன். ஏனென்றால் முக்கியமான நரம்புகள் வெட்டப் படுகின்றன. இதனால் விரல்கள் அசைவிழந்து விட்டன. வலது கரத்தின் விரல்கள் சுருங்கி நடுங்குகின்றன. காரணம் அவற்றின் உயிர் மூலம் மடியவில்லை. சேசுவோ எந்த வேதனைக் குரலும் எழுப்பவில்லை. ஆழ்ந்த கரகரத்த குரலில் முனகமட்டும் செய்கிறார்.

உதடுகள் இறுக மூடியிருக்கின்றன. அவருடைய வேதனையால் கண்ணீர் பெருகி சிலுவை மரத்தில் விழுந்து தரையில் வடிகின்றது.

இனி கால்கள். சிலுவையின் அடி முனையிலிருந்து இரண்டு மீட்டர் சற்றுக் கூடுதலான இடத்தில் ஒரு சிறிய ஆப்பு உள்ளது. ஒரு பாதத்திற்குக் கூட அது பற்றாது. இரண்டு பாதங்களையும் அதில் வைத்து அது சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கிறார்கள். அது சற்றுக் கீழே இறங்கியிருப்பதால் பாதங்கள் அதற்கு எட்டவில்லை. அதனால் அவர்கள் அவருடைய குதிங் கால்களைப் பிடித்து அவரைக் கீழே இழுக்கின்றனர். அப்போது சிலுவையின் கரடுமுரடாயிருக்கிற மரத்தில் அவருடைய காயங்கள் உராய்கின்றன. அப்படி இழுத்தது அவருடைய சிரசில் இருந்த முள்முடியைப் பெயர்த்து விட்டது. முள்முடி கழன்று விழப் போகின்றது. அப்போது ஒரு கொலைஞன் அவர் முகத்தில் அடித்து மறுபடியும் அதை அவர் தலையில் அமுக்கி வைக்கிறான்...

சேசுவின் நெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து அவருடைய முழங்கால்களை நீட்ட வருகிறார்கள். ஏனென்றால் கால்களில் அறையப்போகிற பெரிய ஆணியைக் கண்டு விட்ட சேசு தம்மையறியாமலே கால்களை மேலே இழுத்துக் கொள்கிறார். அந்த ஆணி, கரங்களை அறைந்த ஆணிகளை விட இரட்டை நீளமும், தடிப்பும் உள்ளது. சூரிய ஒளியில் அது மின்னுகிறது. அவர்கள் தோலுரித்த அவருடைய முட்டுக்களை அமுக்கி காயப்பட்டிருக்கிற முழங்கால் தண்டுகளை அழுத்துகிறார்கள். அவர்கள் அவ்வாறு பிடித்திருக்க, மற்ற இரு கொலைஞரும் இரண்டு பாதங்களையும் ஒன்றாக அறையும் அதிக கடினமான வேலையைச் செய்கிறார்கள்.

அவர்கள் ஒரு பாதத்தை மற்றப் பாதத்தின் மேலே வைத்து கணைக்கால் மூட்டுகள் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்க்க முயல்கிறார்கள்.

சேசுவின் இரு பாதங்களையும், அவற்றின் குதிங்கால்களையும் விரல்களையும் அமுக்கிப் பிடித்து அசையாமல் இருக்கும்படி செய்ய அவர்கள் முயலுகிறார்கள். ஆனால் அடியில் வைக்கப்பட்டிருக்கிற இடது பாதம் அதற்கு மேலே வைக்கப்பட்ட வலது பாதத்தில் ஆணி அடிக்கப்படுவதால் அதிர்ந்து இடம் பெயருகிறது. வலது பாதத்தைத் துளைத்து மழுங்கியுள்ள ஆணியை, இடது பாதத்தில் அது இறங்கியுள்ளதிலிருந்து பிடுங்கி, சற்றுத் தள்ளியிருக்கிற நடு இடத்திற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.

அப்படிக் கொண்டு வந்து அவர்கள் அதில் அடிக்கிறார்கள் - அடிக்கிறார்கள் - மேலும் மேலும் அடிக்கிறார்கள்... அந்த ஆணி அறையும் சத்தம் மட்டுமே கல்வாரியெங்கும் ஒலிக்கிறது. காரணம், எல்லாருடைய கண்களும், காதுகளும், அங்கே நடைபெறும் அசைவுகளைப்

பார்த்தும் ஓசைகளைக் கேட்டும் களிப்படைவதிலேயே கவனமா யிருக்கின்றன.

சுத்தியலின் கடினமான ஓசையோடு தொடர்ந்து கேட்கிறது ஒரு புறாவின் மெல்லிய இரக்க அழுகுரல் - அது மாதாவின் சிதைந்து குரலின் முனகல். ஒவ்வொரு அடிச் சத்தத்திலும் அவர்கள மேலும் மேலும் கூனிப் போகிறார்கள். ஒவ்வொரு அடியும் அவர்களையே தாக்குவது போல் அவதிப்படுகிறார்கள். வேதசாட்சியான தாய்! அந்தக் கொடிய வாதையில் அவர்கள் நசுங்குண்டு போகிறார்கள் என்பதை யாரும் கண்டுகொள்ள முடிகிறது.

சிலுவையில் அறையப்படுவது மகா பயங்கரமானது. அதன் வேதனையில் அது கசையடிக்கு ஒப்பாகும். ஆனால் கசையடியையும் விட காண அதிக குரூரமானது. சதைக்குள் ஆணி மறைவதைக் காணக் கூடியதாயிருக்கிறது. அறையப்படுவது கசையடியை விட குறுகிய காலத்தில் முடிகிறது. கசையடி அதன் நீளுதலினால் நரம்பையெல்லாம் தளர்த்தி விடுகிறது.

ஜெத்சமெனியின் இரத்த வியர்வையும் கசைகளால் அடிபட்டதும் சிலுவையில் அறையப்பட்டதும் மூன்று மிகக் கொடூரமானவை என்று எண்ணுகிறேன். கிறீஸ்துவின் அனைத்து வாதனைகளையும் அவை எனக்குக் காட்டுவதாகத் தெரிகிறது. அவருடைய மரணம் எனக்கு ஒரு விடுதலை போலிருக்கிறது. ஏனென்றால் “ஆ, முடிந்தது” என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் வேதனைகளின் முடிவு அது அல்ல. வேறு வேதனைகளின் தொடக்கம்.

சேசு அறையப்பட்டிருக்கிற சிலுவையை இப்பொழுது அதன் குழிக்கு இழுத்துச் செல்கிறார்கள். நிரப்பில்லாத தரையில் சிலுவை மோதி அதிர்வதால் சேசுவும் குலுக்கப்படுகிறார். அவர்கள் சிலுவையைத் தூக்கி உயர்த்தும்போது இரண்டு தடவை அது தவறி விழுகிறது. முதல் தடவை தடாரென்று அப்படியே விழுகிறது. இரண்டாம் தடவை சிலுவையின் வலது கரத்தில் குத்தி விழுகிறது. சேசுவின் புண்பட்ட கை, கால், தலை அனைத்தும் வெகுவாய்க் குலுங்கி தாக்கப்பட்டு அவர் அகோர கொடிய வேதனைப்படுகிறார்.

சிலுவையை அவர்கள் குழிக்குள் விழ விடும்போதும், அது கற்களாலும் மண்îலும் இறுக்கப்படுமுன்னும், அது எல்லாப் பக்கமும் ஆடி அசைகிறது. மூன்று ஆணிகளில் தொங்கிக் கொண்டிருக்கிற அந்தப் பரிதாபமான சேசுவின் சரீரம் எப்படி அசைக்கப்பட்டு எத்தகைய நிஷ்டூரமான கொடிய ஆக்கினையை அவர்

அனுபவிக்கிறார்!

அவருடைய சரீரத்தின் முழுப் பாரமும் முன் பக்கமாகவும் கீழ்நோக்கியும் இழுக்கப்பட்டு காயங்களின் துவாரங்கள் பெரிதாகின்றன. குறிப்பாக இடது கரத்தின் காயமும் கால்களின் காயங்களும் விரிகின்றன. இரத்தம் அதிகமாகக் கொட்டுகிறது. திருப்பாதங்களின் காயங்களிலிருந்து இரத்தம் சொரிந்து விரல்களின் மேல் பாய்ந்து சிலுவையின் மரத்தில் வடிந்து தரையை நனைக்கிறது. திருக்கரங்களின் காயங்களிலிருந்து வடியும் இரத்தம் முன்னங்கை வழியாகப் பாய்கிறது. தோளைவிட கரங்கள் உயரமாக அறையப்பட்டிருப்பதால் இரத்தம் தோளின் அடிக்கு வந்து அதிலிருந்து இடுப்பை நோக்கிப் பாய்கின்றது. சிலுவை இறுக்கப்படுமுன் அது சாய்ந்து ஆடுகிற போது சேசுவின் சிரசு பின்புறமாய் சிலுவையுடன் மோதுகிறது. முள்முடியின் பின்புறத்தில் கொத்தாக இருக்கிற முட்களை பிடரியுடன் சேர்த்து நெருக்குகிறது. முன் நெற்றியில் இருக்கிற முட்கள் இரக்கமில்லாமல் அதைக் கீறிக் காயப்படுத்துகின்றன. கடைசியாக சிலுவை மரம் நடப்பட்டு இறுக்கப்பட்டு விட்டது. சேசு அதிலே தொங்கும் கொடூரத்தை அனுபவிக்கிறார்.

கள்வர்களின் சிலுவைகள் குழிகளுக்குள் நிறுத்தப்படுகின்றன. நேர் நிலைக்கு வந்ததும் அவர்கள் உயிருடன் தோலுரிக்கப்படுவது போல் கத்துகின்றனர். கயிறுகள் மணிக்கட்டின் சதைக்குள் அறுத்துக் கொண்டு போவதால் அந்த வேதனை. மேலும் அவர்களின் கைகள் நீலமாகி இரத்த நரம்புகள் கயிறு போல் புடைக்கின்றன.

சேசு மவுனமாயிருக்கிறார். ஆனால் ஜனக் கூட்டமோ ஆரவாரம் செய்த நரக நாராசம் போல் கூச்சலிடுகிறது.

இப்பொழுது கல்வாரியின் உச்சி தன் வெற்றிப் பொருளையும் அதன் அணிவகுப்பு மரியாதையையும் பெற்றுக் கொண்டது. உச்சியில் சேசுவின் சிலுவை நிற்கிறது. பக்கங்களில் மற்ற இரண்டு சிலுவைகளும், அரை நூற்றுச் சேவகர்கள் போர்ச் சீருடையில் உச்சியைச் சுற்றிலும் அணிவகுக்கின்றனர். அந்த வட்டத்திற்குள்ளே வாகனம் விட்டிறங்கிய பத்து குதிரை வீரர்கள் உள்ளனர். தீர்ப்பிடப்பட்டவர்களின் ஆடைகளின் மேல் அவர்கள் பகடைக்காய் போடுகின்றனர். சேசுவின் சிலுவைக்கும் வலது பக்கச் சிலுவைக்கும் நடுவே லோஞ்ஜினுஸ் நேராக நின்று கொண்டிருக்கிறான். அது வேதசாட்சியான அரசருக்கு உபசார மெயக்காவல் காப்பது போலிருக்கிறது. லோஞ்ஜினுஸின் துணை-ஆணையனுடைய பொறுப்பில் மற்ற அரை நூற்றுச் சேவகர்கள் கல்வாரியின் உச்சிக்குக்

கீழேயுள்ள இடது பக்க மேட்டிலும் பாதையிலும் ஓய்வில் இருக்கிறார்கள்.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479