31 நாள் சிறப்பு ஜெபமாலை இரண்டாம் நாள் செபமாலையின் வரலாறு

12 ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ஜெபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்தது .ஆனால் இந்நாளில் ஜெபிக்கும் முறையே அந்த நாட்களிலும் வழங்கியது என்று எண்ணலாகாது . ஜெபமாலை என்றும் அதற்குப் பெயரில்லை . மாமரியின் சங்கீத மாலை என்று வழங்கப்பட்டது . குருக்கள் பாடும் 150 சங்கீதங்களைச் சங்கீத மாலை என்று பாடினர். அதைப் பின்பற்றித்தான் மரியின் சங்கீத மாலை வந்தது . 150 முறை அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லி வந்தனர் . மேலும் ஒவ்வொரு சங்கீதத்திலும் உள்ள இரண்டொரு வார்த்தைகளையோ , எண்ணங்களையோ புகுத்தி செய்யுள் அமைத்து தாயைப் புகழ்ந்தனர் .ஓர் உதாரணம் 

 கன்னியரின் கன்னியும் நிகரற்ற தாயுமானவளே 

 தேவனின் சட்டத்தை தினம்தினம் தியானிக்கச் செய்யும் 

 தேவனின் அரசின் மகிமையில் ஆனந்திக்கச் செய்யும் 

 இதில் மூன்றாம் அடி சங்கீதத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது . இதே போல் தேவ தாய்க்கு 150 கண்ணி கொண்ட மாலை தொகுத்தனர் 

 ஆனால் பொதுவில் வழங்கியது 'அருள் நிறைந்த மரியாயே ' என்னும் ஜெபத்தை , ஐம்பது ஐம்பதாக மும்முறை சொல்வதாம். .அருள் நிறைந்த மரியாயே என்ற ஜெபம் இன்றையைப் போல் அன்று அவ்வளவு பூர்த்தியானதல்ல 

 சங்கீதங்கள் இறைவனுக்கு தோத்திரப்பாக்கள், அது போல் இச்செபம் மாமரிக்குத் தோத்திரப்பாக்கள் . 

13ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு துறவி சொல்லுவார் " நாம் மரியன்னைக்கு வந்தனை செலுத்துவோமேயாகில் , அவர் பதில் வந்தனை செலுத்தத் தெரியாத கிராமத்தாள் அல்ல . மாமரியின் வந்தனையைக் கேட்டவுடன் எலிசபெத் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டாள். மாமரி சொல்லும் வந்தனையால் நாமும் வரப்பிரசாதத்தால் பூரிக்கும்படி மாமரிக்கு அடிக்கடி வந்தனை செய்வோமாக" 

 ."மாமரி சொல்லும் வந்தனைக்கு என்ன வல்லமை ! அது நமக்கு ஆனந்தத்தை அளிக்கும். பரிசுத்த ஆவியைக் கொடுக்கும். இறைவனுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும். தீர்க்கதரிசன வரத்தை நமக்குக் கொண்டு வரும்" என்றார் வேறொரு துறவி 

"அருள் நிறைந்த " ஜெபம் தேவதாய்க்கு தோத்திரம் என்பதோடு கூட ,அதனால் வரும் நன்மைகளைக் காண்பித்து அடிக்கடி இந்தத் தோத்திர கீதத்தைப் பாடும்படி மக்களை அத்துறவிகள் தூண்டிப்போயிருக்கின்றனர்.

பலமுறை ஒன்றைச் செய்வோமேயாகில் ,சொல்வோமேயாகில் அதைக் கணக்கில் வைக்க வேண்டாமா ? அதற்காக முதன்முதல் சிறு சிறு கூழாங்கற்களை உபயோகித்தனர் . பின்னர் சில உதிரிக் கொட்டைகளை உதவிக் கொண்டனர். அதன்பின் அக்கொட்டைகளை சிறு கயிறுகளாலோ கம்பிகளாலோ கோர்த்தனர் . முதலில் ஐம்பது ஐம்பதாகக் கோர்த்துக் கொண்டனர் . இப்பூவுலகில் தேவதாய் 63 வருடங்கள் இருந்ததாக ஒரு ஐதீகம் இருந்து வருவதால் 63 மணிகள் கோர்த்த சரடுகள் பல இடங்களில் இருந்து வந்தன 

 ஒவ்வொரு பத்துக்கும் இடையில் 'கர்த்தர் கற்பித்த ஜெபம் ' சொல்லும் வழக்கம் கிடையாது . 17ஆம் நூற்றாண்டின் முடிவில் முதலாய்ச் சிலர் அச்செபத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லும் சம்பிரதாயம் வழக்கில் இல்லை . பத்துப் பத்தாய்ப் பிரித்துக் காட்ட என்ன செய்தனர் ? ஆதியில் ஒவ்வொரு சங்கீத முடிவில் என்ன செய்தனரோ அதைச் செய்தனர் . அதாவது தலை குனிந்தனர் ; மார்பைத் தட்டினர் . ஒற்றை முழந்தாளில் நின்று எழுந்தனர் . அல்லது இரட்டை முழந்தாளிட்டனர் . சிலர் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தனர் . திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே மூவின ஜெபம் வழக்கத்தில் இருந்து வந்தது . மெய் , மொழி, மனம் . கரங்களைக் குவித்தல் , குவித்துத் தூக்குதல் , சிலுவையைப் போல் கரத்தை விரித்தல் , முழந்தாளில் இருத்தல் , நெடுஞ்சாண்கிடையாய்க் கிடத்தல் ஆகியனவாம் . இவை பல மதங்களிலும் வழக்கத்தில் உள்ளன 

 செபம் 

 செபமாலை மாதாவே , கல்வாரியில் என்னை உம் பிள்ளையாக ஏற்று எனக்காக நீர் கண்ணீர் சிந்தினதை நினைத்தருளும். தேவ நீதியிலிருந்து என்னைக் காப்பாற்ற இதுவரை நீர் எடுத்துக் கொண்ட கவலைகளையும் நினைவு கூரும். உமது பிள்ளைக்கு இவ்வளவு செய்தபின் அவனைக் கைவிட்டு விடமாட்டீர் . இவ்வெண்ணத்தால் நம்பிக்கை கொண்டு எனது குற்றங்களையும், நன்றி கெட்டத் தனத்தையும் கண்டு அஞ்சாமல் உம் பாதத்தண்டை சாஷ்டாங்கமாய் விழுகிறேன் . என் விண்ணப்பத்தைத் தள்ளிவிடாதேயும் . செபமாலையை நான் பக்தியாய்ச் சொல்லவும் , சேசுவை எல்லாவற்றையும்விட அதிகமாய் நேசிக்கவும் , பரிசுத்த வாழ்க்கையால் உம்மை மகிழ்விக்கவும் ஒரு நாள் நான் உம்மை மோட்சத்தில் காணவும் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே ஆமென் 

 சரிதை 

 அர்ச். சாமிநாதர் பிரான்ஸ் தேசத்தில் போதித்துக் கொண்டிருந்தார் . ஆல்பிஜென்சியர் என்று சில வேத விரோதிகள் சத்திய திருச்சபைக்கு இக்கட்டாக இருந்தனர். இதற்குக் காரணம் மனிதர்களுடைய பாவாக்கிரமங்கள் என்று உணர்ந்தார் . தூலூஸ் பட்டணத்துக்கு அருகில் உள்ள காட்டில் சென்று மூன்று பகலும் மூன்று இரவும் செபத்தில் ஆழ்ந்தார் . கண்ணீர் சிந்தி அழுதார் . இறைவனுடைய கோபத்தை அமர்த்தக் கடுந்தவங்களைப் புரிந்தார் . ஓயாமல் தன்னை அடித்துக் கொண்டமையால் உடல் எல்லாம் புண்ணாகி மயங்கி விழுந்தார் 

 அந்நேரம் மூன்று சம்மனசுக்களோடு தேவதாய் அவருக்கு தரிசனையாகி "பிரிய தோமினிக், உலகத்தை மணந்திருப்ப பரம திரித்துவம் , நீ எச்சாதனத்தைக் கையாள வேண்டும் என்று ஆசிக்கிறார் என்பதை நீ அறிவாயா ? இப்போரில் எல்லா விக்கினங்களையும் தகர்த்தெறியும் இயந்திரம் மரியாயின் சங்கீத மாலை , ஆதலால் இக்கல்நெஞ்சரைக் கரை சேர்க்க வேண்டுமேயாகில் என் ஜெபமாலையைப் பற்றிப் போதித்து வா " ஏனென்றால் புதிய ஏற்பாட்டில் கபிரியேல் தூதர் சொல்லய அருள்நிறைந்தவளே வாழ்க  என்ற  இறைவனின் வாழ்தே புதிய ஏற்ப்பாட்டின் அடித்தளம் என்றார் 

 சாமிநாதர் எழுந்தார் . மக்களைத் திருப்ப மனம் வெந்தார், நேரே மேற்றிராசனக் கோயிலுக்குச் சென்றார் . கண்ணுக்குத் தோன்றாத வானதூதர் மணிகளை அடித்தனர் . அனல் கக்கும் ஆவலோடு பிரசங்கத்தைத் துவங்கினார் .பிரசங்கத் துவக்கத்தில் சண்டமாருதம் ; தரை நடுங்கியது ; சூரியன் தெரியவில்லை ; கட கடவென இடி ; பளீர் பளீரென மின்னல் , யாவருக்கும் பயம் . அச்சமயம் படத்தில் உள்ள தேவதாய் மோட்சத்தின் ஆக்கினையை அழைத்தது போல தம் கரங்களை மேலே உயர்த்தினார் .யாவருக்கும் நடுக்கம் . செபமாலைப் பக்தியை யாவருக்கும் விளக்கவே இந்த அடையாளங்கள் போலும். சாமிநாதர் வேண்டுதலின் மேல் பேய்ப்புயல் அமர்ந்தது . உற்சாகமாய்ப் பிரசங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார் . வெகு சொற்ப நாளில் தூலூஸ் நகர மக்கள் தங்கள் பாவ வழியை விட்டு அக்கிரம அசத்தியங்களை அகற்றித் தள்ளி மெய்யான பாதை சேர்ந்தனர் . புண்ணிய சீவியம் மறுபடி தழைத்தோங்கியது

நிறைய மக்கள் ஜெபமாலை ஜெபித்து மனம் திரும்பினார்கள் சாத்தானின் திட்டங்கள் தவிடுபொடியாகியது  செபமாலை பக்த்தியால் பல அதிசயங்களும்  அற்புதங்களும் நடந்தன  -- தொடரும்

நன்றி பிரதர் :  G.M. Augustus Sebasteen