(தெரேசம்மாளின் உடன்பிறந்த சகோதரியும், அவளுக்குப் பின் கார்மேல் மடம் புகுந்தவளும், தெரேசம்மாளின் இறுதி சுகவீனத்தில் உடனிருந்து கவனித்துக் கொண்டவளுமான சங், திருமுகத்தின் ஜெனவியேவ் (செலீன் மார்ட்டின்) எழுதிய நினைவுக் குறிப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆ-ர். )
கொடிய மரண அவஸ்தை!
"சகோதரி தெரேசா மரணமடைந்த அன்று பிற்பகல் வேளையிருக்கும். அவள் உடல் முழுவதிலும் வினோதமான நோவினால் பீடிக்கப்பட்டாள். தமது ஒரு கரத்தை ஆக்னஸ் தாயாரின் தோள்மீதும், மற்றொன்றை என் மீதும் வைத்திருந்தாள். நாங்கள் சில நிமிடங்களுக்கு அவளை அப்படி தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தோம். கடிகாரம் 3 அடித்தது. அவள் அப்போது என்ன நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவளது தோற்றத்தைக் கண்டு நாங்கள் உள்ளம் நொறுங் குண்டு போனோம். அது சிலுவையில் அறையுண்டிருக்கும் சேசுவைப் போல் தோன்றியது. அது ஒரு மறைபொருளின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று நாங்கள் உணர்ந்தோம்.
"அதன்பின் உடனே அவளது மரண அவஸ்தை ஆரம்பமாகியது. அது நீண்ட, கொடியதாக இருந்தது. அவள், ஆ! இது கடினமான துன்பமாக இருக்கிறது. ஏனெனில் ஒரு ஆறுதலும் இல்லை. "ஓ! என் சர்வேசுரா!... நான் அவரை நேசித்தாலும்...! ஓ! அன்பான பரிசுத்த கன்னிகையே, எனது உதவிக்கு வாரும்... இதுதான் அவஸ்தையென்றால் மரணம் எத்தன்மையதாக இருக்குமோ? தாயாரே, கிண்ணம் அதன் விளிம்பு வரைக்கும் நிரம்பி விட்டது என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்... ஆம்! கடவுளே!! நீர் விரும்புகிற அளவுக்கு... ஆனால் என் மேல் இரக்கமாயிரும்!... இல்லை, இப்படி அதிகம் துன்பப்பட முடியும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை... முடியாது, முடியாது!... நாளைக்கு இது இன்னமும் மோசமாயிருக்கும் - ஆ! நல்லதுதான் - அதிகமாயிருப்பது நல்லதே!' என்று அரற்றத் தொடங்கினாள். அந்த எளிய, சிறிய வேதசாட்சியின் வார்த்தைகள் உடைந்து, இதயத்தைத் தொடுபவையாக இருந்தன. ஆனால் அவை எப்போதும் உத்தம கையளித்தலின் அடையாளத்தைக் கொண்டிருந்தன.
"இப்போது மடத்துத் தாயார் மற்ற சகோதரிகள் வரும்படி அழைப்பு விடுத்தார். சகோதரி தெரேஸ், அவர்கள் ஒவ்வொருவரையும் அழகான புன்முறுவலோடு வரவேற்றாள். பிறகு அவள் தனது பாடுபட்ட சிலுவையைப் பற்றிக் கொண்டாள். துன்புறுவதற்கு தன்னையே கொடுத்து விடுவது போல் காணப்பட்டாள். மூச்சு விடுவதற்கு முதலாய் சிரமமாயிற்று. ஒரு குளிர்ந்த வியர்வை அவளது முகத்தில் அரும்பி, அவளது உடைகளையும், தலையணையையும், விரிப்புகளையும் நனைத்தது. அவள் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
"அவளது சுகவீன நாட்களில் சில சமயங்களில் சகோதரி தெரேஸ் எங்களிடம் (அவளது உடன் பிறந்தவர்கள்) "எனது அன்பு சகோதரிகளே, நான் இறக்கும்போது நீங்கள் மனம் உடைந்து போகக் கூடாது. எனது கடைசிப் பார்வை உங்களில் ஒருவரிடமே இருக்க வேண்டும். எனது இறுதி கணத்தில் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது; சர்வேசுரன் விரும்புகிறபடி இருக்கும்; அவர் என்னை துன்பப்பட விடாமல் இருந்தால், எனது கடைசி பார்வை மரி கொன்சாகா தாயாரிடம்தான் இருக்கும். ஏனெனில் அவர்கள் எனது இல்லத்துத் தலைவி!' என்று கூறினாள். அவள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக இதே வார்த்தைகளைத் திரும்பவும் கூறியிருந்தாள்.
பாக்கியமான மரணம்!
இப்போது அவளது அவஸ்தையில், அவள் மரிப்பதற்கு சில கணங்களுக்கு முன்பாக, காய்ந்து போன அவளது உதடுகளில் ஒரு சிறு பனிக்கட்டியை வைத்தேன். அதற்கு ஒரு அழ கான புன்முறுவல் தந்தாள். நீண்ட, ஊடுருவும் பார்வையோடு புன்னகை செய்தாள். அங்கே நின்றிருந்த மற்ற சகோதரிகளிடையே ஒருவித பரபரப்பு பரவியது. பிறகு தெரேசம்மாளின் கண்கள் இல்லத்துத் தலைவியான தாயாரைத் தேடி, அவர்களிடமே நிலைத்தது. தலைவி அவஸ்தை நீண்ட நேரம் நீடிக்கும் என்று எண்ணி, மற்ற சகோதரிகளை சற்று நேரம் வெளியே செல்லும்படி அனுப்பி விட்டார். இதனைக் கவனித்த தெரேசா அவரிடம் திரும்பி, "தாயாரே, இது கடைசி அவஸ்தையில்லையா? நான் உடனே சாகப் போவதில்லையா?' என்று கேட்டாள். அதற்கு தாயார், சற்று நேரம் பிடிக்க லாம் என்று பதிலளித்தார். அதற்கு தெரேசா இனிமையான, தெளிவான குரலில்,
"ஓ! சரி! அப்படியே இருக்கலாம். அப்படியே இருக்கட்டும். இல்லை, நான் கொஞ்சமாகத் துன்பப் பட விரும்பவில்லை' என்று கூறியவள், பின்னர் தனது பாடுபட்ட சிலுவையை நோக்கியவாறு,
"ஆ!... நான் அவரை நேசிக்கிறேன்!... என் கடவுளே! நான் உம்மை நேசிக்கிறேன்!' என்றாள்.
"இவைகளே அவளது கடைசி வார்த்தைகள். அவை சொல்வதற்குக் கூட மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. பின்னர் தலையணையில் சற்று வலது பக்கம் சாய்ந்து படுத்தாள். பிறகு ஏதோ புலப்படாத சப்தக் குரல் அழைத்தாற் போல் திடீரென்று எழுந்தவள், கண்களைத் திறந்து அங்கேயிருந்த "அற்புத புன்முறுவல்' மாதாவின் சுரூபத்திற்கு சற்று மேலே ஆவலுடன் பார்த்தாள். அப்படியே சில கணம் இருந்தவள் பின்னர் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடி மரணமடைந்தாள். அது 1897 செப்டம்பர் 30-ம் நாள், மாலை 5.20 ஆக இருந்தது! ''
நன்றி : 'மாதா பரிகார மலர்', மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி, Ph: Bro. Paulraj brother 9487257479.