கற்பின் சுவை, அதை இழப்பவனின் நிர்ப்பாக்கியங்கள்!
அந்த இரண்டு கன்னிகைகளும் இவ்வளவு நீண்ட பக்தியார்வ மிக்க உரைக்குப் பிறகு, ஒரு கணம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்பவர்கள் போல, தங்கள் உரையாடலை நிறுத்தினர். அதன்பின் அவர்கள் ஒருவர் மற்றவரின் கையைப் பிடித்துக் கொண்டும், ஒருவரையொருவர் பார்த்தபடியும் தொடர்ந்து பேசினார்கள்:
“ஓ, மாசற்றதனம் எவ்வளவு விலையேறப்பெற்ற பொக்கிஷம் என்பதை மட்டும் இளம்பருவத்தினர் அறிவார்கள் என்றால், அவர்கள் தங்கள் வாழ்நாளின் தொடக்கத்திலிருந்தே பரிசுத்த ஞானஸ்நானத்தின் கழுத்துப் பட்டை எவ்வளவு நேசப் பொறாமையோடு பாதுகாத்துக் கொள்வார்கள்! ஆனால் துர்ப்பாக்கியமான விதத்தில், அவர்கள் தியானிப்பதில்லை, அதைக் கறைப்படுத்துவது என்பதன் பொருள் என்ன என்பதை அவர்கள் கற்பனை செய்து பார்ப்பதில்லை!”
“மாசற்றதனம் ஒரு மிக விலையேறப்பெற்ற மது, ஆனால் அது உடையக்கூடிய மண்பாண்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.”
“மாசற்றதனம் ஒரு மிக விலையேறப்பெற்ற இரத்தினம், ஆனால் அதன் மதிப்பு அறியப்படவில்லை ; மதிப்பற்ற ஒரு பொருளுக்காக அது இழக்கப்படுகிறது, அல்லது பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகிறது.”
“மாசற்றதனம் ஒரு தங்கக் கண்ணாடி அது கடவுளின் சாயலைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அசுத்தக் காற்றின் ஒரு சுவாசம் அதை மங்கச் செய்யப் போதுமானது. ஒருவன் அதை ஒரு மூடுதுகிலால் மூடிக் காத்துக் கொள்ள வேண்டும்.”
“மாசற்றதனம் ஒரு லீலி மலர்.”
“ஆனால் ஒரு முரட்டுக் கரத்தின் வெறும் தொடுதல் அதைக் கெடுத்து விடுகிறது.”
“மாசற்றதனம் ஒரு வெண்ணாடை: ஓம்னி தெம்ப்போரே சிந்த் வெஸ்த்திமெந்த்தா தூவா காந்திதா - எல்லாக் காலங்களிலும் உன் ஆடைகள் வெண்மையாகப் பிரகாசிக்கட்டும்.”
"ஆனால் ஒரே ஒரு கறை அதை அசுத்தப்படுத்தப் போதுமானது; ஆகவே, ஒருவன் மிகுந்த எச்சரிக்கையோடு நடக்க வேண்டும்.”
“மாசற்றதனம் என்பது நேர்மை; ஒரேயொரு பாவத்தால் அது கறைப்படுத்தப்படுமானால், அது இழக்கப்படுகிறது. அது தன் அழகின் பொக்கிஷத்தை இழக்கிறது.”
“ஒரேயொரு சாவான பாவம் போதும், ஒருமுறை அது இழக்கப்பட்டால், என்றென்றைக்கும் இழக்கப்படுகிறது.”
“ஒவ்வொரு நாளும் மிகப் பலர் தங்கள் மாசற்றதனத்தை இழந்து போவது எத்துணை பரிதாபம்! ஒரு சிறுவன் பாவத்தில் விழும் போது, மோட்சம் மூடப்படுகிறது; மிகப் பரிசுத்த கன்னிகையும், அவனுடைய காவல்தூதரும் மறைந்து போகிறார்கள்; இசை நின்று விடுகிறது; ஒளி அணைந்து போகிறது; கடவுள் இனியும் அவனுடைய இருதயத்தில் இருப்பதில்லை ; அவன் நடந்து வந்த நட்சத்திரங்கள் பதித்த சாலை மறைந்து போகிறது; அவன் விழுகிறான், ஒரு கட்டத்தில் கடலுக்கு மத்தியில், ஒரு நெருப்புக் கடலுக்கு மத்தியில் உள்ள ஒரு தீவைப் போல் நிலைத்திருக்கிறான். அந்த நெருப்புக்கடல் நித்தியத்தின் மறு எல்லையிலுள்ள அடிவானம் வரை விரிந்திருக்கிறது, அது பெருங்குழப்ப நிலையின் அடியாழங்களுக்குள் இறங்குகிறது. அவனுடைய தலைக்கு மேல், இருண்ட வானத்தில் தேவ நீதியின் மின்னல் அச்சுறுத்தும் விதமாக வெட்டு கிறது. சாத்தான் அவனிடம் விரைந்து வந்து, அவனைச்சங்கிலிகளால் நிரப்புகிறான், அவன் தன் பாதத்தை அவனுடைய கழுத்தின்மீது வைத்திருக்கிறான், தன் பயங்கரமுள்ள அசங்கியமான மூக்கை உயர்த்தி,
“நான் வெற்றி பெற்றேன்! உம் மகன் என் அடிமை; அவன் இனியும் உமக்குச் சொந்தமில்லை!” என்று கூக்குரலிடுகிறான். அவனுடைய மகிழ்ச்சி முடிந்து போகிறது. அந்தக் கணத்தில் கடவுளின் நீதி, அவனைத் தாங்கும் ஒரு புள்ளியை அகற்றி விடுமானால், அவன் நித்தியத்திற்கும் இழக்கப்படுவான்.”
"அவனால் திரும்பவும் எழ முடியும்! கடவுளின் இரக்கம் அளவற்றது. ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் தேவ அருளையும், கடவுளின் மகன் என்ற பெயரையும் அவனுக்குத் திருப்பித் தரும்.”
“ஆனால் இனி மாசற்றதனமில்லை! முதல் பாவத்தின் எத்தகைய விளைவுகள் இனி அவனில் நிலைத்திருக்கும்! அவன், தான் முன்பு அறியாதிருந்த தீமையை இப்போது அறிந்திருக்கிறான்; தனது இழிவான பாவநாட்டங்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை அவன் உணர்வான்; தேவ நீதியோடு அவன் ஒப்பந்தம் செய்து கொண்ட மிகப் பெரும் கடனை அவன் உணர்வான்; ஆன்ம போராட்டங் களில் அவன் அதிக பலவீனமுள்ளவனாக இருப்பான். முன்பு தான் ஒருபோதும் அனுபவித்திராததை இனி அவன் அனுபவிப்பான்; அவை, அவமானம், துக்கம், மனவுறுத்தல் ஆகியவையாகும்.”
முன்பு அவனிடம்: “சிறு குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்கள் பரலோகத்தில் கடவுளின் தூதர்களைப் போல் இருப்பார்கள். . .
“மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா” என்று சொல்லப்பட்டதை நினைப்பான் என்றால்!" இடறல் தருபவனுக்கு ஐயோ கேடு!
ஓ, யாருடைய பாவத்தின் காரணமாக ஒரு குழந்தை தன் மாசற்றதனத்தை இழந்து போகிறதோ, அந்த ஈன மனிதர்களால் எப்படிப்பட்ட அச்சத்திற்குரிய குற்றம் கட்டிக்கொள்ளப்படுகிறது! “என்னில் விசுவாசம் கொள்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக் கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்தி விடுவது அவனுக்கு நலமாயிருக்கும்” என்றும், “இடறலால் உலகிற்கு ஐயோ கேடு!” “இடறல் வந்தே தீரும், ஆனால் யாரால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ கேடு. . .”
“இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் பரலோகத்தில் அவர்களுடைய தூதர்கள், பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பழிவாங்குதலைக் கேட்கிறார்கள்” என்று இயேசு கூறினார்.
இடறலைக் கொண்டு வருபவன் பரிதாபத்திற்குரியவன், ஆனால் தங்கள் மாசற்றதனம் கொள்ளையிடப்பட தங்களை அனுமதிப்பவர்கள் தங்கள் பரிதாப நிலையில் அவனை விடக் குறைந்தவர்கள் அல்ல!”
சிந்தனை : சிந்திக்கவும் தியானிக்கவும் வேண்டிய பதிவு...