“ இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
மத்தேயு 28 : 20
சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
நீரே கடவுளின் பரிசுத்தர்; இதை நாங்கள் விசுவசிக்கிறோம்; இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.
அருளப்பர் 6 : 68-69
“என்னை அனுப்பினவருடைய விருப்பமோ: அவர் எனக்குத் தந்ததில் எதையும் நான் அழியவிடாமல், கடைசி நாளில் உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே.”
அருளப்பர் 6 : 39
கிறிஸ்தவத்தின் மையம்.. கத்தோலிக்க திருச்சபையின் உயிர்நாடி.. திவ்ய நற்கருணை..
வேறு எந்த சபைக்கும், வேறு எந்த மதத்தினருக்கும், வேறு யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய பாக்கியம்.. கடவுளையே உணவாக உட்கொள்பவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டுமே..
“வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார் “
அருளப்பர் 1:14..
இப்போது மீண்டும் முதல் இறைவார்த்தைக்கு சென்றால்.. வார்த்தையாயிருந்த சர்வேசுவரன் மனுவுருவாகி நம்மிடையே குடிகொண்டு 33 ஆண்டுகள் வாழ்ந்து நம்மை தன் சிலுவையால் மீட்டு வானகம் செல்லும்போது.. ஆண்டவர் நம்மைவிட்டு பிரிந்து செல்கிறாரே என்று சீடர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது.. ஒரு ஜீவ ஊற்றாக.. நமக்கு மாபெரும் ஆறுதல் அளிக்கும் வார்த்தையாக.. நான் உங்களோடுதான் நிரந்தரமாக வாழப்போகிறேன்.. இருக்கப்போகிறேன்.. என்று உறுதிமொழியாக வந்த வார்த்தைதான்..
“ இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
எப்படி நம்மோடு இருக்கிறார்..? திவ்ய நற்கருணையின் வடிவில் இருக்கிறார்.. எல்லா ஆலயங்களிலும்.. எப்போதெல்லாம் நாம் திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பெருகிறோமோ… அப்போதெல்லாம் நம்மோடும் வந்து தங்குகிறார்.. வாழ்கிறார்..
இது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த அடிப்படை உண்மைதான்..
இப்போது புனித ராயப்பர் சொல்லிய மேலே உள்ள இரண்டாம் வார்த்தைக்கு சென்றால்..
“நீரே கடவுளின் பரிசுத்தர்; இதை நாங்கள் விசுவசிக்கிறோம்; இதை நாங்கள் அறிவோம்"
எவ்வளவு அழகாக தன் விசுவாசத்தை வெளியிட்டார்..
இன்னொரு முறை,
"நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" – மத்தேயு 16 : 16
என்று ஆழமாக தன் விசுவாசத்தை வெளியிட்டார்..
இப்போது மேலே உள்ள மூன்றாம் வார்த்தைக்கு சென்றால்.
தந்தையின் விருப்பம், தந்தை எனக்கு தந்த எதையும், யாரையும் நான் அழிவுறாமல் காப்பது…
உயிர் அளிக்கும் உணவாக.. உயிர் தரும் உணவாக வரும் ஆண்டவரை இந்த காலங்களில் நாம் எப்படிப்பார்க்கிறோம்..
உயிர் தருபவரை.. ஏதோ நோயைப் பரப்புவரைப்போல் அதாவது உயிரை எடுப்பவரைப்போல் பார்ப்பது.. அவரை அனுகுவது.. அவரை வாங்குவது.. சரியா?
அதற்கு ஒரே ஒரு காரணம்தான்.. “ நம் உயிர் மேல் நமக்கு உள்ள ஆசைதான்”
அந்த ஆசை கடவுளையே சந்தேகப்பட வைக்கிறது.. விசுவாசத்தை மறுதலிக்க வைக்கிறது.. அல்லது ஏதோ ஒரு அறைகுறை விசுவாசத்தோடு டபக்கென்று கரங்களில் வாங்கி நாவில் வைத்துவிட்டு..
“ ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்.. என் பிள்ளைகளைக் காப்பாற்றும் எனக்கு அது வேண்டும்.. இது வேண்டும்.. என்று ஒரு பட்டியல் போட்டு ஜெபித்துக்கொண்டே இருப்பது”
பின்னால் வரும் விசுவாசமோ நம்பிக்கையோ ஏன் அவரை வாங்கும்போது இருப்பதில்லை.. பயத்தோடும், அவசரத்தோடும் வாங்கும்போது ஏன் விசுவாசத்தோடும், நிதானத்தோடும் உரியவிதத்தில் மரியாதையோடு ஏன் வாங்குவதில்லை..
உயிர்மேல் உள்ள ஆசை உயிர் தருபவரையே சந்தேகத்தோடு பார்க்க வைத்து விடுகிறது. அதன் பின் போடும் வேண்டுதல் பட்டியல் அவர் காதில் விழுமா?
இப்போது கொரோனாவின் சத்திய சோதனையும் அதன் சாதனையும் இதுதான்..
கத்தோலிக்க விசுவாசத்தையே அசைத்துவிட்டதே..
“ CSI காரங்கதான் அப்படி பன்னுவாங்க.. நாங்கலாம் அப்படி கிடையாது என்று கலரைத் தூக்கிவிட்ட காலம் எங்கே ? “
“ பத்தோட ஒன்னு பதினொன்னு அத்தோட நானும் ஒன்னு “ அப்படி ஆகிவிட்டதே..
விசுவாச வாழ்வு… சாட்சிய வாழ்வு ???
“ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" – லூக்காஸ் 18 : 8
எப்போது இந்த வீணான பயம் போகும்.. ? துணிச்சல் பிறக்கும்? விசுவாசம் வீறு கொண்டு எழும்?
என் கடவுள் என்னைக் காக்கும் கடவுள்.. உயிர் தரும் கடவுள்.. என்னை அழிக்கும் கடவுள் அல்ல.. என்ற நிலை எப்போது வரும்..?
நம்மை நன்றாக தயாரித்து திவ்ய நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் வாங்க தயாரா?
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக ..
உலக முடிவு வரை நம்மோடு உயிரோடு வாழும் திவ்ய நற்கருணை ஆண்டவர் போற்றி !