தீர்க்கதரிசிகளின் வாயிலாக ஆண்டவர் எச்சரிக்கிறார்

மிருகத்தையும், அதன் உருவத்தையும் நமஸ்கரித்து, தன் நெற்றியிலாவது, தன் கையிலாவது அதன் முத்திரையைத் தரித்துக் கொள்கிறவன் எவனோ, அவன் சர்வேசுரனுடைய கோபாக்கினையின் பாத்திரத்தில் ஒரு கலப்புமின்றி வார்க்கப்பட்ட அவரது கோபாக்கினையாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், செம்மறிப் புருவையானவருக்கு முன்பாகவும் அக்கினியிலும், கந்தகத்திலும் உபாதிக்கப்படுவான் என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் (காட்சி.14:9,10).

“நாம் நமது காரியத்தை அதியுக்கிரமான கோபத்தோடு நிறைவேற்றுவோம். நம் கண் கிருபையின்றிப் பார்க்க, நாம் அவர்கள் மீது இரக்கமற்றிருப்போம்” என்று கடவுள் எசேக் கியேல் தீர்க்கதரிசியின் வாயிலாக எச்சரிக்கிறார் (8:18).

“உங்களில் எவன் விழுங்கும் அக்கினியோடு வசிக்கக் கூடும்? உங்களில் எவன் நித்திய தீச்சுவாலையில் வாசம் செய்வான்?” என்று இசையாஸ் தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் கேட்கிறார் (33:14).

“சகலராலும் கைவிடப்பட்டு, நீ அறியாத நாட்டில் உன் எதிரிகளுக்கு உன்னை அடிமையாக்குவோம்; ஏனெனில், நமது கோபாக்கினையை மூட்டினாய்; அது என்றென்றும் மூண்டெரியும்” என்று ஆண்டவர் சபிக்கப்பட்ட ஆன்மாவை நோக்கிக் கூறுகிறார் (எரேமி.17:4).

“கறேரென்று மரண இருள்சூழ்ந்ததும், துரதிருஷ்ட மானதும் மிகவும் இருண்டதும், சாவின் நிழல் சூழ்ந்ததும், அலங்கோலம் நிறைந்ததும், நித்திய பயங்கரம் குடிகொண் டுள்ளதுமான தேசம்... அந்த தேசத்திற்கு நான் போனால் இனி திரும்பி வர மாட்டேன்" என்று யோபு கூறுகிறார் (10:21-22).

தண்ணீரில் வாழும் மீன் அந்தத் தண்ணீரையே தன் உயிரின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. அதிலிருந்துதான் தனக்குத் தேவையான பிராண வாயுவைப் பெற்றுக் கொள்கிறது. நீர்த்தாவரங்களிலிருந்தும், நீரில் வாழும் பிற உயிர்களிலிருந்தும் தனக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்கிறது. அதன் மேலும், கீழும், வலமும், இடமும், முன்னும், பின்னும், தண்ணீர்தான் அதைச் சூழ்ந்திருக்கிறது. இப்படி தண்ணீரில் இருக்கும் வரை அந்த மீன் அதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.

ஆனால் அது நீரிலிருந்து எடுக்கப்பட்டு கரையிலுள்ள மணலில் விழுந்து துடிக்கும்போதுதான் தண்ணீரின் இன்றியமையாத தேவையை உணர்கிறது. எப்படியாவது மறுபடியும் தண்ணீருக்குள் போய்விட விரும்புகிறது. அது முடியாதபோது அது தன் உயிரையே இழந்து போகிறது.

ஆத்துமத்தின் காரியத்திலும் இதுதான் நிகழ்கிறது. "சகலமும் ஆண்டவராலும், அவரைக் கொண்டும் அவரிலும் உண்டாயிருக்கிறது" (உரோ. 11:36) என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். நாம் இருப்பதும், இயங்குவதும், ஜீவிப்பதும் அவரிலேதான். 

சூரிய ஒளியின் பிரசன்னத்திலிருந்து பூமி ஒருபோதும் விலக முடியாதது போல, ஆத்துமம் கடவுளின் பிரசன்னத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது. அது அவரையே தன் தொடக்கமாகவும், இறுதிக்கதியாகவும் கொண்டுள்ளது, அவராலேயே சுவாசிக்கிறது, அவராலேயே ஜீவிக்கிறது. எனினும் பரிதாபத்திற்குரிய முறையில், மனிதன் இந்த மாபெரும் உண்மையைப் பெரும்பாலும் நினைப்பதில்லை.

மீனானது நீரிலிருந்து விலக்கப்படுவது போல, சாவான பாவத்தோடு மரித்து, நரகத்திற்குத் தீர்வையிடப்படுகிற ஓர் ஆத்துமம் ஒரு விதத்தில் தேவ பிரசன்னத்திலிருந்து விலக்கப் படுகிறது என்று சொல்லலாம். சுடுமண்ணில் கிடக்கும் மீன், அந்தச் சூட்டின் வேதனையை விட, பிராணவாயு விலக்கப் பட்ட வேதனையை அதிகமாக உணர்வது போல, கொடிய நெருப்புக்கு மத்தியிலும் ஆத்துமம் தான் இழந்துபோன கடவுளின் பிரசன்னத்திற்காகவே அதிகமாக ஏங்கித் தவித்துச் சோர்ந்து போகிறது. எப்படியாவது தன் ஏக கதியாக இருந்த அவரை அடையத் துடிக்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், நாம் ஏற்கனவே சொன்னது போல, அந்த ஆத்துமத்தின் பாவமானது அதற்கும் சர்வேசுரனுக்கும் நடுவில் கடக்கப்பட முடியாத ஒரு பெருஞ்சுவராக நின்று அந்த ஆத்துமத்தை அவரிடமிருந்து பிரித்து விடுகிறது.

“உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே ஒரு பெரும் பாதாளம் ஸ்திரமாய் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இங்கேயிருந்து அங்கே வரவும், அங்கேயிருந்து இங்கே வரவும் மனதிருந்தாலும், கூடாததாயிருக்கிறது” (லூக்.16:26) என்று ஆபிரகாம் சொல்வது பாவமாகிய பாதாளத்தைப் பற்றியே.

தமது “தியானங்கள்” என்னும் நூலில், அர்ச். கேண்ட்டர்பரி ஆன்செல்ம் தீர்ப்புக்காக தெய்வீக நடுவரின் முன்பாக நிற்கிற ஒரு பாவியின் வாய்மொழியாகக் கூறுவதைக் கேளுங்கள்: 

“நான் சபிக்கப்பட்டவன்! நான் சபிக்கப்பட்டவன்! யாருக்கு எதிராக நான் பாவம் செய்திருக்கிறேன்? ஓ நான் கடவுளையே அவசங்கை செய்து விட்டேன், சர்வ வல்லபரின் கடுங்கோபத்தைத் தூண்டினேன். நீசப் பாவியாகிய நான் என்ன செய்து விட்டேன்! யாருக்கு எதிராக நான் இதைச் செய்தேன்! எவ்வளவு கொடுமையான முறையில் இதைச் செய்திருக்கிறேன். ஐயோ, ஐயோ! சர்வ வல்லபரின் கடுஞ் சினமே, என் மீது விழாதே! சர்வ வல்லபரின் கடுஞ்சினமே, உன்னை நான் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? உன் பாரத்தைத் தாங்கக்கூடிய எதுவும் என்னில் இல்லையே! இங்கே, பாவங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அங்கே, நீதியோ அகோரமாயிருக்கிறது! கீழே நரகம் என்னை விழுங்கத் தன் வாயை அகலத் திறந்திருக்கிறது; மேலேயோ கோபமுள்ள நித்திய நடுவர் இருக்கிறார்; எனக்குள், சுட்டெரிக்கிற மனசாட்சி; என்னைச் சுற்றிலுமோ, நெருப்பாய்த் தகிக்கிற பிரபஞ்சம்! இப்படி சிக்கிக் கொண்டிருக்கிற பாவி எங்கே பறந்தோடிப் போவான்? இறுகக் கட்டப்பட்டிருக்கிற நான் எங்கே பதுங்கி ஒளிந்து கொள்வேன்? எப்படி என் முகத்தை மறைத்துக் கொள்வேன்? ஒளிந்து கொள்ள வாய்ப்பேயில்லை, வெளிக்குத் தோன்றுவதோதாங்க முடியாததாயிருக்கிறது; நான் ஏங்கித் தேடுவது எங்கேயும் காணப்படவில்லை. நான் அருவருக்கிற காரியமோ, எல்லா இடங்களிலும் இருக்கிறது! இனி என்ன ஆகும்? பயங்கரத்துக்குரிய இந்த உன்னத தேவனின் கரங்களிலிருந்து என்னை விடுவிப்பவன் யார்?"